28.2.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம்,
மனதின் குரல்…
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.
நீங்கள் வானொலியில் எனது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உங்கள் மனம் முழுவதிலும் பிள்ளைகளின் தேர்வுகள் பற்றிய எண்ணங்களே நிறைந்திருக்கும். சில மாணவர்களின் 10ம் வகுப்பு, 12ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகிறது. உங்கள் மனதிலும் கூட இது தான் ஓடிக் கொண்டிருக்கும். நானும் உங்களின் இந்தப் பயணத்தில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு உங்கள் குழந்தைகளின் தேர்வுகள் பற்றி எத்தனை அக்கறை இருக்கிறதோ, அதே அளவு அக்கறை எனக்கும் அவர்களின் தேர்வுகள் மீது இருக்கிறது. தேர்வுகள் பற்றிய நமது கண்ணோட்டத்தை சற்று மாற்றிக் கொண்டால், நாம் கவலையின்றி இருக்க முடியும்.
நான் கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியிலேயே, நரேந்திர மோதி Appல் உங்கள் அனுபவங்களையும், உங்கள் ஆலோசனைகளையும் எனக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள் என்று கூறியிருந்தேன். ஆசிரியர்களும், வெற்றிப் பாதையில் நடைபோடும் மாணவர்களும், பெற்றோரும், சில சமூக சிந்தனையாளர்களும், ஏராளமான விஷயங்களை எழுதியனுப்பி இருக்கிறார்கள் என்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இதில் இரண்டு விஷயங்கள் என் மனதைத் தொட்டன. ஒன்று, எழுதியவர்கள் அனைவரும் கருத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார்கள் என்பது. இரண்டாவது, அதிக அளவுக்கு கடிதங்கள் வந்திருப்பது, விஷயம் எத்தனை முக்கியமானது என்பதைக் குறிக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் தேர்வுகள் தொடர்பான விஷயத்தை ஆசிரியர்கள், பள்ளி வளாகங்கள், பெற்றோர், குடும்பத்தார் அல்லது மாணவர்கள் என்ற எல்லைக்குள்ளாகவே கருதுகிறார்கள். என் Appஇல் வந்திருக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது, தேர்வுகள், மாணவர்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். நான் இன்று எனது மனதின் குரலில், குறிப்பாக, பெற்றோருடன், தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுடன், அவர்களின் ஆசிரியர்களுடன் உரையாற்ற விரும்புகிறேன். நான் படித்ததிலிருந்தும், கேட்டவற்றிலிருந்தும், எனக்குக் கூறப்பட்டவற்றிலிருந்தும் கருத்துக்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் மனதில் தோன்றும் விஷயங்களையும் நான் இதனுடன் இணைக்க விரும்புகிறேன். தேர்வுகள் எழுத இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு எனது இந்த சுமார் 30 நிமிட கருத்துப் பரிமாற்றம் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனதருமை மாணவச் செல்வங்களே, எனது இன்றைய மனதின் குரலை தொடங்கும் முன்பாக நாம் ஏன் இன்றைய நிகழ்ச்சியை உலகின் மிகப் பிரபலமான opening batsmanடன் ஆரம்பிக்கக் கூடாது? வாழ்க்கையில் வெற்றியின் சிகரங்களை எட்டிப் பிடிக்க அவருக்கு எவையெல்லாம் துணை நின்றன, அவரது அனுபவம் ஆகியன உங்களுக்கு கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும். யாரைப் பற்றி இந்தியாவின் இளைய சமுதாயத்தினர் பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறார்களோ, அப்படிப் பட்ட, பாரத் ரத்னா விருது பெற்ற சச்சின் தெண்டூல்கர் அவர்கள் அனுப்பியிருக்கும் செய்தியை நான் உங்களுக்கு ஒலிக்க விரும்புகிறேன்.
வணக்கம், நான் சச்சின் தெண்டூல்கர் பேசுகிறேன். மாணவர்களே, இன்னும் சில நாட்களில் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன என்பதை நான் அறிவேன். உங்களில் பல பேர் அழுத்தம் நிறைந்தவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்பும் செய்தி ஒன்று தான். உங்கள் பெற்றோருக்கு, உங்கள் ஆசிரியர்களுக்கு, உங்கள் குடும்பத்தாருக்கு என உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும், நீங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் தேர்வு குறித்து உங்கள் தயார் நிலை பற்றியும், நீங்கள் எத்தனை மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றும் உங்களிடம் கேள்விகள் பல கேட்பார்கள். நான் கூற விரும்புவதெல்லாம், நீங்கள் உங்களுக்குஎன ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள், மற்றவர்கள் உங்களுக்குத் தரும் அழுத்தம் அல்லது எதிர்பார்ப்புக்களால் அழுந்திப் போகாதீர்கள் என்பது தான். நீங்கள் கண்டிப்பாக கடும் முயற்சி மேற்கொள்ளுங்கள்; ஆனால் உங்களுக்குஎன அடையக் கூடிய, நியாயமானதொரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அந்த இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். நான் கிரிக்கெட் விளையாடும் போது, என்னிடமிருந்து கூட ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருந்தன. 24 ஆண்டுகளில் பல கடினமான கணங்களை சந்திக்க நேர்ந்தது, பல முறை சுகமான அனுபவங்களும் ஏற்பட்டன. ஆனால் எல்லா காலகட்டத்திலும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்தன. காலத்தோடு அந்த எதிர்பார்புக்களும் அதிகரித்து வந்தன. இந்த நிலைமையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானதாக இருந்தது. அந்த தீர்வு என்னவென்றால், என்னிடமிருந்து நான் எதிர்பார்க்கும் விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வேன், எனக்கென இலக்குகளை நான் நிர்ணயம் செய்து கொள்வேன், அந்த வகையில் எனக்கான இலக்குகளை நான் தீர்மானித்துக் கொள்ள முடிந்ததால், அதை அடைய முடிந்ததால், என்னால் நாட்டுக்காக ஒரு நல்ல விஷயத்தை சாதிக்க முடிந்தது. இந்த இலக்குகளை மட்டுமே நான் அடைய முயற்சிகளை மேற்கொண்டேன். என் கவனம் முழுவதும் பந்தின் மீது மட்டுமே இருந்தது, இலக்குகள் மெல்ல மெல்ல என் வசமானது. மாணவர்களே, உங்கள் எண்ணம் ஆக்கபூர்வமானதாக இருப்பது அவசியம், அந்த ஆக்கபூர்வமான எண்ணங்களை நல்ல முடிவுகள் கண்டிப்பாகத் தொடரும், ஆகையால் நீங்கள் நிச்சயமாக ஆக்கபூர்வமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், இறைவன் உங்களுக்கு நல்ல விளைவுகளையே கொடுப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது தான் உங்களுக்கு நான் அளிக்கும் செய்தி. உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். அழுத்தம் இல்லாத மனோநிலையில் தேர்வுகளை எழுதுங்கள், நல்ல முடிவுகள் கிடைக்கட்டும், வாழ்த்துக்கள்.
