spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று பீஷ்மாஷ்டமி: நல்லது செய்யுங்க... நல்லா இருங்க!

இன்று பீஷ்மாஷ்டமி: நல்லது செய்யுங்க… நல்லா இருங்க!

- Advertisement -

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள்.

இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.

அவரிடம் பீஷ்மர், “நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?” என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், “பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்” என்று சொல்கின்றார்.

பீஷ்மருக்குப் புரிந்தது. “பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?” என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

வியாசர் அதற்கு, “பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, “கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!” என்று சொல்கின்றார்.

அப்போது,” என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்,” என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, “பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார்.

நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்,” என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், “வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும்.

ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்.” என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

உத்தராயண காலம் ஆரம்பமானது. தை மாத ரத சப்தமிக்கு அடுத்த நாள், பீஷ்மர் தான் விரும்பியபடி உயிர் துறந்தார். அந்த நாள் அஷ்டமி திதி. அதுவே, “பீஷ்மாஷ்டமி’ என்று போற்றப்படுகிறது.

பீஷ்மர் பிரம்மச்சாரி. அவர் முக்தி அடைந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க வாரிசுகள் இல்லாததால், அவர்மீது அன்பு கொண்டவர்கள், தகப்பனார் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சமூகத்தினரும் தர்ப்பணம் கொடுத்தார்கள். அதுவே இன்றும் வழக்கத்தில் உள்ளது. சாஸ்திரம் அறிந்தவர்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும் என்பர். பீஷ்மாஷ்டமி நாளில் யார் வேண்டுமானாலும் பீஷ்மருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்!

  • மச்சேந்திரன் புகழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe