சென்னை:
லோக் அயுக்தா சட்டம், முழு மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்,.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் 14-ஆவது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஆளுனர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது. பேரவைத் தலைவர் தொடங்கி ஆளுனர் வரை ஜெயலலிதாவை புகழப்போவதைத் தவிர ஆக்கப்பூர்வமாக வேறு எதுவும் இக்கூட்டத் தொடரில் நடைபெறப் போவதில்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் நினைத்தால் கடந்த 5 ஆண்டுகளாக செய்த பாவங்களுக்கு பரிகாரமாக சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு, சில சிறந்த சட்டங்களை இயற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
2011&ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மக்கள் நன்மைக்காக செயல்படுத்திய திட்டம் என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ள ஒன்று கூட இல்லாதது மிகப்பெரிய சோகம் தான். ஆனால், மக்களை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். குறிப்பாக ஊழலும், மதுவும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களை பாடாய்படுத்தி உருக்குலைத்து விட்டன. சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் தொடங்கி நியாயவிலைக் கடைகளுக்கு துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளை கொள்முதல் செய்வது, தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, கிரானைட், ஆற்று மணல் மற்றும் தாதுமணல் குவாரிகளை அனுமதிப்பது வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதுவரை அதன் மீது விசாரணை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஊழல்கள் மட்டும் தடையின்றி தொடர்கின்றன.
மற்றொரு பக்கம் மது மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வதன் மூலம் மக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டே இருக்கிறது. 5 ஆண்டுகளில் அரசு மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட மது வகைகளின் மதிப்பு சுமார் ரூ.1.90 லட்சம் கோடி ஆகும். இதில் அரசுக்கு வரி வருவாயாக கிடைத்த ரூ.1.20 லட்சம் கோடி தவிர மீதமுள்ள ரூ.70 ஆயிரம் கோடி அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் நடத்தும் மது ஆலைகளுக்குத் தான் வருமானமாக கிடைத்திருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்பது மிகப்பெரிய அவமானமாகும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா அரசு கவலைப்படவில்லை. அனைத்து விதிமுறைகளையும் மீறி தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறப்பது, 4 வயது குழந்தைக்கு கூட மது புகட்டப்படுவதற்கு காரணமாக இருப்பது என அனைத்து சீரழிவுகளுக்கும் தமிழக அரசு உற்ற துணையாக இருக்கிறது.
தமிழகத்தின் மிக மோசமான இந்த இரு தீமைகளையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி, தொடங்கப்பட்ட நாளில் இருந்தே போராடி வருகிறது. இரு தீமைகளையும் ஒழிப்பதற்கான செயல்திட்டங்களையும் பா.ம.க. வகுத்துத் தந்திருக்கிறது. ஆனால், இந்த தீமைகளை ஒழிப்பதை விட வளர்ப்பதில் தான் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக 20 மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லோக்அயுக்தா ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அத்தகைய லோக்அயுக்தா ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல், கேரளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதலும், பிகாரில் வரும் ஏப்ரல் முதலும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.
எந்த தவறு செய்தவர்களுக்கும் பாவமன்னிப்பு உண்டு என்பதைப் போல ஊழலுக்கும், மதுவுக்கும் துணை போன அ.தி.மு.க. அரசு அந்த பாவத்திலிருந்து விடுபட்டு பரிகாரம் தேடிக்கொள்ள கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த இரு தீமைகளையும் நிரந்தரமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் அந்த பரிகாரம் ஆகும். அதன்படி, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்; இதே கூட்டத்தொடரில் லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பதவியிலிருந்து விலகும் போது பாவத்தின் சுமையில் ஓரளவையாவது இறக்கி வைத்துவிட்டு செல்லலாம். இல்லாவிட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி விரட்டியடிக்கப்படுவது உறுதியாகிவிடும்.
ஒருவேளை இந்த ஆட்சியில் மது விலக்கு அறிவிப்பும், லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும் சாத்தியமாகவில்லை என்றால், இவற்றை பா.ம.க. சாத்தியமாக்கும். ஏற்கனவே உறுதியளித்தவாறு பா.ம.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காகவும், முதல் சட்டம் ஊழல் ஒழிப்புக்கான லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்காகவும் தான் இருக்கும் என்பதுஉறுதி!