தெண்டூல்கர் அவர்கள் என்ன கூறினார் கேட்டீர்களா நண்பர்களே, எதிர்பார்ப்புக்கள் ஏற்படுத்தும் சுமையில் அழுந்தி விடாதீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் அல்லவா உருவாக்கிக் கொள்ள வேண்டும்!! சுதந்திரமான மனதோடும், சுதந்திரமான எண்ணத்தோடும், சுதந்திரமான திறமைகளோடும் நீங்களே உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். சச்சின் அவர்களின் இந்தச் செய்தி உங்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களோடு போட்டி போடாமல் ஏன் உங்களுடனே நீங்கள் போட்டி போடக் கூடாது? நாம் ஏன் மற்றவர்களோடு போட்டி போட்டு நமது நேரத்தை வீணடித்துக் கொள்ள வேண்டும்? நாம் நமது முந்தைய சாதனைகளையே ஏன் தகர்க்கக் கூடாது? அப்போது பாருங்கள், நமது முன்னேற்றத்தை யாரால் தடை செய்ய முடியும்? நீங்கள் முன்பு ஏற்படுத்திய பதிவுகளை நீங்களே தகர்க்கும் போது, அப்போது சந்தோஷத்தை நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்க வேண்டி இருக்காது. உங்களுக்குள்ளேயே சந்தோஷம் சுரக்கும்.
நண்பர்களே, தேர்வுகளை மதிப்பெண்களுடனான விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்ன வாங்கினோம், எத்தனை வாங்கினோம் என்ற கணக்குக்குள்ளாக முடங்கிப் போகாதீர்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு மகத்தான இலக்கோடு இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனங்களில் கனவுகளைச் சுமந்து செல்லுங்கள். உறுதியான எண்ணத்தோடு பயணம் மேற்கொள்ளுங்கள். இந்த தேர்வுகள் எல்லாம் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோமா, நமது வேகத்தில் பயணிக்கிறோமா என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. ஆகையால் விசாலமான, பரந்துபட்ட கனவுகள் உங்கள் வசம் இருந்தால், தேர்வுகள் விழாக்காலக் கொண்டாட்டமாக மாறும். ஒவ்வொரு தேர்வும் அந்த மகத்தான இலக்கை நிறைவு செய்யும் வகையில் மலரும். ஒவ்வொரு வெற்றியும் அந்த மகத்தான இலக்கைத் திறக்க உதவும் திறவுகோலாக அமையும். ஆகையால் இந்த ஆண்டு என்னவாகும், இந்த தேர்வின் முடிவுகள் எப்படி அமையும் என்பதோடு குறுகி விடாதீர்கள். ஒரு மிகப் பெரிய இலக்கைக் கருத்தில் கொண்டு பயணம் மேற்கொள்ளுங்கள். அதன் முடிவுகள் உங்கள் எதிர்பார்ப்புக்குக் குறைவானதாக இருந்தாலும் கூட, ஏமாற்றம் ஏற்படாது. மேலும் உறுதியோடும், பலத்தோடும், முனைப்போடும் முயல்வதற்குத் தேவையான மனவுறுதி உண்டாகும். தங்கள் தொலைபேசி மூலம் எனது Appஇல் வெளிப்படுத்தி இருக்கும் கருத்துக்களில் சிலவற்றை நான் பகிர்ந்து கொள்கிறேன்.
Shrey Gupta அவர்கள் ஆரோக்கியமான உடலில் தான் ஆரோக்கியமான மனம் குடி கொண்டிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். மாணவர்கள் தங்கள் படிப்போடு கூட தங்கள் உடல் நலம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நீங்கள் உங்கள் தேர்வுகளை நல்ல உடல் நலத்தோடு எழுத முடியும். கடைசி நாளன்று நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், 3-4 கி.மீ. ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூற மாட்டேன். ஆனால் ஒரு விஷயம், குறிப்பாக தேர்வு நாட்களில் உங்கள் வாடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது எத்தனை முக்கியமானதோ, அதைப் போலவே, 365 நாட்களிலும் நமது வாடிக்கையான செயல்பாடு நமது மனவுறுதிப்பாடு, கனவுகள் ஆகியவற்றுக்கு இசைவாக இருப்பதும் முக்கியமானது.
