திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்?: மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை:

தமிழக மக்களின் வெள்ள துயரத்திற்கு அதிமுக.,வும், திமுக.,வும் தான் காரணம்; ஆக்கிரமிப்புகள் குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:-

திமுக., தலைவர் கருணாநிதி 18-12-2015 அன்று பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில், ‘‘தற்போதைய மழைநீர் வெள்ள பிரச்சினைக்கு ஒரு சிலர் திமுக., ஆட்சியையும் சேர்த்து குறை சொல்கிறார்களே?, குறிப்பாக ‘‘நால்வர் அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே’’ என்று கேள்வி எழுப்பி அதற்கு ‘‘அதிமுக., அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், திமுக.,வை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே அதிமுக.,வை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உள்நோக்கமும், கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து வருகிறது“ என்று பதிலும் சொல்லியிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற்றுள்ள மக்கள்நல கூட்டணியை, நால்வர் அணி என்று கூறியிருப்பதன் மூலம், திமுக., விரும்புகிற மாதிரி ஒரு கூட்டணியை அமைக்க முடியாது போய்விட்டதன் விரக்தி வெளிப்பட்டிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து 10-12-2015 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட அறிக்கையில், இந்த அரசாங்கத்தின் மீது கிரிமினல் நெக்லிஜென்ஸ் என்று குற்றம்சாட்டியது. முதல்-அமைச்சர்தான் ஏற்பட்ட பேரிடருக்கும், உயிரிழப்பிற்கும், பெரும் பொருள் இழப்பிற்கும், மக்களின் நீங்காத பயத்திற்கும் பொறுப்பு என்று நேரிடையாக விமர்சனம் வைத்தது. அதன் பிறகுதான் திமுக.,வே கூட அத்தகைய நிலைபாட்டை எடுத்தது.

அதைத் தொடர்ந்து அதிமுக., அரசாங்கம் பதவி விலக வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், அங்கம் வகிக்கும் மக்கள் நலக்கூட்டணியும் வலியுறுத்தியது. இதுவெல்லாம் ‘‘அதிமுக., அரசை நேரிடையாக விமர்சிக்க அஞ்சுபவர்கள்“ எடுத்த நிலைபாடு என்று கருணாநிதியால் கூறமுடியுமா?.

திமுக., ஆட்சியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகாரத்தில் இருந்தோரால் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அவரால் மறுக்க முடியாது. எனவே வெள்ளத்தின் பாதிப்பை குறைக்க தவறியது அதிமுக., அரசின் உடனடி குற்றம். ஆக்கிரமிப்புகளை அனுமதித்ததும், நீர்நிலைகளும், புறம்போக்குகளும், பெருநிறுவனங்களுக்காக பட்டா கொடுக்கப்பட்டதும் 2 ஆட்சியிலும் நடந்த கடுமையான குற்றங்கள். இவையெல்லாம் திமுக., ஆட்சியில் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா?. எனவேதான் கருணாநிதி அவருடைய அறிக்கையில் ஆக்கிரமிப்புகள் பற்றி பேச மறுக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புவது தமிழக மக்களின் இந்த துயரங்களுக்கு, வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு அதிமுக., உடனடி காரணம், அதிமுக.,வும், திமுக.,வும் தொடர்ச்சியான காரணம்.

கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பல கேள்விகளை பல்வேறு நேரங்களில் முன்வைத்திருக்கிறது. சேஷசமுத்திரம் தலித் மக்கள் குடிசைகளும், கோவில் தேரும் எரிக்கப்பட்ட போது கருணாநிதியும், திமுக.,வும் கண்டிக்காதது ஏன்? என்று கேட்டிருக்கிறோம். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடைபெறவில்லை என்று அரசு சொல்லும் போது அதை மறுத்து கூறாமல் இன்று வரையிலும் திமுக., மவுனம் காப்பது ஏன்? என்று கேட்டிருக்கிறோம். ஆற்று மணலும், தாது மணலும் திருடியவர்கள் மீது இந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, முன்பிருந்த திமுக., அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறோம்.

மேலும், கிரானைட் முறைகேடு கடந்த 20 ஆண்டுகளாக நடந்துள்ளது என்றும் இதனால் அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆண்டு காலம் என்பதில் திமுக., ஆட்சியும் உண்டு. இந்த கேள்விகளுக்கும் கருணாநிதி மவுனம் சாதிப்பது ஏன் என்று கேட்டிருந்தோம். கருணாநிதி மவுனம் கலைத்து கருத்து கூறுவார் என்று நம்புகிறோம்.