தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியா ?

 
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடவே விரும்புகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது :-
எனினும் தேர்தல் நேரத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மக்கள் ஆதரவுடன் நல்ல ஆட்சி அமையும். செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தான் காரணம் என்பது போல முதலமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். இது அப்பட்டமான பொய்.
இந்த ஏரி திறக்கப்பட்டதால் ஏராளமான பேர் இறந்து உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டனர். எனவே செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடக்கும் என்று தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே மத்திய அரசு குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் காட்டு பன்றி மற்றும் மயில்களால் விவசாய பயிர்கள் நாசம் ஆகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2004–ம் ஆண்டு விவசாயிகள் கடன் முழுவதையும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. இதுபோல போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
விஜயகாந்த் – ஊடக துறை யினர் இடையே நடந்த முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே இது தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. விஜயகாந்த் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியானது அல்ல.
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவே காங்கிரஸ் கட்சி விரும்பிகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி நடத்துவோம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் மத்திய அமைச்சர்அருண்ஜெட்லி போன்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினால் போதாது. இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிபேசினார்.
திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், அதில் காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என கருணாநிதி கூறியிருந்த நிலையில், இளங்கோவனின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.