வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 42 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி; ஒருவர் கைது….!

kithauவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 42 பேர்களிடம் ரூ.51 லட்சத்தை சுருட்டிய வேலை வாய்ப்பு நிறுவன அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூரை சேர்ந்தவர் பெரியண்ணபாபு (வயது 31). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

பட்டப்படிப்பு படித்துள்ள நான் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கு முயற்சித்து வந்தேன்.

வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த அருள் (38) என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் சாய்பாபா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை அருள் நடத்தி வந்தார்.

தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்துடன் எனக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக ரூ.4.70 லட்சம் பணம் என்னிடம் வாங்கினார். நான் உள்பட 11 பேர் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.

தாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிறகு தான் சுற்றுலா விசாவில் நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

நாங்கள் ஏமாற்றப்பட்டோம். சுற்றுலா விசா முடியும்வரை தாய்லாந்து நாட்டில் கூலி வேலைசெய்தோம்.

நாங்கள் அங்கிருந்தபடியே அருளிடம் தொடர்புகொண்டோம். தாய்லாந்து நாட்டில் இருந்து மெக்காவிற்கு எங்களை வேலைக்கு அனுப்புவதாக அருள் கூறினார்.

அதையும் அவர் செய்யவில்லை.

நாங்கள் கடும் போராட்டம் நடத்தி தமிழகம் வந்து சேர்ந்தோம்.

அருள் ஒரு மோசடி பேர்வழி. வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 42 பேர்களிடம் ரூ.51 லட்சம் வரை சுருட்டி மோசடி செய்துள்ளார்.

தற்போது மேற்கு மாம்பலத்தில் செயல்பட்ட தனது வேலைவாய்ப்பு நிறுவனத்தை மூடிவிட்டு அருள் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

பி.எஸ்சி. பட்டதாரியான அருள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வெளிநாட்டு வேலை மோகத்தில் இருந்து வரும் இளைஞா்கள் இப்படிப்பட்ட மோசடி பேர்வழிகளிடம் சிக்கி ஏமாறுவது தொடா் கதையாகவே இருந்து வருகிறது.