அரசியல் வாதிகளுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போகிறதா ?

 
 
அரசியல்வாதிகளின் அட்டகாசத்தை தாங்கமுடியாத அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் பலர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர் சங்க முன்னோடிகளான, ஓய்வுபெற்ற, நேர்மையான, திறமைவாய்ந்த அரசு அதிகாரிகளை வரும் தேர்தலில் களமிறக்கி அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க ரகசிய திட்டம் போட்டு பேசி வருவதாக பரவலாக கூறப்படுகிறது.
 
ஆண்ட, ஆண்டுகொண்டுள்ள கட்சிகளின்மேல்மக்களுக்குள்ள வெறுப்பை பயன்படுத்தி சிறிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒருபுறம் கூட்டுசேர, அரசியலில் மாற்றத்தை உருவாக்க சிந்திக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2016- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ். முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் எனத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி, “எங்களின் முதல்வர் சகாயம்” என்ற கோஷத்துடன் பேரணி நடத்த, மககள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு உழைக்கும் அனுபவம் வாய்ந்த திறமைசாலிகள் வர மாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அரசு ஊழியர் சங்க முன்னோடிகளான, ஓய்வுபெற்ற, நேர்மையான, திறமைவாய்ந்த அரசு அதிகாரிகளை வரும் தேர்தலில் களமிறக்க அரசு ஊழியர் சங்கங்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது.
 
இப்போதைய வெள்ளம் தமிழகத்தில் மனிதம் இன்னும் சாகவில்லை என்ற மகிழ்ச்சியோடு, இதுவரை ஆண்ட, ஆண்டு கொண்டுள்ள கரைவேட்டிகளின் கையாலாகாத்தனத்தை தோலுரித்து காட்டியதோடு, தமிழ்நாட்டு வளத்தைச் சுரண்டியதோடல்லாமல், பேரிடர் சமயங்களில் முன்யோசனையின்றி, செயலாற்றும் திறனற்ற, விளம்பரப் பிரியர்களான அறிவிலிகளையும் அடையாளம் காட்டியுள்ளது.
தன்னார்வலர்கள் செய்த நிவாரணப் பணிகளைக் கூடத் தடுத்து, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்த இவர்களைக் கண்டு மனம் வெறுத்த இளைய தலைமுறையினர் சகாயம் போன்றவர்களை அரசியலுக்கு வரச்சொல்லி பேரணி நடத்துகிறார்கள்.
 
அதேபோல், அனுபவமற்ற கரைவேட்டிகளின் வெற்று அதிகாரத்திற்கு பயந்து மனசாட்சியுடன் வேலை செய்ய முடியாமல் தவித்துக் கொண்டுள் அரசு ஊழியர் சங்கங்கள், அச்சங்கங்களின் முன்னோடிகளான, நேர்மையான, திறமைவாய்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை இம்முறை தேர்தலில் களமிறங்க வைக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
 
இதன்மூலம் ஒவ்வொரு துறையைப் பற்றியும் அறிந்துள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டால் அத்துறைகளை முன்னேற்றமடையச் செய்வதோடு மக்களுக்குத் தேவையான பணிகளை ஊக்கத்துடன் இப்போதுள்ள அரசு ஊழியர்கள்செய்ய முடியும் என அரசு ஊழியர் சங்கங்கள் யோசிக்கின்றனவாம்.
 
ஒவ்வொரு அரசு ஊழியருககும் உள்ள குடும்பம், உறவு, நட்பு போன்றவற்றை கணக்கிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், கட்சி சார்புள்ள சங்கங்கள்கூட இதன்மூலம் தங்களுக்கு நன்மையே என உணர்ந்து கொண்டதால் அவையும் கைகோர்க்கும் எனவும், மேலும் இதன்மூலம், அனைத்து துறைகளிலும் புரையோடியுள்ள லஞ்ச, லாவண்யத்தை ஒழித்து, தற்போது மேலிருந்து கீழ்வரை உள்ள அமைச்சர்கள், இடைத் தரகர்கள் போனறோருக்கு கமிஷன் தரவே முக்கால் பங்கு நிதி போவதைத் தடுத்து, கையூட்டை ஒழித்து நேர்மையான, வெளிப்படையான ஒப்பந்தங்களின்மூலம் பல்வேறு நலத் திட்டங்களையும் செம்மையாக செய்ய முடியும் என்றும் அரசு ஊழியர் சங்கங்கள் ஆலோசித்து வருவதாக பரவலாக கூறப்படுகிறது.