ப்ரபாகர் ரெட்டி அவர்கள் எனது Appஇல் தெரிவித்திருக்கும் உறக்கம் பற்றிய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. நேரத்தில் உறங்கி, காலத்தில் எழுந்திருந்து படிக்க வேண்டும். தேர்வு அரங்கில் நுழைவுச் சீட்டுடனும், தேவையான பிற பொருட்களுடனும் நேரத்துக்கு முன்பாகவே சென்று சேர வேண்டும். பிரபாகர் ரெட்டி அவர்கள் கூறும் இந்த விஷயத்தைக் கூற எனக்குத் தயக்கம் உண்டு. ஏனென்றால் உறக்கம் மேற்கொள்ளும் விஷயத்தில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. எனது பல நண்பர்களும் கூட நான் குறைவாக உறங்குகிறேன் என்று குற்றம் சுமத்துகிறார்கள். இது என்னிடம் இருக்கும் குறைபாடு, இதை நான் சரி செய்து கொள்ள முயற்சி மேற்கொள்வேன். ஆனால் இந்தக் கருத்து என்னமோ எனக்கு உடன்பாடான ஒன்று தான். நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில் செய்யும் செயல்பாடுகள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு குறித்த நேரத்தில் உறங்கச் செல்வது, ஆழமான உறக்கம் கொள்வது ஆகியனவும் முக்கியமானவையே. எனது உறக்கம் குறைவாக இருந்தாலும், அது ஆழமானதாக இருக்கிறது என்பதால் என்னால் காலம் தள்ள முடிகிறது. ஆனால் ரெட்டி அவர்களின் ஆலோசனையை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உறங்கச் செல்லும் முன்பாக நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடுவதை சில பேர் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உரையாடல் பற்றிய எண்ணங்களே மனதில் ஓடிக் கொண்டிருந்தால் எங்கிருந்து உறக்கம் பிடிக்கும். ஏதோ தேர்வுக் காலங்களில் உறக்கம் பற்றி பேசுவதால், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட வேண்டாம். நல்ல விதமாக நீங்கள் தேர்வுகளை எழுத வேண்டும், அழுத்தம் ஏதும் உங்கள் மனதில் உறுத்தக் கூடாது என்பதற்காகவே நான் குறித்த நேரத்தில் உறங்குவது குறித்துப் பேசுகிறேன். உறங்கிக் கொண்டே இருங்கள் என்று நான் கூறவில்லை. பின்னர் மதிப்பெண்கள் குறைவாக வாங்க நேர்ந்தால், ஏன் அப்படி ஆனது என்று அன்னை கேட்டால், மோதிஜி தான் உறங்கச் சொன்னார் என்று நீங்கள் கூறி விடக் கூடாது, அப்படி செய்ய மாட்டீர்கள் இல்லையா? செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இதைப் போலவே ஒழுங்குமுறை என்பது வாழ்க்கையிலும் வெற்றிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது. யாரெல்லாம் ஒழுங்கு முறையை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில்லையோ, ஏதோ வேலை ஆகி விட்டது என்று அவர்கள் நினைக்கலாம், ஆனால் அதை சாதிப்பதற்கு அவர்களுக்கு ஏகப்பட்ட சக்தி விரயமாகிறது, ஒவ்வொரு கணமும் அழுத்தம் நிறைந்தவையாக அமைகிறது. நமது உடலிலும் ஏதோ ஒரு உறுப்பு சரிவரப் பணியாற்றவில்லை என்றால், உடல் முழுவதும் இயல்பு நிலையில் இருக்காது என்பதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். அது மட்டுமல்ல, நமது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படையும். ஆகையால் எந்த ஒரு விஷயத்திலும் நாம் அசட்டையாக இருந்து விடக் கூடாது. உங்கள் மனவுறுதிப்பாட்டில் குறைபாடு ஏதும் ஏற்பட்டால், பரவாயில்லை என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தீர்மானத்தில் உறுதியாக நில்லுங்கள், செய்து பாருங்கள்.
தேர்வுகளை எழுதச் செல்லும் மாணவர்கள் இரு வகைப்பட்டவர்களாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சாரார், தாங்கள் படித்தவற்றின் மீதும், கற்றவற்றின் மீதும், தங்கள் பலங்களின் மீதும் முனைப்புக் கொண்டவர்களாக இருப்பார்கள். வேறு ஒரு சாரார், என்ன கேள்வி வருமோ, எப்படிப்பட்டதாக இருக்குமோ, என்னால் சரியாக செய்ய முடியுமா இல்லையா, வினாத்தாள் சுலபமாக இருக்குமா இருக்காதா என்ற கவலை கொண்டவர்களாக இருப்பார்கள். வினாத்தாள் எப்படி இருக்கும் என்பது குறித்த அழுத்தத்தில் இருப்பவர்களின் தேர்வு முடிவுகள் மீது எதிர்மறையான தாக்கம் காணப்படும். தாங்கள் கற்றவை மீது நம்பிக்கை கொண்டு தேர்வை எதிர்கொள்பவர்கள் எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த விஷயத்தை என்னை விட சிறப்பாக ஒருவரால் சொல்ல முடியும் என்றால், அவர் தான் சதுரங்கத்தின் நிபுணரும், சர்வதேச அளவில் சாதனை படைத்தவருமான சதுரங்க ஆட்ட சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள். அவர் தமது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார், எப்படி தேர்வுகளில் வெற்றி கொள்வது என்பதை அவரே உங்களுக்குத் தெரிவிப்பார், வாருங்கள்.
