தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்குக் கோவையில் இருந்து ரூ 40 லட்சம் மதிப்புடைய தேங்காய் எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்தது லாரி ஒன்று. தர்மபுரி அடுத்துள்ள தொப்பூர் மேட்டை லாரி கடக்கும்போது டயர் வெடித்து திடீரென தீப்பிடித்தது. இதனால் லாரி ஓட்டுநர் சங்கர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.
அப்போது, பெங்களூருவை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு கேஸ் டேங்கர் லாரி எரிந்துகொண்டிருந்த எண்ணெய் லாரி மீது மோதி நின்றது. இதில் தீ நான்கு வாகனங்களுக்கும் பரவியது. கேஸ் லாரி காலியாகஇருந்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில்,40 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் எண்ணெய்யைக் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் லாரியில் இருந்து முக்கால் பாகம் இறக்கிவிட்டு, கால் பங்கு தேங்காய் எண்ணெய்யுடன் லாரியை ஏரித்துள்ளதை சேலம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
லாரியில் திருடி பதுக்கி வைக்கப்பட்ட முக்கால் பங்கு தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய, சேலம் மார்க்கெட்டிற்குகொண்டு சென்றபோது லாரி டிரைவர் சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் சேலம் மாவட்டபோலீசார் விசாரணை நடத்தியபோது தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு போட்டுக் கொடுத்த திட்டபடி தேங்காய் எண்ணெய்யை முக்கால் பங்கு பதுக்கி வைத்துவிட்டு, கால் பங்கு எண்ணெய்யுடன் லாரியை எரித்துவிட்டாம். அதற்காக தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுக்கு 5 லட்ச ரூபாய் பேசி, அட்வான்ஸ் 50 ஆயிரம் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தத் தகவல் தர்மபுரி எஸ்.பி பண்டித் கங்காதருக்கு தெரிய வரவும், தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை தர்மபுரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்தச் சம்பவம் தர்மபுரி மாவட்ட போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.