
தெலங்கானாவில் அதிர்ச்சி ஊட்டும் விதமாக, பெண் தாசில்தார் ஒருவரை விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார் விஜயா ரெட்டி கொலை மீது நாளை மாநில அளவில் பந்த் நடத்த தீர்மானித்துள்ளனர். வருவாய்த் துறை ஊழியர் சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் செய்ய உள்ளன. நாளை மாநில அளவில் பணியாளர்கள் பணி நிறுத்தம் செய்வது என்று தீர்மானித்துள்ளனர்.
அதேநேரம் விஜயாவின் இறுதி ஊர்வலத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். விஜயா ரெட்டி சிறந்த அதிகாரி என்று தெலங்காணா பணியாளர்கள் ஜெஏசி ‘காரம்’ ரவிந்த்ர ரெட்டி மற்றும் பொதுச் செயலர் மமதா ஆகியோர் குறிப்பிட்டனர்
பொதுமக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாமல் போனது துரதிருஷ்டம் என்றனர்.
உஸ்மானியா மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து பணிகளிலும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஹைதராபாத்துக்கு திரண்டு வர வேண்டும் என்று துணை ஆட்சியர்கள் அசோசியேஷன் தலைவர் வி லச்சிரெட்டி, மற்றும் தாசில்தார் அசோசியேஷன் தலைவர் எஸ். ராமுலு ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உயிரிழந்த விஜயா ரெட்டிக்கு 10 வயதில் பெண்ணும் ஐந்து வயதில் மகனுமாக இரு சிறு குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியராக இருந்த விஜயா அதனை ராஜினாமா செய்துவிட்டு கிரேட் 2 தேர்வு எழுதி எம்ஆர்ஓ.,வாக சேர்ந்ததாக அவர் தந்தை லிங்காரெட்டி தெரிவித்தார்.
விஜயா நேர்மையான அதிகாரியாக விதி முறைகளோடு பணியாற்றியவர் என்று அலுவலக சக பணியாளர்கள் குறிப்பிட்டனர். மாநில அளவில் வருவாய்த்துறை பணியாளர்கள் வேலையை நிறுத்தி தாங்கள் பணியில் ஈடுபடப் போவதில்லை என்று கூறி, தரையில் அமர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதனிடையே தாய் இறந்த செய்தி கேட்டு, குழந்தைகள் தாயின் மறைவுக்குக் கதறும் காட்சி காண்போரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது!