தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழுமையான ஆதரவளிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை வந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு வந்திருந்த சந்திரபாபு நாயுடு, வழக்கம் போல், ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து, அவர் கையில் விஷ்ணு சிலை ஒன்றை பரிசாக அளித்தார். ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.




