வெஜிடபிள் இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 250 கிராம்,
கேரட் – ஒன்று,
பீன்ஸ் – 5,
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (தோலுரித்தது),
குடமிளகாய், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். பின்னர் வெறும் வாணலியில் அரைத்த மாவை ஊற்றிக் கெட்டியாகக் கிளறவும். கிளறிய மாவை நன்கு பிசைந்து நீளவாக்கில் உருண்டைகளாக உருட்டவும்.வாணலியில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளை அதில் போட்டு வேகவைக்கவும்.
உருண்டைகள் வெந்து தண்ணீரின் மேலே மிதந்து வரும்போது எடுத்துவிடவும். வேகவைத்த ஒவ்வோர் உருண்டையையும் இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் பச்சைப் பட்டாணியையும் சேர்க்கவும்.பிறகு இந்தக் கலவையில் மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
வாணலியில் நெய்விட்டு சூடாக்கி இந்தக் காய்கறிக் கலவையை அதில் போட்டு வதக்கி எடுக்கவும். பின்னர் இதை வேகவைத்த இடியாப்பத்துடன் சேர்க்கவும். கூடவே பெருங்காயத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழையையும் சேர்த்து நன்கு கலக்கவும். வெஜிடபிள் இடியாப்பம் தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள மோர்க்குழம்பு ஏற்றது.