திருவனந்தபுரம்:
சபரிமலை கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் மகர விளக்கு ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஐயப்பனைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்து, தற்போது படி பூஜைகள் நடந்து வருகின்றன . நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வல்லபன் என்ற யானையை அலங்கரித்து நிறுத்தி இருந்தனர். அந்த நேரத்தில் டிராக்டர் ஒன்று அதிக சத்தத்துடன் வந்தது. அதன் சத்தத்தைக் கேட்டதும் யானை திடீரென மிரண்டு ஓட்டம் பிடித்தது. யானை பாகன் அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் அவரால் இயலவில்லை.
இந்நிலையில், யானை சன்னிதானத்தில் தறிகெட்டு ஓடியது. யானை மிரண்டு ஓடியதைக் கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த இலகுமன்பாறையைச் சேர்ந்த மூதாட்டி பேபி (68) என்பவரை யானை மிதித்து, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி , திருச்சூரைச் சேர்ந்த இருமோன்(44) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த ஆண்டு இந்த யானைக்கு மதம் பிடித்ததால் இந்த ஆண்டு சன்னிதானத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் எச்சரித்திருந்தும் யானையை அழைத்து வந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.



