முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து ஸ்டிக்கர் அரசாங்கம் நடத்துவதாக விஜயகாந்த் குற்றசாட்டு!

 
தமிழக பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வைகயில் சாலைகளில் பிளக்ஸ் போர்டுகளை வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்து ஸ்டிக்கர் அரசாங்கம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
மழைவெள்ளத்தால் சென்னை மாநகரமே சிக்கித்தவித்து, பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுகூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
ஒரு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு குறிப்பிட்ட காலத்தில் நடத்தவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் சட்ட விதியாகும். ஆனால் மழை வெள்ளத்தால் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டு, நொந்து நூலாகிப்போயுள்ள சென்னை வாழ் மக்கள் மத்தியில் மிகுந்த ஆடம்பரத்துடனும், வெகு விமரிசையாகவும் இதை நடத்தலாமா?
 
ஜெயலலிதா செல்கிறார் என்றால் அவர் செல்லும் வழியெங்கும் புயல் வேகத்தில் சாலை போடப்படுகிறது. ஆனால், சாமான்ய மக்களுக்காக எந்தப் பணியும் நடப்பதில்லையே!
 
இதைக்கூறினால் அதிமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பேருந்தில் பயணம் செய்து மிக எளிமையாக வந்தார்கள் என கதை பேசுவார்கள். அனைத்து அமைச்சர்களுமா பேருந்தில் வந்தார்கள்? முதலமைச்சர் ஜெயலலிதாவும் பேருந்திலா வந்தார்? ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தானே பவனி வந்தார்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகிறார் என்பதற்காக, வரும் வழியெங்கும் இடைவெளியே இல்லாமல் மிக பிரம்மாண்டமான பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். அதை வைப்பதற்கு தடையாக இருந்த மரங்களையெல்லாம் வெட்டியுள்ளனர். நடைபாதையை அடைத்தும், அதில் பள்ளம் தோண்டியும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வந்து சென்ற சாலைகள் மட்டும் புதியதாக போடப்பட்டு பளபளவென காட்சியளிக்கின்றன. முதலமைச்சர் ஜெயலலிதா சென்ற வழியிலுள்ள மத்திய கைலாஷ் பகுதி சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, கடந்த 20 நாட்களாக மூடப்படாமல் அப்படியே இருந்தது. ஆனால் முதலமைச்சர் அவ்வழியே சென்றதால் அவசர அவசரமாக அது சரி செய்யப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா, இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சாலை வழியாக நேரடியாக சென்றிருந்தால், அவர் செல்லும் வழியெங்கும் சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? முதலமைச்சர் நேரடியாக செல்லும்போது மக்களுக்கான நிவாரணப்பணிகளும் விரைந்து நடைபெற்றிருக்கும் அல்லவா? இதைத்தானே தமிழக மக்கள் முதலமைச்சரிடம் எதிர்பார்க்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா என்கின்ற தனி நபருக்காக புயல் வேகத்தில் நடக்கும் பணிகள், சாதாரண சாமான்ய மக்களுக்காக நடக்காதா?
சென்னையில் பல சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஸ்டிக்கர் அரசாங்கத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா, மூன்று மணிநேரம் நடைபெறும் தங்கள் கட்சி நிகழ்ச்சிக்காக, மக்களின் வரிப்பணம் பல கோடிகளை வாரி இறைத்து செலவிடும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இதுபோன்று செலவிட்டு விரைந்து சீரமைக்கலாமே? முதலமைச்சர் செல்வதற்காக வரிந்து கட்டிக்கொண்டு இரவு பகலாக பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் அதே வேகத்தில் மக்களுக்காக பணியாற்ற தயங்குவது ஏன்? மக்களின் வரிப்பணத்தில் தானே அவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது.
 
ஒருபுறம் பேரழிவிற்கு காரணமாக இருந்துவிட்டு மறுபுறம் மக்களால் நான், மக்களுக்காக நான், நான் உங்களோடு இருக்கிறேன், உங்கள் துயரங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்றெல்லாம் வாட்ஸ்ஆப்பில் பிதற்றிவிட்டு, மக்களின் இன்னல்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், ஆணவப்போக்கோடு தனது கட்சிக்காகவும், தன்னுடைய சுயநலத்திற்காகவும் அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும். முதலமைச்சரின் முடங்கிப்போயுள்ள நிர்வாகத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும், ஆட்சியின் முறைகேடுகளுக்கும் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.