நான் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகிறேன். முதலாவதாக, நீங்கள் அனைவரும் தேர்வுகளை சிறப்பாக எழுதுவதற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தேர்வுகளை எப்படி சந்தித்தேன் என்பதைப் பற்றிய அனுபவத்தை ஒரு சிறிது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரச்சனைகளை எப்படி சந்திக்கிறீர்கள் என்பதைப் போலத் தான் தேர்வுகளை சந்திப்பதும். நீங்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும். முக்கியமாக பசியோடு இருக்கக் கூடாது. தேவையான அளவுக்கு சாப்பிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, பதற்றமில்லாத மன நிலை கொண்டிருக்க வேண்டும். இது முக்கியமான ஒன்றாகும். சதுரங்க விளையாட்டை அமைதியாக எதிர்கொள்வதைப் போல, தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சதுரங்கம் விளையாடும் போது, எந்தக் காய் எந்த இடத்துக்கு நகர்த்தப்படும் என்பது உங்களுக்குத் தெரியாது. அதைப் போலத் தான் தேர்வுகளில், எந்தக் கேள்வி கேட்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது. நீங்கள் பதற்றமில்லாமல் இருந்தால், நல்ல ஊட்டத்துடனும், நன்கு உறங்கி எழுந்தும் இருந்தால், உங்கள் மூளை சரியான விடையை, சரியான நேரத்தில், நினைவிற்குக் கொண்டு வரும், ஆகவே அமைதியாக இருங்கள். உங்கள் மீது, நீங்கள் அதிக சுமையை ஏற்றிக் கொள்ளக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புக்களை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம். தேர்வை ஒரு சவாலாக மட்டுமே பாருங்கள். நான் இந்த வினாவிற்கு விடை அளித்து விட முடியுமா என்று மட்டும் பாருங்கள். தேர்வு நெருங்கும் இறுதி தருணத்தில், மிக முக்கியமான பகுதிகள் உங்களுக்கு சரிவர நினைவில் வராத பகுதிகள் என்று நீங்கள் நினைப்பவற்றை மறுபடியும் பாருங்கள். உங்கள் ஆசிரியர்களுடன், உடன் பயின்ற மாணவர்களுடன் ஏற்பட்ட நிகழ்வுகள் ஏதேனும் உங்கள் நினைவிற்கு வரக் கூடும். பாடம் பற்றி பல்வேறு விஷயங்களை நினைவிற்கு கொண்டு வர இது உதவக் கூடும். நீங்கள் கடினமானதாகக் கருதும் வினாக்களுக்கான விடைகளை மறுபடியும் மறுபடியும் பார்க்கும் போது, அது உங்கள் நினைவில் பசுமையாகப் பதியும். தேர்வு எழுதும் போது சிறப்பாக விடை எழுத முடியும். எனவே பதற்றமின்றி இருங்கள். இரவில் நன்றாக உறங்குங்கள். அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம். அவநம்பிக்கையும் கூடாது. நான் அஞ்சுவதை விட தேர்வுகள் எளிமையாகத் தான் இருக்கும் என்பதே என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. தளராத நம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். தேர்வில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் உண்மையிலேயே மிகவும் மகத்துவம் நிறைந்த ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் அவர் எத்தனை அமைதியாக அமர்ந்து, முழு கவனத்தோடு விளையாடுவார் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவரது கண்கள் கூட மற்ற எந்த விஷயத்திலும் ஈடுபடாது. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் பற்றிய கதையை நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? எப்படி ஒரு பறவையின் கண்ணின் மீதே அவரது முழு கவனமும் இருந்தது? அதைப் போலவே விளையாடும் போது, விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் கண்களும் இலக்கு மீது வைத்த குறி மாறாமல் நிலை பெற்றிருக்கும். இது ஆழ்மன அமைதியின் வெளிப்பாடு. ஏதோ கணப்பொழுதில், ஒருவர் கூறுவதால் வருவது அல்ல இந்த ஆழ்மன அமைதி. இதைப் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதைப் புன்னகையோடு பழகலாமே!! தேர்வு நாட்களிலும் நீங்கள் புன்னகை புரிந்து கொண்டே இருக்கலாம், இதனால் இயல்பாகவே இந்த மனவமைதி வாய்க்கப் பெறும். நண்பர்களோடு நீங்கள் உரையாடாமல், தன்னந்தனியாக, துவண்ட நிலையில், கடைசி நேரத்தில் ஏகப்பட்ட புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தால், இந்த மனவமைதி வாய்க்காது. வாய் விட்டுச் சிரியுங்கள், நண்பர்களோடு சேர்ந்து நகைச்சுவையில் ஈடுபடுங்கள். தானாகவே அமைதி மலரும்.
ஒரு சின்ன விஷயத்தை நான் உங்கள் முன்பு வைக்கிறேன். நீங்கள் ஒரு குளக்கரையில் நிற்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். குளத்தின் ஆழத்தில் மிக அருமையான காட்சிகள் தென்படுகின்றன. திடீரென்று யாரோ ஒருவர் குளத்தின் நீரில் ஒரு கல்லை விட்டெறிகிறார்கள், நீரில் திவலைகள் ஏற்படுகின்றன, அப்போது நீரின் ஆழத்தில் முன்பு தெளிவாகக் காணப்பட்டவை இப்போது தெரிகிறதா? நீர் சலனமின்றி இருந்தால், பொருட்கள் எத்தனை ஆழமாக இருந்தாலும், தெளிவாகக் காணப்படுகின்றன. ஆனால் நீரில் சலனம் உண்டானால், ஆழத்தில் இருப்பவையேதும் புலப்படுவதில்லை. உங்கள் மனத்தின் ஆழத்திலும் ஏராளமானவை புதைந்து கிடக்கின்றன. ஓராண்டுக்கால முயற்சிகளின் தங்கச் சுரங்கம் விரிந்திருக்கிறது. ஆனால் மனவமைதி இல்லை என்று சொன்னால், அந்தச் சுரங்கத்தின் தங்கம் உங்களுக்கு வாய்க்கப் பெறாது. உங்கள் மனம் மட்டும் அமைதியாக இருந்தால், உங்கள் ஆழ்மனத் தங்கம் தானே மேலெழும்பி உங்கள் கைத்தலத்தில் தவழும், தேர்வுகள் சுலபமாகும்.
நான் என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவா? நான் சில வேளைகளில் உரைகளைக் கேட்கச் செல்லும் போது அல்லது அரசில் எனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள தீவிரமாக கவனத்தை செலுத்தும் போது, உள்ளே அதிக மனவழுத்தத்தை அனுபவிக்க நேரும். அப்போது சற்று மனதுக்கு ஓய்வு அளித்தால், நிலைமை சரியாகி விடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு உத்தியை நான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் நீண்டு, ஆழமாக சுவாஸிப்பேன், இப்படி 4, 5 முறைகள் செய்வேன். 40, 50 நொடிகள் இதற்கு செலவாகலாம், ஆனால் அதன் பிறகு எனது மனம் மிகவும் அமைதியடைந்து விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தயாராகி விடுகிறது. என்னுடைய இந்த அனுபவம் உங்களுக்கும் உதவிகரமாக இருக்கலாம்.
