
சாமை வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி
தேவையான பொருட்கள்:
சாமை – 100 கிராம்,
பாசிப்பருப்பு – 25 கிராம்,
வெந்தயம் – 2 டீஸ்பூன்,
தேங்காய் – ஒரு மூடி (சிறியது),
பெரிய வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 7 பல்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
பட்டை – 2 சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) – தலா 2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சாமை, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு, பூண்டு இரண்டையும் ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிவைக்கவும். பச்சை மிளகாயையும் வட்டமாக நறுக்கிவைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய்விட்டு பட்டையைத் தாளிக்கவும். பின்னர் இதனுடன் பூண்டு, சோம்பு சேர்த்துப் புரட்டவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். கொத்தமல்லியும் புதினாவும் லேசாக வதங்க ஆரம்பிக்கும்போது வெங்காயத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இதனுடன் ஒரு பங்கு சாமைக்கு ஆறு பங்கு என்கிற கணக்கில் தண்ணீரை ஊற்றவும். கூடவே தேவையான அளவு உப்பையும் இதில் சேர்க்கவும். பிறகு இதனுடன் களைந்து வைத்த அரிசி – பருப்புக் கலவையையும் சேர்த்துக் கலக்கி பத்து விசில் வரும்வரை குக்கரில் வேகவைக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியபின் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கி மேலாக சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவினால், சாமை வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி மிகவும் கெட்டியாகத் தெரிந்தால் தேவைக்கேற்ப வெந்நீர் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் கஞ்சியில் மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.