கோவையில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் குடும்பத்தைக் துப்பாக்கி முனையில் கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை சுண்டக்காமுத்தூர் எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த அருள்குமரன் என்பவர் நகைக்கடைகளுக்கு தங்கம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருள்குமரன், அவரது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரையும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தினர். பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அடைத்து வைத்து 1 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கக் கட்டிகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த டி.தம்பிராஜ், அந்தோணி, பரமசிவம் ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர். பாஸ்கர், ஜான்சன், மகாராஜன் ஆகியோரை தேடி வருகின்றனர். 2 துப்பாக்கி, 32 தோட்டாக்கள், கத்தி, கார், 60 பவுன், ரூ.10,740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரைப் பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.



