அண்மைக்காலமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களின் மேடைகளிலும், நாளிதழ்கள், இதழ்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும், ஊடகங்களின் பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கணீர் குரலில் தலை காட்டி, தனது எண்ணங்களை எடுத்து வைத்து மக்கள் மனத்தில் ஓர் இடம் பிடித்து வந்தார் நடிகர் சிவகுமார்.
என்றும் மார்கண்டேயன் என்றும் மார்கண்டேய நடிகர் என்றும் சில இதழ்களில் கிசுகிசுவுக்கான அடையாளப் பெயரால் அழைக்கப் பட்ட சிவகுமார், இளமைப் பொலிவு மாறாமல் இன்றளவும் தன் குரல் வளத்தாலும் தோற்றத்தாலும் கவர்ந்ததுடன், மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகளையும் மேடைகளில் பேசி வந்தார்.
ஆனால், திடீரென இவரது தடம் மாறிவிட்டது போல் தோற்றம் தந்தது. கடந்த ஓரிரு வருடங்களாக, அரசியல் ரீதியான கருத்தை முன்வைப்பதும், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் சில கருத்துகளை ஊடகங்களில் முன்வைத்தார்.
அவற்றின் உச்சமாக சபரிமலை குறித்து அவர் சொன்ன விளக்கங்கள் சமூக ஊடகங்களில் பலராலும் கடித்துக் குதறப்பட்டன. இந்நிலையில்தான், செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் மொபைலைத் தட்டிவிட்ட சிவக்குமாரை நேற்று கொத்துகறி போட்டு காய்ச்சு எடுத்தார்கள் சமூக ஊடகங்களில்!
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வைப் பற்றி அறிந்த ரசிகர்கள் நடிகர் சிவக்குமாரைக் காண, பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். திறப்பு விழாவுக்காக உள்ளே சிரித்த முகமாக வந்தார் சிவக்குமார்.
அங்கு ஒரு ரசிகர் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைக் கண்டதும், திடீரென அவரது மொபைலை தட்டிவிட்டார். இந்த வீடியோ காலையில் இருந்து இணையம் எங்கும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதனிடையே தனது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதால், அதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார் சிவகுமார். அதில், பெருவாரியான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக தாம் மன்னிப்பு கேட்பதாகக் கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்து இப்போது பலத்த விமர்சனத்தை எதிர்நோக்கி வருகிறது.
பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்கிறார். பெருவாரியான மக்கள் அப்படி நினைக்காவிட்டால் வருத்தம் தெரிவிக்க மாட்டாரா? வருத்தம் தெரிவித்த விதமே அநாகரிகம் தான் என்று வரிந்து கட்டுகிறார்கள். அதுவும் மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக!
ஆனால் இவர் தினமும் மேடைகளில் மற்றவருக்கு உபதேசிப்பது, நீ உனக்காக வாழு! மற்றவருக்காக வாழாதே! என்பதுதான். ஆனால், இப்போது மற்றவர்கள் தவறென நினைப்பதால் தாம் வருத்தப் படுவதாக ஒரு வாக்குமூலம்! சொல்லுக்கும் செயலுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டு கிண்டல் செய்கிறார்கள் சமூக ஊடகங்களில்!
இதை மற்றவர்கள் சொன்னால் பரவாயில்லை! நடிப்பு, ரசிகர்கள் ஆதரவில் வளர்ந்த இவர்கள் செல்பி எடுப்பது பிடிக்கவில்லை என்றால் , தம்பி செல்பி எடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம்! இவர் போகும் இடமெல்லாம் அதுதான் உபதேசிக்கிறார்.
ஆனால், அவ்வாறு செய்யாமல், ஒரு இளைஞனின் செல்போனை மட்டுமல்ல, அவன் ஆசையையும் நம்பிக்கையையும் சேர்த்து
தட்டி விட்டது மிகத் தவறு!முதலில் சால்ஜாப்பு சொனார்.பிறகு இப்போது மற்றவர்கள் வருத்தப் படுகிறார்கள் என்பதற்காக தாம் வருத்தம் தெரிவித்தல் என்பது, ஒரு ஏமாற்று வேலை. நடிப்புதான்! என்று கூறுகின்றனர் சிலர்.
Yes