டிடிவி தினகரன் காட்டிய வழியில், செந்தில் பாலாஜிக்கு சூட்டப் பட்ட புத்திசாலிப் பட்டத்தை தாங்களும் பெற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள் அமமுக.,வின் முக்கிய நிர்வாகிகள் மூன்று பேர்.
தஞ்சையில் நேற்று அமமுக பொருளாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரங்கசாமி இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தேர்தல் தோல்விக்கு பின் மங்களகரமான நிகழ்ச்சி மூலம் மீண்டும் எழுச்சியோடு தஞ்சை மண்ணில் இருந்து என் பயணத்தை துவங்கி இருக்கிறேன் என்றார்.
தேர்தல் முடிவுக்கு பின் தஞ்சை மண்ணுக்கு வந்து மீண்டும் எழுச்சியோடு ஒரு மங்களகரமான இல்ல நிகழ்ச்சி மூலம் பயணத்தை தொடங்கி இருக்கிறேன். பலவிதமான சோதனைகள் மூலம் நம்மை அரசியல் ரீதியாக வீழ்த்திவிடலாம் என நினைத்தவர்கள் இப்போது வேண்டுமானால் அல்ப சந்தோசம் அடையலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து எழுச்சியோடு செயல்படுவதோடு தமிழகத்தின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளோம் என்று பேசினார்!
தினகரன் எப்போது தஞ்சைக்கு வந்தாலும் தங்கதமிழ்செல்வன் புகழேந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் வருவார். ஆனால் தேர்தல் தோல்வியால் அதிருப்தியில் இருப்பதால் அவர்கள் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை!
தாம் பங்கேற்ற திருமண நிகழ்வில் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பார்த்த தினகரன் தேர்தலில் நமக்கு வெற்றி தரவில்லை என்றாலும் கடுமையான கூட்டம் வந்திருக்கு! இவர்கள் ஓட்டுப்போட்டு இருந்தாலே நாம் தஞ்சையில் ஜெயித்திருக்கலாம் என்று சிரித்துக்கொண்டே ரங்கசாமியின் காதைக் கடித்தாராம்!
இப்போது இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அமமுகவின் தங்கதமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப் படுவது உறுதியாகியிருக்கிறது.. இவர்கள் மூவரும் தினகரனுடன் வருவதையும் போவதையும் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று திருமண நிகழ்வில் தினகரனுடன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம், இம்மூவரும் மீண்டும் செய்தியில் அடிபடத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவை பிடித்தே தீருவேன் என்று கூறி, தினகரனுடன் சேர்ந்து சபதம் போட்ட 18 பேர் தங்கள் எம்எல்ஏ பதவி பறிபோன நிலையில் புலம்பியபடி உள்ளனர். தங்கள் பதவி போனாலும் பரவாயில்லை தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் சேரலாம் என கூடவே இருந்தனர். தினகரனுக்காக ஏராளமாக செலவு செய்தனர்.
தினகரனின் வலதுகரமாக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஒரு கட்டத்தில் தான் செய்வது வீண் செலவு என்று உணர்ந்து, திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி! அடுத்து, விட்டதைப் பிடித்தது போல் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனால் மற்ற 17 பேரும் பதவி இழந்து, வெற்றியும் பெறாமல் வாய்ப்பும் இழந்து, செல்வாக்கும் செல்வத்தையும் இழந்து நிற்கின்றனர்.
இந்நிலையில்தான், செந்தில்பாலாஜி திமுக.,வுக்குச் சென்றது புத்திசாலித்தனம் என்று கூறிய தினகரனின் பாராட்டுக் கருத்து இப்போது அமமுகவினர் மத்தியில் மீண்டும் மீண்டும் அலசப் பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி சென்றது புத்திசாலித்தனம் என தினகரனே பாராட்டியுள்ளார். எனவே நாம் சென்றாலும் தினகரன் நமது புத்திசாலித்தனத்தை நினைத்து மெய்சிலிர்த்துப் போவார்! எங்கிருந்தாலும் வாழ்க என செந்தில்பாலாஜிக்கு வாழ்த்தியதைப் போல் நம்மையும் வாழ்த்தத்தான் செய்வார் என்று பேசிக் கொள்கின்றனர்.
இந்நிலையில்தான், தஞ்சாவூருக்கு வந்த தினகரனை அக்கட்சியின் முக்கியத் தலைகளான தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளதும்! தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தினகரன் எப்போது தஞ்சைக்கு வந்தாலும் உடன் வருவது வழக்கம்! ஆனால், அவர்கள் யாரும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனால் அவர்கள் அதிமுக.,வுக்கு தாவுவதற்காக எடுத்துவரும் புத்திசாலித்தன நடவடிக்கை குறித்த செய்திகள் உண்மைதான் என்று இப்போது பரபரப்பாகப் பேசப் பட்டு வருகிறது.




