
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே #திருவள்ளுவர் உருவம் முனிவரைப் போல ஜடாமுடி தரித்து, திருநீறு அணிந்து, பூணூல் அணிந்து கம்பீரமான தோற்றத்துடன் தான் காணப்பட்டது. அதில் எந்தவிதப் பிரச்சனையும் இருந்ததில்லை.
பின்னால் அரசாங்கம் அவரது அங்கீகரிக்கப்பட்ட படத்தை வெளியிடும் பொழுது, உள்ளே ஏதும் இருக்கின்றதா இல்லையா என்று எவரும் சந்தேகிக்கும் வண்ணம், “உண்டென்றால் உண்டு – இல்லையென்றால் இல்லை” என்பது போல வள்ளுவருக்குத் தோளிலே ஒரு பெரிய துண்டு போர்த்திய படம் ஒன்று வந்தது. அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லை.
குமரிமுனையில் கலைஞர் அவர்களது முயற்சியினால் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன். அப்போது முதல் அநேகமாகத் திருவள்ளுவரை நின்ற தோற்றத்தில் கம்பீரமாகத் தான் வெளியிட்டார்கள். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை.
இன்று யாரோ ஒருவர் இதுபோன்ற தோற்றத்தில் வள்ளுவரது படத்தை வெளியிட்டார் என்பதற்காக அதை விமர்சிப்பதும், பிரச்சனை ஆக்குவதும் விரும்பத் தக்கதல்ல.
எனக்கென்ன வயிற்றெரிச்சல் என்றால், நான் வணங்கும் பாரதியை, எப்பொழுதும் நெற்றியிலே குங்குமத்தோடு காட்சியளிக்கும் பராசக்தியின் பக்தனை, அரசாங்கம் குங்குமம் இல்லாமல் தான் ஓவியமாக்கி வெளியிட்டது. நான் எந்த பாரதி விழாவில் கலந்து கொண்டாலும், ஒவ்வொரு முறையும் நான் எனது கையினால் பாரதிக்குக் குங்குமத் திலகமிட்டுத் தான் அவரை வணங்கி வருவேன்.
ஆகவே, இது அவரவரது எண்ணத்தின் பிரதிபலிப்பு. இதைப் பெரிதாக்குவது பொருத்தமல்ல.
திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறை. ஆனால் அந்தப் பொதுமறைக்கு நாங்கள் தான் சொந்தமெனக் கொண்டாடுவதற்கு ஹிந்துக்களுக்கு உரிமை இருக்கிறது. குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு அந்த உரிமை அதிகம் இருக்கிறது.
- இல. கணேசன் (மாநிலங்களவை உறுப்பினர், பாஜக.,)



