
அவருடைய வாழ்க்கையே ஒரு சங்கீத அருவி. ‘சுஸ்வர மகரிஷி’ யான அவருக்கும் அவருடைய சங்கீதத்திற்கும் என்றும் இளமையே நிலவும் என்று நிரூபித்தவர் பாலமுரளிகிருஷ்ணா.
கர்நாடக சங்கீதம் என்றாலே உடனே நினைவுக்கு வருபவர் பாலமுரளிகிருஷ்ணா.
இவர் 6 ஜூலை 1930ல் கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கரகுப்தா என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தாயார் சூரியகாந்தம். தந்தை பட்டாபிராமய்யா. தாயார் வீணைக் கலைஞர். தாத்தாவான ப்ரயாக ரங்கதாசு சிறந்த இசைக் கலைஞர்.
இவர் பல கீர்த்தனைகளை எழுதி ஸ்வரம் கட்டியுள்ளார். அவை ப்ரயாக ரங்கதாசு கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ் பெற்றுள்ளன. பாலமுரளிகிருஷ்ணா அவற்றை பாடியுள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணா சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவர் 7வது வயதில் இருந்து கர்நாடக சங்கீத கச்சேரி செய்ய தொடங்கினார். ஒன்பதாவது வயதில் வயலின் மிருதங்கம் கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதில் கூட திறமை பெற்றார்.
மகனின் சங்கீத ஞானத்தை அடையாளம் கண்ட தந்தை பட்டாபிராமய்யா பாலமுரளி கிருஷ்ணாவை பிரம்மஸ்ரீ பாருபல்லி ராமகிருஷ்ணய்யா என்பவரிடம் சீடராகச் சேர்த்து விட்டார். அதன்மூலம் மங்களம்பல்லி பாலமுரளிகிருஷ்ணாவின் வாழ்க்கைக்கு ஒரு மார்க்கம் பிறந்தது. படிப்பை முடித்த பின் பாலமுரளிகிருஷ்ணா விஜயவாடா அரசு சங்கீத கல்லூரியில் பிரின்ஸ்பாலாக சிலகாலம் பணிபுரிந்தார்.

சிறிது காலத்தில் மதராசிலேயே நிலைபெற்று வசித்து தமிழ் கன்னடம் மலையாளம் மொழிகளைக் கூட திறம்படக் கற்றார். சுமார் 30,000 கச்சேரிகளுக்கு மேலாக செய்துள்ளார். அன்னமய்யா கீர்த்தனைகள் ராமதாஸர் கீர்த்தனைகள் பக்தி பாடல்கள் மெல்லிசை பாடல்கள்… என்று இவர் பாடிய பாடல்களுக்கு அளவே இல்லை.
ஆயிரக்கணக்கான கேசட்டுகள், ரெக்கார்டுகள் ரிலீஸ் ஆயின. பாலமுரளிகிருஷ்ணா பாடகர் மட்டுமல்ல… 72 மேளகர்த்தா இராகங்களில் கீர்த்தனைகள் எழுதியுள்ள வாகேயக்காரர். லவங்கி, த்ரிசக்தி, மஹதி போன்ற சிறந்த ராகங்களை படைத்த சங்கீத சரஸ்வதி பாலமுரளிகிருஷ்ணா.

சினிமா பாடல்கள் கூட மிக அற்புதமாக பல மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா சினிமாவில் நாரதராக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். ஹம்சகீதா என்ற கன்னட படத்தில் இசை அமைத்ததோடு மிகச் சிறந்த பாடகராக விருது பெற்றார்.
மத்வாச்சாரியார் படத்திலும் தேசிய விருது பெற்றார். கான சுதாகர, சங்கீத சாம்ராட், சங்கீத கலா சரஸ்வதி, களா ப்ரபூர்ணா, கான கந்தர்வா போன்ற நூற்றுக்கணக்கான விருதுகள் இவருக்கு சொந்தமாயான. அதுமட்டுமின்றி பிரெஞ்சு அரசாங்கத்திலிருந்து மிகவும் கௌரவம் பொருந்திய சேவலியர் அவார்டு பெற்ற ஒரே கர்நாடக சங்கீத வித்வான் இவர்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்