ரஜத் அக்ரவால் அவர்கள், நாம் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாவது நமது நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் ஆசுவாசமாக உணர வேண்டும், அரட்டை அடிக்க வேண்டும் என்று என்னுடைய Appஇல் எழுதி இருக்கிறார். அவர் கூறி இருக்கும் இது மிகவும் முக்கியமான விஷயம். ஏனென்றால், பெரும்பாலான வேளைகளில் தேர்வுகளை எழுதி விட்டு நாம் வீடு திரும்பிய பின்னர் நாம் எழுதியவற்றில் எத்தனை சரி, எத்தனை தவறு என்பதைக் கணக்குப் பார்க்க அமர்ந்து விடுகிறோம். பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தாலோ, அவர்கள் ஆசிரியர்களாக இருந்தாலோ, அப்போது அவர்கள் மீண்டும் தேர்வை எழுத வைத்து விடுவார்கள். பின்னர் இதை வைத்து எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கணக்குப் போட ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் மனம் முழுவதும் நீங்கள் எழுதி விட்டு வந்த தேர்விலேயே ஊறிக் கிடக்கும். நீங்களும் சும்மா இருப்பதில்லை, தொலைபேசியில் உங்கள் நண்பர்களிடம், இந்த வினாவுக்கு என்ன விடையளித்தாய், அதை எப்படி எழுதினாய், ஐயோ, நான் இப்படி எழுதி விட்டேனே, இப்படி தவறாகி விட்டதே, நினைவுக்கு வரவில்லையே என்றெல்லாம் அலசி துவைத்துப் போட்டு விடுகிறோம். நண்பர்களே, தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள். தேர்வில் நீங்கள் என்ன எழுதி இருந்தாலும், அது கடந்து போன நிகழ்வு. குடும்பத்தாரோடு அரட்டையடியுங்கள், இனிமை நிறைந்த பழைய கதைகளில் ஈடுபடுங்கள். பெற்றோருடன் நீங்கள் கடந்த காலத்தில் சென்ற இனிமையான இடங்கள் பற்றி உரையாடுங்கள். இந்தச் பேச்சுக்களிலேயே அரை மணி நேரத்தை செலவு செய்யுங்கள். ரஜத் அவர்களின் கருத்து உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.
நண்பர்களே, மனம் அமைதி அடைவதைப் பற்றி நான் என்ன சொல்லட்டும்? நீங்கள் தேர்வு எழுதும் முன்பாக, அடிப்படையில் ஒரு ஆசிரியராக இருந்த, ஆனால் இன்று நற்பண்புகளை எடுத்துரைக்கும் ஆசானாக இருக்கிறார், அவரின் கருத்தைக் கேளுங்கள். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் ராம்சரிதமானஸ் காவியத்தை எடுத்துரைக்கும் இவர் இதன் ஒப்பற்ற கருத்துக்களை உலகெங்கும் அறிவுறுத்தி வருகிறார். இத்தனை பெருமைகள் மிக்க மோராரி பாபு அவர்கள் மாணவர்களான உங்களுக்கு மிக்க மதிப்பு நிறைந்த உத்திகளை தெரிவிக்க இருக்கிறார். அவர் ஆசிரியராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால், இருவகையில் இவரது கருத்துக்கள் ஆழமானவை.
நான் மோராரி பாபு பேசுகிறேன், தேர்வுக் காலங்களில் எந்த ஒரு மனச்சுமையையும் வைத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள், மனதை ஒருங்கிணைத்து தேர்வு எழுத அமருங்கள், எந்த ஒரு நிலையையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு அணுகுங்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் ஏற்றுக் கொள்ளும் போது, நமது மனதில் மகிழ்ச்சி நிறையும், இதுவே எனது அனுபவமாக இருந்துள்ளது. மனதில் எந்த ஒரு பாரத்தையும் சுமக்காமல் நீங்கள் உங்கள் தேர்வுகளை மகிழ்வோடு எதிர்கொள்ளுங்கள். கண்டிப்பாக நல்ல விளைவுகளே ஏற்படும். அப்படியே நல்ல முடிவுகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, தோல்வியால் துவளவும் மாட்டீர்கள், வெற்றி கிடைப்பதால் ஏற்படும் கர்வமும் இருக்காது. ஒரு கவிதை மூலமாக நான் வாழ்த்துக்களையும் என் செய்தியையும் விடுக்கிறேன். வெற்றி எப்போதுமே கிட்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல; தோல்விகளோடும் வாழப் பழகுவது முக்கியம். நமது மதிப்புக்குரிய பிரதம மந்திரியின் மனதின் குரல் நிகழ்ச்சியை நான் வெகுவாக மதிக்கிறேன் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி.
மோராரி பாபு அவர்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர் அருமையான ஒரு செய்தியை நமக்கு அளித்திருக்கிறார். நண்பர்களே, நான் வேறு ஒரு விஷயத்தையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த முறை தங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவித்தவர்கள் யோகம் பற்றி கணிசமாகக் கூறியிருக்கிறார்கள். இன்று நான் உலகில் சந்திக்கும் அதிகம் பேர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யோகம் பற்றி பேசுவதை நான் கவனிக்கிறேன். யோகம் குறித்து இத்தனை ஈர்ப்பும் ஆவலும் ஏற்பட்டிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அதானு மண்டல், குணால் குப்தா, சுஷாந்த் குமார், கே. ஜி. ஆனந்த், அபிஜித் குல்கர்னி என ஏகப்பட்ட பேர்கள் என் மொபைல் Appஇல் யோகம் பற்றியும் தியானப் பயிற்சி பற்றியும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
நண்பர்களே, உடனே யோகப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என்று நான் உங்களிடம் கூறினால், அது நியாயமானது இல்லை. ஆனால் யாரெல்லாம் யோகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்களோ, அவர்கள் தேர்வுகள் காரணமாக அதைத் தள்ளி வைக்கக் கூடாது என்பதைத் தான் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் முன்பே செய்து வந்தீர்கள் என்றால், அதைத் தொடர்ந்து செய்யுங்கள். ஆனால் நீங்கள் மாணவப் பருவத்தில் இருந்தாலோ, வாழ்க்கையின் பிற்பகுதியில் இருந்தாலோ உங்கள் உள்மனதின் பரிணாம வளர்ச்சிக்கு யோகக் கலை என்பது விலைமதிப்பில்லா திறவுகோலைத் தன்னகத்தே வைத்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் முன்பே யோகப் பயிற்சி செய்யவில்லை என்றாலும் கூட உங்கள் வீட்டின் அருகே யோகக் கலை தெரிந்த ஒருவரிடத்தில் தேர்வுக் காலங்களில் செய்யக் கூடிய பயிற்சிகள் பற்றித் தெரிந்து கொண்டு அதை நீங்கள் செய்யலாமே!!
எனது இளைய நண்பர்களே, தேர்வு அரங்குக்கு அவசர கதியில் செல்கிறீர்கள், உங்கள் இருக்கையில் அவசர அவசரமாக அமர்கிறீர்கள். ஏன் இப்படி நீங்கள் அவசரப் பட வேண்டும்? போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நீங்கள் சரியான நேரத்தில் சென்று சேர திட்டமிட்டு செயல்படலாமே. இப்படி செய்யவில்லை என்றால், இவையெல்லாம் கூட உங்கள் மனவழுத்தத்துக்கு காரணமாக அமையக் கூடும். இன்னொரு விஷயம். நமக்குக் கிடைக்கும் நேரத்தில் நமக்கு அளிக்கப்படும் வினாத்தாளை முழுமையாகப் படிக்க வேண்டும். இதனால் நேரக் குறைபாடு ஏற்படும் என்று நாம் கருதலாம். அப்படி இல்லை நண்பர்களே. நீங்கள் குறிப்புக்களை கவனத்தோடு படியுங்கள், 4,5 நிமிடங்கள் ஆகலாம், பாதகமில்லை. ஆனால் இப்படி நீங்கள் செய்வதன் மூலமாக தேர்வு எழுதுவதில் எந்தக் கோளாறும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும். சில வேளைகளில் தேர்வு முறையில் மாற்றம் இருந்தாலும் கூட, நாம் கவனமாகக் குறிப்புக்களைப் படிக்கும் போது, அதற்கு ஏற்ற முறையில் நம்மை மாற்றிக் கொள்ள இது உதவும். இதனால் 5 நிமிடங்கள் செலவானாலும் கூட கண்டிப்பாக இதைச் செய்யுங்கள் என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
யஷ் நாகர் அவர்கள் தான் முதன் முறையாக வினாத்தாளைப் படித்த போது கடினமாக உணர்ந்ததாகவும், இந்த வினாத் தாள் தான் என்னிடம் இருக்கிறது, புதியதாக எதுவும் வரப் போவதில்லை, இதற்குத் தான் நான் விடை எழுத வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு இதே வினாத்தாளை மீண்டும் படித்த போது, மிகவும் எளிதாக வினாத்தாளை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் என் மொபைல் Appஇல் தெரிவித்திருக்கிறார். முதன் முறை படித்த போது என்னால் விடை எழுத முடியாது போலிருந்தது; ஆனால் இதையே இரண்டாவது முறை படித்த போது, வினாக்கள்தாம் வேறு வகையில் கேட்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய, விடைகள் அனைத்தும் எனக்குத் தெரிந்தவைதாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. வினாக்களைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. வினாக்களைப் புரிந்து கொள்ளாத போது சில வேளைகளில் அவை மிகக் கடினமானவையாகத் தோன்றும். யஷ் நாகர் அவர்களின் இந்தக் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். கேள்விகளை நீங்கள் ஒரு முறைக்கு நான்கு முறைகள் கூட படித்துப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றை அவற்றுக்கு இணையாக்கிப் பாருங்கள். நீங்கள் எழுத ஆரம்பிக்கும் முன்பாகவே வினா எளிதாகி விடும்.
பாரத் ரத்னா விருது பெற்ற, மதிப்பு நிறைந்த நமது அறிவியலாளர் CNR Rao அவர்கள் பொறுமையை வலியுறுத்துகிறார். மிகவும் குறைவான சொற்கள், ஆனால் செறிவான பொருள் உடையது. வாருங்கள், ராவ் அவர்களின் செய்தியைக் கேட்போம்….
பெங்களூரூவிலிருந்து CNR Rao பேசுகிறேன். தேர்வுகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நான் முழுமையாக உணர்கிறேன். அதிலும் குறிப்பாக போட்டித் தேர்வுகள் இத்தகையவை. அச்சமே தேவையில்லை, உங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்யுங்கள். இதைத்தான் நான் எல்லா இளைஞர்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த நாட்டில், வாய்ப்புக்களுக்குப் பஞ்சமில்லை. ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானியுங்கள். விடாமல் முயன்றால் நீங்கள் வெற்றி காணலாம். பிரபஞ்சத்தின் அங்கம் நீங்கள் என்பதை மறவாதீர்கள். மரங்களைப் போல, மலைகளைப் போல நீங்களும் இங்கு இருப்பதற்கு உரிமை உண்டு என்பதை மறவாதீர்கள். இலக்கி நோக்கிய பயணமும், அர்ப்பணிப்பும், உங்களுக்குத் தேவையான ஒன்று. இத்தகைய குணாதிசயங்களோடு நீங்கள் இருந்தால், எல்லாத் தேர்வுகளிலும் நீங்கள் வெற்றி காண முடியும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றி காண என் வாழ்த்துக்கள்.
ஒரு அறிவியலாளர் கருத்து தெரிவிக்கும் பாணியைப் பார்த்தீர்களா நண்பர்களே. எதைக் கூற நான் அரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறேனோ, அதை வெறும் மூன்றே நிமிடங்களில் ரத்தினச் சுருக்கமாக உரைத்து விட்டார் பாருங்கள். இது அல்லவா அறிவியலின் சக்தி!! இதுவல்லவா அறிவியலில் தோய்ந்த மனதின் சக்தி!! நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு ஊக்கம் அளித்தமைக்கு நான் ராவ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மனவுறுதி, முனைப்பு, விடாமுயற்சி ஆகியவை பற்றி அவர் கூறியவை தாம் முக்கியமானவை. நீங்கள் உறுதியாக இருந்தால், அச்சம் கூட ஒதுங்கிச் செல்லும். பொன்னானதொரு எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
ருசிகா டாபஸ் அவர்கள் தனது தேர்வு அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். தேர்வுக் காலங்களில் ஆக்கபூர்வமானதொரு சூழலை ஏற்படுத்தும் முயற்சி எப்போதும் இருந்து வந்ததாக அவர் கூறுகிறார். இதைப் போன்றதொரு சூழலே அவருடைய நண்பர்களின் குடும்பங்களிலும் நிலவியதாக குறிப்பிடுகிறார். ஆக்கபூர்வமான அணுகுமுறை, ஆக்கபூர்வமான மனோநிலை ஆகியன ஆக்கபூர்வமான ஆற்றலுக்கு வழிவகுக்கின்றன என்று சச்சின் அவர்கள் கூட குறிப்பிட்டிருந்தார். சில வேளைகளில் பல விஷயங்கள் நமக்குக் கருத்தூக்கம் ஏற்படுத்துபவையாக அமைகின்றன. வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் கூட சிறந்த முன்னுதாரணங்கள், உண்மைச் சம்பவங்கள் மிகப் பெரிய கருத்தூக்கத்தை ஏற்படுத்துவதோடு, மிகப் பெரிய சக்தியையும் அளிக்கிறது, சங்கடமான காலங்களில் புதிய பாதையையும் துலக்கிக் காட்டுகிறது. மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிஸன் பற்றி நாம் நமது பாடங்களில் படிக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்பைச் செய்ய அவர் எத்தனை ஆண்டுகள் செலவு செய்திருப்பார், எத்தனை முறை தோல்விகளை சந்தித்திருப்பார், எத்தனை காலம் செலவானது, எத்தனை பணம் விரயமானது, தோல்விகளுக்குப் பிறகு எத்தனை ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று எல்லாம் நாம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? ஆனால் இன்று, இந்த மின்சார விளக்குதான் நமது வாழ்வில் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது. தோல்விகளில் தாம் வெற்றிக்கான படிகள் இருக்கின்றன என்று இதைத் தான் கூறுகிறார்கள்.
ஸ்ரீநிவாஸ ராமானுஜன் அவர்களை யாருக்குத் தான் தெரியாது? நவீன காலத்தின் மகத்தான கணித மேதைகளில் ஒருவரான ராமானுஜன் அவர்களுக்கு கணிதத்தில் முறையான படிப்பும் கிடையாது, சிறப்பான பயிற்சியும் கிடையாது. ஆனால் அவர் mathematical analysis, எண் கோட்பாடு போன்ற பல துறைகளில் மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறார். மிகவும் இடர்ப்பாடுகளும், கஷ்டங்களும் நிறைந்த வாழ்வை அவர் வாழ்ந்தார். இவற்றையெல்லாம் தாண்டி அவர் உலகத்துக்கான தனது பங்களிப்பை விட்டுச் சென்றிருக்கிறார். வெற்றி என்பது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கிட்டும் என்பதற்கு JK Rowling மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஹேரி பாட்டர் தொடர் என்பது உலகில் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் தொடக்கத்தில் நிலைமை இப்படி இருக்கவில்லை. ஏகப்பட்ட இடர்களை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தொடர் தோல்விகள் அவரைத் தொடர்ந்தன. கடினமான சூழ்நிலைகளில் அவர் தாம் முக்கியமானவை என எதைக் கருதினாரோ அதில் தன் முழு சக்தியையும் செலுத்தியதாக JK Rowling கூறியிருக்கிறார். தேர்வுகள் என்பன இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக் கூடத்துக்கும் என ஏற்பட்டு விட்டது. ஆனால் பெற்றோர்-ஆசிரியர் ஆகியோரின் ஆதரவு என்ற அமைப்பு இல்லாமல் தன்னந்தனியே மாணவர்கள் இதை எதிர்கொள்ளக் கூடிய நிலை என்பது நல்லதல்ல. பெற்றோர், ஆசிரியர்கள், மூத்த மாணவர்கள் என அனைவருமாக ஒரு குழுவாகத் திட்டமிட்டு, ஒரே சிந்தையோடு செயல்பட்டு முன்னேறினால், தேர்வுகள் தடைகளல்ல, சுலபமானவையே.
கேஷவ் வைஷ்ணவ் அவர்கள் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை பெற்றோர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஊக்கம் மட்டுமே அளிக்க வேண்டும், அவர்கள் ஆசுவாசமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று என் Appஇல் தெரிவித்திருக்கிறார். விஜய் ஜிங்கன் அவர்கள், பிள்ளைகள் மீது பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புக்கள் என்ற சுமையை ஏற்ற வேண்டாம் என்றும், முடிந்த மட்டும் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது மிகவும் சரியான கருத்து.
நான் இன்று பெற்றோருக்கு அதிகம் கூற விரும்பவில்லை. தயவு செய்து அழுத்தம் அளிக்காதீர்கள். உங்கள் குழந்தை தனது நண்பனோடு உரையாடினால் அவனைத் தடுக்காதீர்கள். இனிமையானதொரு சூழலை உங்கள் குழந்தைக்கு அமைத்துத் தாருங்கள். அது ஆக்கபூர்வமானதாக இருக்கட்டும். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகப்படுவதை நீங்களே உணர்வீர்கள்.
