சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மறு சீராய்வு மனுவை ஏற்று, சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் என்றும் கோரி தெருமுனைப் பிரசாரங்களை இன்று மாலை தமிழகம் முழுதும் பரவலாக நடத்தியது இந்து முன்னணி.
மேலும், மாநில நிர்வாகிகள் எவராவது தாக்கப் பட்டால் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டால், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கடந்த வருடம் இந்துமுன்னணி முடிவு செய்தது. அதன்படி, ராமநாதபுரத்தில் இந்து முன்னணி முனியசாமி நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் போலீஸ் அராஜகத்தைக் கண்டித்தும், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழனிவேல் சாமி மற்றும் நிர்வாகிகள் மீது ராமநாதபுரம் காவல்துறை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அத்துமீறி தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
ஒரே நாளில், இந்து முன்னணியினர் சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுவை ஏற்கக் கோரி தெருமுனை விழிப்பு உணர்வு பிரசாரங்களும், ராமநாதபுரம் இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள், இந்து முன்னணியினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி பி.ஜெயக்குமார் தலைமையில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பாம்பே ஸ்டோர் முனையில் இன்று இரவு 7 மணிக்கு சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு கோரி தெருமுனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், புதுச்சேரியில் பஸ்மறியல் போராட்டம் நடைபெற்றது.



