சென்னை:
கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.), பொது செயல்திறன் (சி.பி.டி.) தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், சென்னை மாணவர் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்து நேரடியாக சி.ஏ. படிப்போர் சி.பி.டி. தேர்வை எழுத வேண்டும். இதில், தேர்ச்சி பெறுவோர் இடைநிலைத் தேர்வுகளான (ஐ.பி.சி.) குரூப்-1, குரூப்-2 தேர்வுகளை முடித்து, சி.ஏ. இறுதித் தேர்வை எழுதலாம். பட்டப் படிப்பை முடித்தோர் இடைநிலைத் தேர்வுகளை எழுதிமுடித்து, சி.ஏ. இறுதித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
2015-ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட சி.ஏ. தேர்வு, டிசம்பரில் நடத்தப்பட்ட சி.பி.டி. தேர்வு முடிவுகளை ஐ.சி.ஏ.ஐ., ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. நாடு முழுவதும் இருந்து தேர்வு எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், குரூப்-1 தேர்வை எழுதிய 77,442 பேரில் 9,764 பேரும், குரூப்-2 தேர்வை எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் சி.பி.டி. தேர்வு எழுதிய 99,077 பேரில் 34,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.ஏ. இறுதித் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ 800-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினாஷ் சஞ்செட்டி 566 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.



