“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?”

11150966_886065974767790_8191087934717149385_n

“ஒரே இருட்டாய் போயிடுத்தே.
யானை மிரண்டுடுத்தே?”
 
(பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?)
 
சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்கு
விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில்
நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில்
புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
 
திடீரென்று ஏற்பட்ட மின்தடையால் எல்லா
விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை
மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று
நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன.இடையில் புதுப்பெரியவாளும்
யானையிலிருந்து பத்திரமாக இறங்கிவிட்டிருந்தார்கள்.
 
வீதிவிளக்குகள் அணைந்ததும் என் (டி.வி சுவாமிநாதன்)
இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்ததன்
காரணத்தைக் கேட்பதற்காக மின்வாரியத்துடன்
தொடர்பு கொண்டேன். அதற்குள் எல்லாம் சரியாயிற்று
என்று அறிந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து
கொள்ளப் புறப்படும் சமயத்தில்காஞ்சியிலிருந்து
ஒரு மின்னல்வேக டெலிபோன் அழைப்பு.
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர்
விசாரித்தார்.”ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம்
உண்டாயிற்றா?
 
நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன் நான் வினவினேன்.
 
“அந்த சம்பவம் நடந்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை,
அதற்குள் எப்படி நீங்கள் இதுபற்றி விசாரிக்கிறீர்கள்?”
 
ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக்
கொண்டிருந்தாராம்.
 
“நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான்
மலையாள ராஜ்யத்தில் யாத்திரை செய்த போது
இருந்ததைவிட விமரிசையாக,புது சுவாமிகள்
ஊர்வலத்திற்கு இன்று தடபுடலான ஏற்பாடுகள்…”
 
இவ்விதம் அருளிக்கொண்டே இருந்த பெரியவர்,
திடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே.
யானை மிரண்டுடுத்தே?” என்று முன்பின்
சம்பந்தமில்லாமல் கவலையோடு சொன்னார்களாம்.
 
உடனே எர்ணாகுளத்திலிருந்த என்னைக் கூப்பிட்டு,
‘என்ன நடந்தது என்று அறியப் பணித்தார் என்று
கூறினார்.
 
பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?