திருப்புகழ் கதைகள் பகுதி 36
சருவும்படி (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திருமாலின் மருமகப் பிள்ளையே, கடல் ஒலியைப் போல மங்கல வாத்தியங்களின் ஒலிமிகுந்துள்ள செந்திலம்பதியில் எழுந்தருளிய முருகக்கடவுளே, வானளாவிய திருப்பரங்குன்றத்தில் வாசஞ் செய்கின்ற பெருமாளே, மன்மதனாலும், சந்திரனாலும், தென்றலாலும், குயிலினத்தாலும் ஆசைப் பெருக்கத்தை யடைந்து அயர்வுற்று வருந்திய அடியேன் இனித் தேவரீரது திருவடியை அடைவேனோ? என அருணகிரியார் திருப்பரங்குன்றம் திருத்தலத்தில் பாடிய திருப்புகழ் இது.
சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் …… வசமாகிச்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட …… திறமாவே
இரவும்பகல் அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் …… அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் …… அடைவேனோ
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ….பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் …… மருகோனே
மருவுங்கடல் துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் …… முருகோனே
மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் …… பெருமாளே.
இந்தத் திருப்புகழில் ஆயர்கள் இல்லத்தில் கண்ணபிரான் தயிர் உண்ட கதையும், வண்டமிழ் பயில்வோர் பின்னால் செல்பவன் திருமால் என்ற செய்தியும் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆயர்கள் வீட்டில் தயிர் உண்டவன்
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ….பயில்வோர்பின்
என்ற திருப்புகழ் வரிகளில் திருவொன்றி விளங்கிய அண்டர்கள் என்பதற்கு கண்ணபிரானுடைய தெரிசனம் தினமும் கிடைத்ததாலும் தூய்மையும் தெய்வபக்தியும் மனதில் எப்போதும் நிறைந்திருந்தபடியாலும் ஆயர்பாடியிலுள்ள ஆயர்கள் செல்வத்தால் சிறந்து விளங்கி யிருந்தார்கள். என்பது பொருளாகும். அந்த ஆயர்கள் மிகவும் பக்தியுடையவர்களாக இருந்து அற வழியில் செல்வம் தேடினார். ஆனபடியால் அவர்கள் வீட்டிலுள்ள அவர்கள் தயிர் நெய் பாலை அன்புடன் கண்ண்பிரான் உண்டார்.
வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்
ஸ்ரீமன்நாராயணன் தமிழ் மொழியின் இனிமையில் மிகவும் அன்புடையவர். எனவே தெளிவுடைய செந்தமிழைப் பயில்வாரது பின்னர் அவர் பாடும் தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டுத் திரிபவர். இப்பொழுதும் பெருமாள் ஆலயங்களில் வடமொழி வேதபாராயணம் அவருக்குப் பின்னே தொடர்ந்து வர அவருக்கு முன் தமிழ் மொழியிலுள்ள நாலாயிரப் பிரபந்த பாராயணம் போக, அதனைத் தொடர்ந்து நாராயணர் ஊர்வலம் செல்லுகிறார். தமிழின் பெருமைதான் என்னவென்று சொல்வது? இத்தனிச் சிறப்பு வேறு எந்த மொழிக்குத்தான் உண்டு?
உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலைசிறந்த மொழி, தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும்.
இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய், இறையனார் என்ற பெயரிலே இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்,
பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கு “பித்தா பிறைசூடி” எனவும், சேக்கிழாருக்கு “உலகெலாம்” எனவும், அருணகிரிநாதருக்கு “முத்தைத் தரு” என்றும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும், இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.
கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.
எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்.
இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்.
குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்.
கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ்.
பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.
இத்தகைய தமிழ் பாடுவோர் பின்னால் தாமோதரனார் சென்ற வரலாற்றை நாளைக் காணலாம்.