புது தில்லி,
தில்லியில் மீண்டும் மை வீச்சு நாடகம் அரங்கேறியது. இதற்கு பாஜக சதியே காரணம் என வழக்கம்போல் குற்றம் சாட்டினார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். கார்கள் ஓட்ட கட்டுப்பாடு விதித்த திட்டத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது பெண ஒருவர் மை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தில்லியில், வாகனங்களின் பெருக்கத்தால் காற்று மாசுபாடு அதிகரித்து விட்டது. எனவே, மாசுபாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை தில்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ஒற்றைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும், இரட்டைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும் வேறு வேறு நாட்களில் இயக்கப்படுவதுதான் அந்த திட்டம். அத்திட்டத்தை பரீட்சார்த்தமாக 15 நாட்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த 1–ந் தேதி தொடங்கி, 15–ந் தேதி வரை திட்டம் அமலில் இருந்தது. இதனால் காற்று மாசுபாடும் குறைந்தது என்று கூறப்படுகிறது.
அந்த திட்டத்தின் வெற்றிக்காக தில்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி நேற்று நடத்தியது. சாத்ரசால் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய், தில்லி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இருப்பினும், அந்தக் கூட்டத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் பேசத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், போலீஸ் தடுப்புகளை மீறி திடீரென எழுந்து சென்று அரவிந்த் கேஜ்ரிவாலை நெருங்கி, அவர் மீது மை வீசினார். சில காகிதங்களையும் விசிறி அடித்தார்.
இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்தப் பெண்ணைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வந்தனர். விசாரணையில், அந்தப் பெண், தான் ‘ஆம் ஆத்மி சேனா’வைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி அதிருப்தியாளர்களால் துவக்கப்பட்ட அமைப்பு இது. அவர் ஒரு பஞ்சாபிப் பெண் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு வழக்கம்போல், பாஜக.,வின் சதி காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.



