spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமக்களாட்சி தழைக்க... தேர்தல் சீர்திருத்தங்கள்!

மக்களாட்சி தழைக்க… தேர்தல் சீர்திருத்தங்கள்!

- Advertisement -

இப்போது, தேர்தல் களம் அரசியல்வாதிகளின் மேய்ச்சல் காடாகி விட்டதோ என்று தோன்றுகிறது. தேர்தல் ஆணையம், தேர்தல் காலத்தில் விருந்துகள், பிரியாணி, கோழி, ஆடு, கறி வகைகள், மது என்று கொடுத்து வாக்காளர்களைக் கவர்வதைத் தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் அனுப்பியது. அதற்காக அந்தந்த மாநில காவல் துறையைச் சார்ந்தவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். கட்சி அவர்களது வேட்பாளர்களுக்குச் செய்யும் செலவு போன்றவற்றை காவல் துறை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மாநில அரசுக்குக் கட்டுப்பட்ட காவல் துறையிடம் இந்தப் பணியை ஒப்படைத்தால் சரியாக இருக்குமா?

ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல்; மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்ற மகத்தான கருத்துக்கு ஒப்ப தேர்தலை வெறும் சம்பிரதாயமாக நினைக்காமல் சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களால் மக்களை ஆளும் உண்மையான பிரதிநிதிகள் வெற்றி பெறவேண்டும். அந்நிலையில்தான் தேர்தல் மூலம் ஜனநாயகம் சமதர்ம அமைப்பைக் காண முடியும். நமது நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் தேர்தலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

ஆங்கிலேயர் காலத்தில் சைமன் கமிஷன் வந்து போன பின்பு 1931இல் வைஸ்ராய் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடுகளுக்குத் தேர்தல் நடைமுறைகளை வகுத்தளித்தது. எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஆங்கிலேயர் தேர்தல் நடைமுறையிலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி வண்ணத்தில் வாக்கு பெட்டிகளை அறிமுகம் செய்தார்கள். இன்னும் சுவாரஸ்யங்களும் உண்டு. இப்போது ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்குத் தனித்தனி தொகுதிகள் உள்ளது போல 1946 காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெனத் தனித் தொகுதிகள் இருந்தன. 1952ஆம் ஆண்டு வரை எல்லோருக்கும் வாக்களிக்க உரிமை கிடையாது. கல்வித் தகுதி பெற்றோர் மற்றும் சொத்து வரி கட்டுவோர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தார்கள். 1952இல்தான் 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

தற்போதுபோல காது கிழியும் ஒலி பெருக்கிகள், டிஜிட்டல் பேனர்கள், தொலைக்காட்சி மூலம் பிரசாரம் என எதுவும் அப்போது கிடையாது. துண்டுப் பிரசுரங்கள் மூலம் தங்கள் வாக்குறுதிகளைச் சொல்லி வீடு வீடாகச் சென்றுதான் வாக்கு சேகரிப்பார்கள். வேட்பாளர் என்ற சொல் அப்போது கிடையாது. அபேட்சகர் என்றுதான் சொல்வார்கள். 1937 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வண்ணப்பெட்டிகள் அறிமுகமானது. மஞ்சள் (காங்கிரஸ்), சிவப்பு (நீதிக்கட்சி), பச்சை (முஸ்லிம் லீக்), ஊதா, கருநீலம் (சுயேச்சை) ஆகிய 5 பெட்டிகள் இருக்கும். எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்ய 17ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரலாம் என 1961ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் பிரிவு49-ஜில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று 17ஏ விண்ணப்பத்தில் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு கையெழுத்திட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தில் விருப்பம் இல்லாதது குறித்து தனியாக பட்டன் அமைக்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உலகிற்கே தேர்தலை அறிமுகப்படுத்திய பெருமை தமிழகத்திற்கு உண்டு. பண்டைய கிரேக்க நகர அரசுகளிலும் இதுபோன்ற நடைமுறை இருந்ததாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிராம நிர்வாக சபைக்குத் தேர்தல் நடந்துள்ளது.

இதை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டுகள் 10ஆம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன் காலத்தைச் சேர்ந்தவை. இரு கல்வெட்டுகளில் அன்று தேர்தல் நடந்த விதம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்பொருள் துறை கல்வெட்டு ஆய்வாளர் ராஜவேலு கூறியதாவது:

உத்திரமேரூரில் வேளாண்மை பிரதானத் தொழில். 30 குடும்புகள் (குடும்பு – வார்டு) கொண்ட 12 சேரிகள் இருந்தன. கிராமத்தை கிராம நிர்வாக சபை நிர்வகித்து வந்தது. இச்சபையில் தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், ஆண்டு வாரியம், பஞ்சவாடி வாரியம் ஆகியவை இருந்தன. குடும்புக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வாரியங்களுக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். உறுப்பினர் தேர்வு வேட்பாளர், உறுப்பினர்களுக்கான தகுதிகள், ஓட்டுரிமை தகுதி பல்வேறு விதிமுறைகளுடன் நடந்தது. வேட்பாளர்களுக்கான தகுதிகள் – போட்டியிட விரும்புவோருக்கு அதே ஊரில் கால்வேலி நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும். சொந்த மனையில் வீடு கட்டியிருக்க வேண்டும். 35 வயதில் இருந்து 70 வயதுக்குள் இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன் வரை எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அதற்கு முன் உறுப்பினராக இருந்திருந்தால் ஆண்டுதோறும் அவரது சொத்துக் கணக்கை முறையாகத் தெரிவித்து இருக்க வேண்டும்.

ஒழுக்கத்துடனும், ஆசாரத்துடனும் இருக்க வேண்டும். செயலாற்றுவதில் திறமையானவராக இருக்க வேண்டும். தீய பழக்கங்களைக் கொண்டவராக இருக்கக் கூடாது. திருடுதல், பொய் சொல்லுதல், பிறன் மனை நாடுதல் போன்ற பாவங்களைச் செய்திருக்கக் கூடாது.

உறுப்பினராக இருந்தபோது லஞ்சம் பெற்றவராக இருக்கக் கூடாது. தேர்தல் வைகுந்த பெருமாள் கோயிலின் மக்கள் மன்றத்தின் முன் நடத்தப்பட்டது. தேர்தலில் நிபந்தனைக்குள்பட்டு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தேர்தலுக்கு முன்னதாகத் தேர்தல் ஊழியர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் குடத்துடன் செல்வார்கள். போட்டியிட விரும்புபவர்கள் தங்கள் பெயரைப் பனை ஓலையில் எழுதிக் குடத்தில் இடுவர். இது இப்போதைய வேட்புமனு தாக்கலுக்கு நிகரான நிகழ்வு என்று கருதலாம்.

பின் மன்னரின் பிரதிநிதி, ஊர் பிரதிநிதிகளுடன் இணைந்து மக்கள் மன்றத்தில் தேர்தலை நடத்துவார். சிறுவன் ஒருவன் ஒவ்வோர் ஓலையாக எடுப்பான். தேர்தல் அலுவலர் மக்களிடம் தனது இரு கைகளையும் அகல விரித்து, தன்னிடம் வேறு ஓலைகள் இல்லை என்பதை காண்பிப்பார். பின் சிறுவன் கொடுத்த ஓலையை வாங்குவார். அதில் உள்ள பெயரைப் படிப்பார். அதே பெயரைக் கடவுள் சாட்சியாக மற்றொருவர் படிப்பார். பிறகு வேட்பாளர் பெயர், அவர் பற்றிய விவரங்கள் போன்றவை ஊழியரால் உறப்பப் படிக்கப்படும். பிறகு மக்கள் தாங்கள் விரும்பும் நபரின் பெயரை ஓலையில் எழுதிக் குடத்தில் போடுவார்கள். அங்கேயே குடத்திலுள்ள ஓலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்பட்டு எண்ணப்படும். இதுவே குடவோலை முறை.

பாலாறு அருகில் உள்ள கல்வெட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி தன்னுடைய சொத்துக் கணக்குகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது என்பதெல்லாம் கடந்தகால நிகழ்வுகள். இதே காலகட்டத்தில் கிரேக்க நகரங்களிலும் இந்த நடைமுறை இருந்தது. தேர்தல் களத்தில் திருட்டு வாக்குகள் போடுதல் என்பது மிகவும் சாதாரணம் ஆகிவிட்டது. அரியானா மாநிலம் மேஹம் தொகுதியில் நடந்த தேர்தல் தொலைக்காட்சி மூலம் மக்கள் மன்றத்தில் அம்பலமானது. அது இன்றுவரை தொடர்கிறது.

தேர்தல் அத்துமீறல்களைக் கண்காணிக்க, நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், ரஜினி கோத்தாரி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் இன்டிபெண்டட் இனிசியேட்டிவ் என்ற ஒரு மக்கள் மன்றத்தை உருவாக்கி இருந்தனர். இந்த அமைப்பு மூலம் தேர்தலில் ஜனநாயக நெறிகளுக்கு அடையாளம் காட்டக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது. ஊடகங்கள், படித்தவர்கள் மற்றும் விவரம் தெரிந்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த அமைப்பு செயல்படாமல் ஆகிவிட்டது.

தேர்தல் ஜனநாயகத்தின் நாற்றங்கால், மக்கள் நல அரசுக்கு அடிப்படையாகும். தேர்தல் நேர்மையாக நடக்க உரிய சீர்திருத்தங்கள் அவசியம். எனவே உச்சநீதிமன்றம் பொதுநல வழக்கில் கல்வி, குற்றப் பின்னணி, சொத்து விவரமும் வாக்காளருக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. தங்களுடைய முழுமையான விவரங்களை பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விவரங்கள் குறிப்பிட்டுத் தெரியப்படுத்தவில்லையென்றாலும், அந்த விவரங்கள் மறைக்கப்பட்டாலும் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படும்.

முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமானால், தேர்தல் முறையில் பல மாற்றங்களைச் செய்தாக வேண்டும். 57 ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என்று தோன்றுகிறது. அதிகார பலத்தையும், பண பலத்தையும், ஆள் பலத்தையும் கொண்டு தேர்தலைச் சந்திக்கின்ற வேட்பாளர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பணத்தைக் கொண்டு வாக்குகளை வாங்குவது, குண்டர்களைக் கொண்டு திருட்டு வாக்குகளைப் போடுவது ஆகியவைகளைத் தடுக்கும் வகையில் குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். தேர்தல் களத்தில் மதம், ஜாதி என்ற அடிப்படையில் பிரச்சார யுக்திகள் கையாறப்பட்டு வாக்குகள் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், ஜந்து மாதங்களுக்குள் அந்தத் தேர்தல் எந்தவிதக் காரணமுமின்றித் தள்ளி வைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் காலத்தில் ஆட்சியிலுள்ள கட்சி, அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தா வண்ணடம் அனைத்துக் கட்சி கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றி பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் போது அந்த மாநிலத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற கட்சிகளிடம் சொல்லி அவர்களிடையே ஒத்த கருத்தை உண்டாக்கிய பின் நியமிக்க வேண்டும். சிறையில் குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் சிறையில் இருந்து போட்டியிடலாம். சிறையில் அல்லது காவலில் உள்ள குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ள வகையில் பிரதிநிதித்துவச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.

தேர்தல் சம்பந்தமான பிரச்சினைகளை வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்தால் வழக்கு முடிவுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். தற்போது தேர்தல் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்புதான் தீர்ப்புக் கிடைக்கிறது. மாநில அவை உறுப்பினர்களாக அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இருப்பதுபோல, நமது நாட்டிலும் மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வேற்றுமை இல்லாமல் சமமாக இருக்க வேண்டும். இம்மாதிரி தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய பல குழு மத்திய அரசால் இதுவரை அமைக்கப்பட்டன. ஆனாலும், குழுக்கள் பரிந்துரை செய்த தேர்தல் சீர்திருத்தம் முழு வெற்றியை அடையவில்லை.

ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லவர்கள், வல்லவர்கள் இருத்தல் வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். அரசியலுக்கு அச்சாணி தேர்தல். தற்போதைய தேர்தலில் பணபலமும், குண்டர் பலமும் முக்கியமான அங்கங்களாக இருக்கின்றன.

இவை ஒழிய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்றும், 1998ல் இந்திரஜித் குப்தா தலைமையில் அமைந்த குழு பரிந்துரைத்த வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கவேண்டும் போன்ற சீர்திருத்தங்களை செயல்படுத்த வழக்கு தொடுத்துள்ளேன்.

இந்த வழக்கு ஆவணங்களை படித்துக்கொண்டிருக்கும்போது இதுவரை இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தத்திற்காக பல குழுக்கள் அமைத்துள்ளன. அவை,

  1. கூட்டு நாடாமன்ற குழுவில் தேர்தல் சீர்திருத்த அறிக்கை – 1971 (இது ஜெகநாத ராவ் தலைமையில் இயங்கியது). இந்த அறிக்கை 18.1.1972ல் வழங்கப்பட்டது.
  2. தார்குண்டே கமிட்டி
  3. தினேஷ் கோஸ்சாமி கமிட்டி – 1990
  4. ஓரா கமிட்டி – 1993
  5. இந்திரஜித் குப்தா கமிட்டி – 1998
  6. லா கமிஷன் அளித்த தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிக்கை – 1999
  7. அரசியலமைப்புச் சட்ட திருத்த தேசியக் குழு – 2000
  8. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த அறிக்கை – 2004
  9. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த அறிக்கை – 2008
    மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகள் என பரிந்துரைகளும், அறிக்கைகளும் தான் உள்ளன. செயல்பாடுகள் இல்லை.

இன்றைக்கு Election for Sale என்றே வெளிப்படையாக தயக்கமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். Vote Buying, Policy, Electoral Market, Public or Private Goods Selections? Vote buying trust-worthy brokers, Budget for Vote buying என்ற வார்த்தைப் பதங்களை ஒரு தத்துவம் மாதிரி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

Frederic Charles Schaffer தொகுத்த Elections for Sale என்ற நூலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை முறைப்படுத்தி எழுதியதையெல்லாம் பார்க்கும்பொழுது மிகவும் அபத்தமாகவும் கவலையாகவும் இருந்தது. இப்படி நிலைமைகள் நீடித்தால் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டிப் படிப்பதைப் போன்று, எம்.எல்.ஏ., எம்.பி. பதவியையும் பணம் கட்டி எந்தவித தியாகமும் இல்லாமல் பிடித்துவிடலாம். அரசியல் வியாபாரம், தொழில் என்ற நிலைக்கு வந்துவிடும்.
ஒரு கட்டத்தில் நல்லவர்கள், நேர்மையாளர்கள் அரசியலில் களம் இல்லை என்ற நிலை சிறுக சிறுக வந்துகொண்டிருக்கும். இந்த கேடுகெட்ட பரிணாமம் எதில் போய் முடியுமோ?

1971இல் ஜெகநாத்ராவ் கமிட்டி, வேட்பாளருடைய செலவுத் தொகை போன்றவற்றை ஆராய்ந்து பரிந்துரை செய்தது. 1973இல் மக்களவை மசோதா எண்.100 வேட்பாளரின் தேர்தல் செலவு மற்றும் சட்டத்தை மீறி வாகனங்கள் அமர்த்துவது, தவறாக வாகுகுகளைப் பெறுவது குறித்த மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. நீதிபதி தார்குண்டே குழு, தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றும், இடைத் தேர்தல்கள் ஆறுமாத காலத்துக்குள் நடத்தவேண்டும் என்றும், தேர்தல் வழக்குகளை உடமே முடிக்க வேண்டும், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளைச் செய்தது.

கோஸ்வாமி குழு, ஒரு நபர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது. தேர்தல் காலத்தில் அதிகாரிகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளைச் செய்தது. இந்திரஜித் குப்தா குழு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசாங்கமே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்வது போல் இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அரசே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருடைய செலவை ஏற்றுக்கொண்டு அவருடைய பிரச்சாரக் கருவிகள், சுவரொட்டிகள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு ஆகும் செலவுகளை மனதில் கொண்டு அரசு பொறுப்பில் அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்பது இந்திரஜித் குப்தா குழுவின் பரிந்துரை.

1959 முதல் ஜெர்மனி, 1966 முதல் ஸ்வீடன், 1967 முதல் பின்லாந்து, 1969 முதல் டென்மார்க் மற்றும் இஸ்ரேல், 1970 முதல் நார்வே, 1972 முதல் நெதர்லாந்து, 1974 முதல் இத்தாலி, 1976 முதல் ஜப்பான், 1977 முதல் ஸ்பெயின், 1989 முதல் தென்கொரியா போன்ற நாடுகள் தேர்தல் செலவை அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. மெக்சிகோ, போர்ச்சுகல், ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது. ஏறத்தாழ 71.5 கோடி வாக்காளர்கள், 8 இலட்சத்து 28 ஆயிரத்து 804 வாக்குச்சாவடிகள் என்ற நிலையில் ஐந்து கட்ட வாக்குப்பதிவு இன்றோடு (13.5.2009) முடிகிறது. 543 மக்களவைத் தொகுதியில் 499 தொகுதிகள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறையில் ஆயிரம் சீர்திருத்தங்கள் செய்தாலும் மக்களாட்சி தழைத்து ஆரோக்கியமான அரசிய்ல செயல்பட வேண்டுமானால் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை சரியாக, சரியான வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். அதுவே அடிப்படையாகும்.

ஆமாம் சாமி போடும் கைநாட்டுகளாக இல்லாமல், தகுதியும் திறமையும் மிக்க வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்துவது அரசியல் கட்சிகளின் கடமை. தகுதி இல்லாதவர்களை நிராகரித்து மக்களாட்சிக்கு மகத்துவம் சேர்ப்பது வாக்காளர்களின் கடமை. இந்தியக் குடியரசு பற்றி ஓர் ஆறுதலான விஷயம் என்னவென்றால், பக்கத்தில் உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் மாதிரி இல்லாமல் நம்மிடத்தில் ஸ்திரத் தன்மை உள்ளது என்பதுதான்.

  • கே.எஸ். இராதாகிருஷ்ணன், (வழக்குரைஞர், செய்தித் தொடர்பாளர், திமுக.,)

இணையாசிரியர், கதைசொல்லி, [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe