
வேல்முருகன், சுப வீரபாண்டியன், முருகன் காந்தி இவர்கள் எல்லாம் லயோலா கல்லூரியின் வாடகைத் தலைவர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார்.
இது குறித்து அவர் தெரிவித்தவை…

கடந்த ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு தினங்கள் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி வருது என்கின்ற பெயரில் நடைபெற்ற நாட்டுப்புற கலை இலக்கியப் பெருவிழா, அதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற படக் கண்காட்சியில் சர்ச்சைக்குரிய பல்வேறு கருத்துகளை ஓவியங்களாக தீட்டி பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, பின்னர் கடுமையான எதிர்ப்புக்கு பிறகு லயோலா கல்லூரி நிர்வாகத்தில் வேலை செய்யும் இந்த நாட்டுப்புற கலை பிரிவு துறைத்தலைவர் காளீஸ்வரன் என்பவர் பெயரில் கையெழுத்திடாத ஒரு அறிக்கையை வெளியிட்டு வருத்தம் தெரிவிப்பதாக ஒரு அறிவிப்பு வந்தது.
இதனை தொடர்ந்து கருத்துரிமைக் காவலர்கள் போல தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சுப வீரபாண்டியன், மே 17 இயக்கத்தின் பொறுப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர்
லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக, இந்த நிகழ்ச்சியை நடத்திய தேச விரோத, இந்துமத எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள் .
மாநாட்டில் கூறியதுபோல தமிழ்நாட்டில் ஒரு கருத்துரிமை யுத்த களத்திற்கு நாங்கள் தயார் என்பது போலவே இவர்களது அறிக்கை இருக்கிறது.
வேல்முருகன் இந்து என்பது ஒரு பொதுச்சொல், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல மக்கள் வாழும் இடம்தான் நாடு என்று பல்வேறு கருத்துக்களை இலக்கண, இலக்கியங்கள் உதாரணத்தோடு ஏதோ சொல்ல வேண்டும் என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்துத்துவ சக்திகள், பாஜகவினர் கடுமையான மிரட்டலை காளீஸ்வரனுக்கு விடுப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக் கிறார்கள்.
அரசியல் பொது வெளியில் அனைவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். ஆனால் அந்த விமர்சனம் கூட ஒரு நாகரீகமான முறையில், கண்ணியமாக இருக்க வேண்டும் .
கருத்து சுதந்திரம் என்பதற்காக சாக்கடை கருத்துக்களை எல்லாம் சரித்திர பூர்வ ஆய்வு அறிக்கைகள் என்று யாராவது சொன்னால்
அவருக்கும் சிந்திக்கும் ஆற்றலுக்கும் வெகு தொலைவில் இருப்பவர் என்றே எண்ணத் தோன்றும்.
அது போல தான் உங்கள் மூவருடைய அறிக்கையும் இருக்கிறது. நீங்கள் பாரதிய ஜனதா கட்சி, இந்து இயக்கங்களை ,இந்து மக்கள் கட்சியை பாரத பிரதமர் அவர்களை விமர்சனம் செய்வதற்கு முழு உரிமை இருக்கிறது; சுதந்திரம் இருக்கிறது .
அந்த படக் கண்காட்சியில் பெற்ற படங்களில் பெண்களின் மர்ம உறுப்புகளில் இந்து சமய சின்னங்களை உக்கிர எண்ணத்தோடு வரைந்து காட்சிப்படுத்தியது தான் உங்கள் பார்வையில் கருத்து சுதந்திரமா?
பல்லாயிரம் பேர் உயிர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்றப்பட்ட தேசியக்கொடியில் அசோகச் சக்கரத்தின் பகுதியில் துப்பாக்கிகளை வரிசையாக வைத்து இந்திய தேசியக் கொடியை அவமானப்படுத்தியது தான் கருத்து சுதந்திரமா?
இந்துக்கள் வழிபடும் ஆஞ்சநேயர் சுவாமியை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் உருவத்தில் வரைந்து காட்சிப் படுத்துகிறேன் என்பது இது இந்து சமய நம்பிக்கை அவமதிப்பு இல்லையா? சர்ச்சுகளில் நடக்கக்கூடிய பாலியல் வக்கிரங்களையும் பாதிரியார்களின் பெண்கள் விரோதப் போக்கு களையும் இந்த கருத்துரிமைக் காவலர்கள் கண்காட்சியாக வைப்பதற்கு தைரியம் வரவில்லையே ஏன்?
திரிசூலம் போல வரைந்து, அதிலே ஆண்குறி உருவத்தை வரையக்கூடிய இந்த கருத்து சுதந்திரக் காரன் சிலுவைகளில் இதுபோன்ற வரைவதற்கு தைரியம் இருக்கிறதா ?
ஒரு பொது நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகின்ற நேரத்தில் காஞ்சி மடத்து மாமுனிவர் சங்கராச்சாரியார் எழுந்து நிற்கவில்லை தமிழ் தாயை அவமானப்படுத்தி விட்டார் என்று தமிழ்நாட்டில் பல்வேறு போராட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட கருத்துரிமை காவலர்களே…. தமிழ்த் தாய்க்கு உருவம் கொடுத்தது யார்? என்று நாம் கேட்டால் வேல்முருகனுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
தமிழ் அன்னையையும், தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடும் போது எழுந்து மரியாதை செய்யவில்லை அவமானப்படுத்தியதாக ஆர்ப்பரித்து நீங்கள் செய்தது சரி என்றால் தேசபக்தர்களான நாங்கள் நாம் வாழக்கூடிய இந்தத் தாய்த் திருநாட்டை சதிகாரர்களும், ரத்தம் குடிக்கும் ஓநாய்களும், அவமானப்படுத்தி பாரத மாதாவை இழிவு படுத்துவது போல் சித்திரம் வரைந்த இந்த தேச விரோதி மீது நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் சொன்னால் என்ன தவறு ?
இந்து சாமியாரை மன்னிப்பு கேள் என்று சொன்ன உங்களால் கிருத்தவ பாதிரியாரிடம் மன்னிப்புக் கேள் என்று சொல்ல தைரியம் உண்டா ? போராட்டம் ,ஆர்பாட்டம் நடத்தாமல் கள்ள மவுனம் காப்பது தான் கருத்து சுதந்திரமா?
சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு ஆபத்து அச்சுறுத்தல் என்று ஒப்பாரி வைக்கும் உங்களைப் போன்றவர்கள் சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கு உரிய அந்தஸ்தைப் பெறுவதற்கு உரிய விதிகளை மீறி செயல்படக்கூடிய சென்னை லயோலா கல்லூரி மீது இந்த கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கு நீங்கள் தயாரா?
தமிழ்நாட்டில் பாஜக, இந்து இயக்கங்கள் தடம் தெரியாமல் போவீர்கள் என்று மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசக்கூடிய வேல்முருகன் – அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளிக்க வேண்டாம்; நாவடக்கம் தேவை என்று வள்ளுவன் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோதமாக, இந்து சமய நம்பிக்கை விரோதமாக எந்த இடத்தில் அநீதி நடைபெற்றாலும் அதை எதிர்க்க கூடிய நாங்கள் தேசபக்தர்கள் என்று சொல்லுகிறோம்.
கருத்துரிமைக் காவலர்கள் என்று கள்ளச் சாயம் பூசிக்கொண்டு பாரத நாட்டிற்கு எதிராக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கருத்துரிமைக்கு எதிராக இந்து சமயத்திற்கு மட்டும் எதிராக செயல்படக்கூடிய நீங்கள் அனைவரும் தேசவிரோதிகள்! இந்திய நாட்டை மதிக்க மாட்டோம் என்றும், இந்திய சட்டம் எங்களுக்கு தேவையில்லை என்றும், சொல்ல தைரியம் உண்டா?
நீங்கள் சென்னை இலயோலா கல்லூரியின் வாடகை தலைவர்கள் போல பேசுவது இன்று ஒன்றும் புதிதல்ல; நீங்கள் எப்பொழுதுமே அவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் தான் என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .
தமிழக அரசு, மத்திய அரசு இதுபோன்ற பிரிவினைவாதம் பேசக் கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். கருத்துக்களம் ,போராட்டம் ,ஆர்ப்பாட்டம் என்று தமிழகத்தில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்ட லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாது பாரத நாட்டையும் இந்து சமய நம்பிக்கையும் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தி படங்கள் வரைந்த ஓவியர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்திட இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்…. – என்று கூறினார்.



