சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 9.30 மணிக்கு அபுதாபியிலிருந்து ஒரு விமானத்தில் வந்து இறங்கிய ரஷ்யாவைச் சேர்ந்த பாதிரியார் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.பாதிரியார் சேராபிஹிம், இந்திய குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பல மணி நேர விசாரணைக்குப் பின்பு இரவு 10 மணிக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தில்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளதாவது :-
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாதிரியார் சேராபிஹிம் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. மேலும், அவரை சந்தித்து பேசுவதற்கு ரஷ்ய அதிகாரிகளும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், பாதிரியாருக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு உள்ளிட்டவை வழங்குவதற்கு ரஷ்ய தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இது இந்தியா ரஷ்யா இடையே உள்ள பரஸ்பர உறவுக்கு எதிராகும் என்று கூறப்பட்டுள்ளது.



