
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி தெய்வங்களின் முன் உறுதிமொழி எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை பணியில் சேரும் முன் சட்டப்படி உறுதிமொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரிய மனுவில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் அத்துறையின் ஆணையர் மற்றும் பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன்பு தெய்வத்தின் முன்னிலையில், தாம் இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தைத் தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சட்டப் பிரிவின் படி தற்போதுள்ள அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்கவில்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன், அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரி சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி, தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் நவம்பர் 28ம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையில், கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், கிறிப்டோ கிறிஸ்துவர்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, இதற்காக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா ஒரு போராட்டமே நடத்தினார். ஆனால் அவருக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் கோயில்களுக்கு வெளியே வந்து வேலை நிறுத்தம், போராட்டங்களில் ஈடுபட்டனர்.



