கதறி அழுதாலும் விடாமல் சிறுமிக்கு பச்சை குத்திய அதிமுகவினரால் அதிர்ச்சி

சற்றுமுன்

சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு, ஒரு சிறுமியின் கையில், அவர் வலிதாங்க முடியாமல் அழுவதையும் பொருட்படுத்தாமல் பச்சை குத்தப் பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது 68வது பிறந்த நாளை கடந்த 23ஆம் தேதி கொண்டாடினர். அதை முன்னிட்டு, ஜெயலலிதாவை கவர்வதற்காக பேனர் வைப்பது, பால் குடம் எடுப்பது, கோவிலில் பூஜை செய்வது என விதவிதமான ஏற்பாடுகளை அதிமுக பிரமுகர்கள் செய்தார்கள். அதில் ஒன்றுதான் பொதுமக்களின் கையில் ஜெயலலிதாவின் படத்தை பச்சைக் குத்திவிடுவது. அவ்வாறு, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் ஆண்கள் , பெண்கள் என ஏராளமானோரின் கையில் பச்சைக் குத்தி விடப்பட்டது. அப்படி ஒரு சிறுமியின் கையில் பச்சைக் குத்தியபோது, அவர் பெண் வலி தாங்கமுடியாமல் கதறி அழுதார். ஆனாலும் அவருக்கு விடாமல் பச்சை குத்திவிடப்பட்டது. அதிலும் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் அத்தனை பேரின் முன்னிலையிலும் நடந்த இந்த சம்பவம் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து பச்சைக் குத்தப்பட்டதா என்று மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.