நண்பர்களே, நமது வாழ்க்கை முறை கடந்த தலைமுறையினரிடமிருந்து அதிகம் மாறுதல் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கணமும் ஒரு புதிய கண்டுபிடிப்பு, புதிய தொழில்நுட்பம், அறிவியலின் புதிய புதிய பரிமாணங்கள் என நவீனங்கள் சுரந்து கொண்டே இருக்கின்றன. நாம் அவற்றைக் கண்டு வியந்து போவதோடு நிற்காமல் அவற்றோடு நம்மை இணைத்துக் கொள்ளவும் முயல்கிறோம். நாமும் அறிவியலின் வேகத்துக்கு ஈடுகொடுத்துப் பயணிக்க விழைகிறோம். நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் இன்று தேசிய அறிவியல் நாள். அதாவது நாட்டின் அறிவியல் விழா என்று இதைக் கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் ஃபிப்ரவரி மாதம் 28ம் தேதியை நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். 1928ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 28ம் தேதியன்று சர். சி.வி. ராமன் அவர்கள் தனது கண்டுபிடிப்பான ராமன் விளைவை பிரகடனப் படுத்தினார். இந்தக் கண்டுபிடிப்புக்காகத் தான் அவருக்கு நோபல் பரிசு கிட்டியது. இதன் காரணமாகத் தான் இந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆர்வம் அறிவியலின் தாய். ஒவ்வொரு மனதிலும் அறிவியல் சிந்தனை இருக்க வேண்டும், அறிவியல் மீதான ஈர்ப்பு இருக்க வேண்டும், ஒவ்வொரு தலைமுறையினரிடத்திலும் அறிவியல் பற்றிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் இல்லாது போனால், புதுமைகள் படைக்க முடியாது. இன்று தேசிய அறிவியல் தினத்தன்று நாட்டில் புதுமைகள் படைத்தலுக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த முறை தேசிய அறிவியல் தினத்துக்கான கருத்து Make in India, Science and Technology driven Innovations, அதாவது அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை ஆதாரமாகக் கொண்ட புதுமைகளை இந்தியாவில் உருவாக்குவோம் என்பதே ஆகும். சர் சி.வி. ராமன் அவர்களை நான் வணங்குகிறேன். நீங்கள் அனைவரும் அறிவியல் பால் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நண்பர்களே சில வேளைகளில் வெற்றி என்பது தாமதமாகக் கிடைக்கிறது. அப்படிப் பட்ட வெற்றி கிடைக்கும் போது, உலகை நாம் பார்க்கும் பார்வையே மாறிப் போகிறது. நீங்கள் தேர்வுக்கான தயாரிப்புக்களில் முனைந்திருப்பதால், சில விஷயங்கள் உங்கள் கவனத்தில் விடுபட்டுப் போயிருக்கலாம். அறிவியல் உலகில் மிகப் பெரிய கண்டுபிடிப்பு கடந்த நாட்களில் நடைபெற்றிருக்கிறது என்பதை பெரியவர்களுக்கும் சேர்த்து நான் தெரிவிக்க விரும்புகிறேன். உலகின் அறிவியலாளர்கள் இணைந்து ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள், தலைமுறைகள் கடந்து சென்றன, சுமார் 100 ஆண்டுகள் கழித்து வெற்றிக் கனி கிட்டியது. நமது அறிவியலாளர்களின் பெரு முயற்சிகள் காரணமாக gravitational wave புவியீர்ப்பு அலை கண்டுபிடிக்கப்பட்டது. இது அறிவியலின் மிகத் தொலைநோக்குக் கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பு, கடந்த நூற்றாண்டின் நமது மகத்தான அறிவியலாளரான ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை நிரூபித்திருப்பதோடு, இயற்பியல் துறையில் மகத்தான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இது ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கும் உலகுக்கும் பயன்படக் கூடிய ஒன்றாக இருக்கும் அதே வேளையில், இந்த மகத்தான கண்டுபிடிப்பில் இந்தியாவின் பல பிரகாசமான விஞ்ஞானிகளும் இணைந்து பணியாற்றினார்கள் என்பது நமக்கு பெருமிதம் அளிக்கும் ஒன்று. நான் அத்துணை விஞ்ஞானிகளுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்திலும் கூட இந்தக் கண்டுபிடிப்பை இன்னும் மேம்படுத்தும் வகையில் நமது விஞ்ஞானிகள் முயற்சிகளில் ஈடுபடுவார்கள், சர்வதேச முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கும்.
எனதருமை நாட்டு மக்களே, கடந்த நாட்களில் நாம் முக்கியமானதொரு தீர்மானத்தை மேற்கொண்டோம். இந்தக் கண்டுபிடிப்பில் மேலும் வெற்றிகளை நாம் காண Laser Interferometer Gravitational Wave Observatory, சுருக்கமாக LIGO என்று அழைக்கப்படும் இதை இந்தியாவில் அமைக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. உலகில் இந்த வகையிலான அமைப்புக்கள் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்தியா 3வது இடம். இந்த முயற்சியில் இந்தியா தன்னை இணைத்துக் கொள்வதன் வாயிலாக புதியதொரு சக்தியும், வேகமும் ஏற்படும். மனித சமுதாயத்தின் வளத்தின் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கும் . நான் மீண்டுமொரு முறை அனைத்து விஞ்ஞானிகளுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, நான் ஒரு எண்ணை அறிவிக்கிறேன். நாளை முதல் நீங்கள் இந்த எண்ணுக்கு ஒரு missed call கொடுத்து எனது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு மகிழலாம். உங்கள் தாய் மொழியிலேயே கூட இதைக் கேட்கலாம். Missed call தர வேண்டிய எண் 81908 81908. எண்ணை மீண்டும் ஒரு முறை அறிவிக்கிறேன். 81908 81908.
நண்பர்களே, உங்கள் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன, நானும் நாளை தேர்வுக்குச் செல்ல வேண்டும். 125 கோடி நாட்டு மக்கள் எனக்கு தேர்வு வைத்திருக்கிறார்கள். நாளை நிதி நிலை அறிக்கை, நினைவிருக்கிறதா? இந்த ஆண்டு நெட்டாண்டு அதாவது leap year என்பதால் ஃபெப்ருவரி 29 அன்று அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நான் எத்தனை ஆசுவாசமாக, தன்னம்பிக்கையோடு இருக்கிறேன் என்பதை நீங்கள் என் உரை மூலமாக உணர்ந்திருப்பீர்கள், இல்லையா? நாளை எனக்கான தேர்வு, நாளை மறுநாள் உங்களுக்கான தேர்வு. நாமனைவரும் வெற்றி பெற்றால், நாடு முழுமையும் வெற்றி காணும். நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆயிரமாயிரம் நல் வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி என்ற அழுத்தத்திலிருந்து விடுபட்டு, ஆசுவாசமான மனதோடு முன்னேறிச் செல்லுங்கள். உறுதியாக இருங்கள். நன்றி.


