சென்னை:
கட் அவுட் கலாசாரம் மக்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக.,வினர் கட்-அவுட்டுகளை வைக்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைமை அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
அதிமுகவின் பொதுக்குழுவையொட்டி, அந்தக் கட்சியினர் வைத்த கட்-அவுட்டுகள், விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்தது. அந்தக் கட்சியிலாவது இதுபோன்ற கட்-அவுட்டுகளை அதிமுகவின் பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வைப்பதுடன் நிறுத்திவிடுகின்றனர்.
ஆனால், திமுகவில் உள்ள சிலர் தங்கள் கட்-அவுட்டுகளை, பேனர்களை வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருகின்றனர். இது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பை திமுகவுக்கு உண்டாக்கும்.
ஏற்கெனவே, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் ஆகியோருடைய உருவப் படங்களைத் தவிர, வேறு யாருடைய உருவப் படங்களையும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும்போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது. அண்மைக் காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் அதிமுகவுடன் திமுகவை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகிவிடும்’ என்ற பழமொழியை யாரும் மறந்துவிடக் கூடாது. எனவே, இந்தப் போக்கை திமுகவினர் உடனடியாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது



