
ஓவியர் – அம்புலிமாமா
ஜனவரி 25, 2021, மாலை 5:00 மணி அளவில்,…
பாரத அரசின் உள்துறை அமைச்சகத்திலிருந்து, என் தங்கைக்கு (அவளுடன்தான் என் அப்பா (அம்மா இருவரும்) வசித்தார்.)
ஒரு தொலைபேசி அழைப்பு:
“திரு கே.ஸி. சிவசங்கரன் அவர்களுக்கு இவ்வருட பத்மஸ்ரீ விருது வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!”
“எங்களது வாழ்த்துக்கள்.”
“இந்த செய்தியை, விருது பெறுவோர் பட்டியல் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் ஏற்றப்படும்வரை, உங்கள் நெருங்கிய உறவினர் உட்பட எவரிடமும், தெரியப்படுத்த வேண்டாம்.!”
அவளும் பொறுமையாக ஒரு 2 மணி நேரம் தாக்குப்பிடித்து விட்டு, பின் ஒரு 7 மணி அளவில் என்னிடம் சொன்னாள்!
பின், அரசு வலைத்தளத்தையும், செய்திகளையும் தொடர்ந்து துரத்தி, ஒரு 08:30 அளவில், அனைத்து செய்திகளிலும் வெளியாக துவங்கியது.
அடுத்த 2ம் நாள், மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து, அச்சடித்த அறிவிப்பு வீட்டுக்கே வந்து,.. “விருது வழங்கப்படும் நாள், முறையாக அறிவிக்கப்படும்”, என்றது.
அக்டொபர் 17, 2021.
மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து ஒரு தொலைபேசி:
“தங்கள் அப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது பாரத ஜனாதிபதி அவர்களால் நவம்பர் 9ம் தேதி வழங்கப்பட உள்ளது.”
“நீங்களும் மற்றுமொருவரும் வந்து அப்பா சார்பாக பெற்றுக் கொள்ளலாம்.”
“அதுபற்றிய முழு விவரங்கள் அடங்கிய அச்சடித்த அறிவிப்பு தங்களுக்கு சீக்கிரமே வந்து சேரும்.”
“வாழ்த்துக்கள். விருது நிகழ்ச்சிக்கு தாங்கள் தயாராக இருக்க வேண்டுகிறோம்.!”
பின், அக்டொபர் 18 அன்று, ஒரு ஈமெயில்:
— “தாங்கள் நிகழ்ச்சிக்கு வருவதை,.. உடனடியாக உறுதி செய்யவும்.”
— “உங்களுக்கும், கூட வரும் ஒரு விருந்தினருக்கு (மட்டும்), அனைத்து செலவுகளும் உள்துறை அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.”
— “நவம்பர் 8ம் தேதி துவங்கி, அதிகபட்சம் 3 நாட்கள் வரை, தில்லி சாணக்யபுரியிலுள்ள “தி அசோக்” (5 நட்சத்திர) ஹோட்டலில் தங்கும்/உணவு வசதி (boarding & lodging) செய்யப்பட்டுள்ளது.”
— “தில்லிக்கு வந்ததும், தங்களுக்கும், கூட வரும் (ஒரு) விருந்தினருக்கும், விமான பயண டிக்கட்/ரயிலில் ஏசி முதல்வகுப்பு (அ) இதற்கிணையான சாலைவழி பயண டிக்கட் கட்டணம், (நீங்கள் செலவு செய்தது) திருப்பித் தரப்படும்.”
— “தாங்களும் கூட வரும் ஒரு விருந்தினருக்கும்), உங்கள் வீட்டிலிருந்து, விமான நிலையம், பின் தில்லி விமான நிலையத்திலிருந்து அசோக் ஹோட்டல் வந்தடைய செலவு செய்த டாக்சி பயணச் செலவுத் தொகை (இருவழிக்குமாக) திருப்பித் தரப்படும்.!”
— “தவிர, உங்களுக்கு ஐயாயிரம் ரூபாய், இதர செலவுகளுக்காக தரப்படும்.”
— “அசோக் ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்து திரும்ப, உங்களுக்கென பிரத்யேகமாக ஒரு தனி வண்டி (கார்) ஏற்பாடு செய்யப்படும்.”
— “தற்போதுள்ள சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் காரணமாக, உங்களுடன் வரும் விருந்தினர் தவிர, மேலும் ஒரு விருந்தினர் (உங்களை சேர்த்து மொத்தம் 3 பேர்) மட்டுமே, அனுமதிக்கப்படுவர்!”
— “அசோக் ஹோட்டலில், 8,9,10ம் தேதிகளில் உங்களுக்கு உதவ பிரத்யேக உதவியாளர்கள் குறிப்பிட்ட அறைகளில் இருப்பர்.”
— “நீங்கள் ஹோட்டலில் தங்க பதிவு செய்தபின், அவர்கள் உங்களுக்கும் உங்கள் கூட வரும் விருந்தினருக்கும் (தனித்தனி) அழைப்பிதழ்கள் வழங்குவார்கள்.!”

— “நீங்கள் இந்த அசோக் ஹோட்டலில் தங்காமல் வேறு இடத்தில் தங்க முடிவு செய்தால், அந்த முகவரி விவரங்களை தரவும். அதன்படி உங்களை அங்கிருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று, பின் திரும்ப கொண்டுவிட ஏற்பாடு செய்யப்படும்.”
தோன்றிய கேள்விகளில் பத்துக்கு 8க்கு விடை கிடைத்துவிட்ட நிலையில்.. விமான டிக்கட் புக் செய்து, ஸ்கான் செய்து, கூடவே வங்கிக்கணக்கு விவரங்களுடன், சுய அடையாள விவரங்களை இணைத்து, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்து,..
புது ஊர், தெரியாத 5-நட்சத்திர ஓட்டல் வாசம், போன்ற நடுத்தரவாசி கேள்விகள்/கவலைகளுடன், ஆனால் அந்த எதிர்பாராததை எதிர்பார்த்து, பொங்கும் ஆர்வத்துடன் நவ.8ம் தேதியை நோக்கி நாட்களை நகர்த்திய போது,..
அடுத்த அறிவுறுத்தல்: “RTPCR சோதனையில் (சீன-வைரஸ்) கொரோனா பாதிப்பு இல்லை” எனும் ஆவணம், நிகழ்ச்சியை உள்ளடக்கிய 72 மணி நேர செல்லுபடிக்குள் இருக்கும் விதமாக, கையில் வைத்திருக்க வேண்டும்!”
7ம் தேதி சோதனைக்கு சாம்பிள் தந்துவிட்டு, 8ம் தேதி காலை அச்சடித்த அசல் ஆவணமாக வேண்டும் என அறிவுத்தி,
கொட்டும் மழையில் அந்த MMM மருத்துவமனையில் டாக்டர் வந்து கையெழுத்திட்டு தர 11 மணியானதில், BP எகிறியிருக்குமா எனத் தெரியாத நிலையில்,..
ஊபர் காரன், மழை/சாலைப் பள்ளங்கள் காரணமாக 2 மடங்கு பணம் கேட்டு, ஒருவழியாக அவன் கேட்ட பணத்தை தந்து, விமான நிலையத்தை வந்தடைந்து,..
விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில், பல்சர் பைக் போல வளைந்து வளைந்து ஒட்டிய இண்டிகோ விமானம் 10 நிமிடம் முன்னதாகவே தில்லியில் எங்களை சேர்த்தது !

தெரியாத ஊரில், விமான நிலைய முன்பணம்-செலுத்திய டாக்சி சேவை 1400 கேட்க, பின் டாக்சி தரகர்களிடமிருந்து தப்பித்து, முன்பணம்-செலுத்திய ஆட்டோ / ஷேர் வண்டி சேவை யில் 350 செலுத்தி (அரசாங்கம் திருப்பித்தரும் என்றாலும் மனசாட்சி ஒப்பவில்லை!), அசோக் ஹோட்டலில் 7:30க்கு வந்து சேர்ந்த பின்,..
மிகச்சரியாக,.. நடுக்கிணறு மட்டுமே தாண்டிய உணர்வுடன்,..
உதவியாளர்கள் ரூமில் சென்று எங்கள் வரவை பதிவு செய்து, அழைப்பிதழ்கள் வாங்கி, (உங்கள் உணவு, தங்கும் மொத்த செலவும், மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது.!), ரூம் செக்-இன் செய்ய ரிசர்வேஷன் கவுண்டருக்கு சென்றால்,..
அவர்களும் ஒரு லிஸ்ட் வைத்து, அப்பா பெயர் கேட்டு, எங்களிருவர் அடையாள அட்டை கேட்டு,
“பத்மஸ்ரீ விருது வாங்கும் உங்களை எங்கள் விருந்தாளிகளாக தங்கவைத்து விருந்தோம்ப தி ஹோட்டல் அசோக் பெருமிதம் கொள்கிறது” எனும் அச்சடித்த இன்விடேஷனுடன், அறைக்கதவு திறக்க க்ரெடிட் கார்டு போன்ற “சாவி”யை கையில் தந்து,..
“your entire expenses while you stay here will be taken care of by the Ministry of Home Affairs! Enjoy your stay sir !”
என்றதில், 10ல் 9வது கேள்விக்கும் விடை கிடைத்து விட்டதில், ரூமுக்கு சென்று தூங்க முயற்சித்தோம்.!
மறுநாள் பின்-மதியம் சரியாக 2 மணிக்கு கீழே லாபியில் இருக்க அறிவுறுத்தப் பட்டதால், காலையில் தின்ற ப்ரேக்பாஸ்ட் மசாலா தோசை வயிற்றை ஒரு வழி செய்ததில் வந்த திகிலால், மதியச் சோறுக்கு, வெள்ளைச்சோறு/தயிர் மட்டும் வாங்கி, கொஞ்சமாக கலந்து தின்றுவிட்டு,..
மிகவும் நட்பான அந்த டிரைவரிடம் அந்த பிரத்யேக ஸ்டிக்கரை தந்து, அவன் காரின் முன் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு,
பொறுமையாக (நேரம் மிக இருந்தது – 3 மணிக்கே உள்ளே அனுமதிப்பார்கள்) அரை கிலோமீட்டர் போன நிலையில்,..
கையில், சிறு கவரில் RTPCR மற்றும் அழைப்பிதழ் மட்டுமே இருந்தது! உடனிருந்த என் ஆதார் கார்டு காணவில்லை!
(இவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி!)
10 வினாடியில் அனைத்து உற்சாகமும் மறைந்து காணாமல் போனது!
பின் திரும்ப ஓட்டலுக்கு வந்து, ரூமில் எங்கும் தேடி, கிடைக்காமல்,
ராஷ்ட்ரபதி பவனில் உள்ளே விடவில்லையெனில்,
அட்லீஸ்ட் என் தங்கையையாவது நிகழ்ச்சிக்கு தடங்கலில்லாமல் அனுப்பிவைக்க முடிவு செய்து,
மீண்டும் காரில் வந்து அமர்ந்து, வானம், முன்பக்க கார் கண்ணாடி, வலதுபக்க சாலைப் போக்குவரத்து என,
இலக்கில்லாமல் திரிந்த கண்ணில்,.. என் தங்கையின் காலுக்கு கீழே விழுந்து, மறைந்திருந்த என் ஆதார்,
மீண்டும் எனக்கு மறுபிறவியளித்தது!
3:00 to 5:00 மணி வரை, அறிவுரைகள், நிகழ்ச்சி ஒத்திகை!
ராஷ்ட்ரபதி பவனின் வெளியே சிறு க்யூவாக நின்றோம்.
என் முன்னால் ஒரு சிறு-உயர பெண் நின்று கொண்டிருந்தார்!
எந்தவித பந்தாவோ, மேக்கப்போ, விசேஷ உடையோ கூட இல்லாமல், சாதாரண சுடிதாரில்,
நம் அடுத்தவீட்டு பெண்ணாக தெரிந்த அவர், எதோ விருது-வாங்குபவரின் கூட வரும் விருந்தினராக இருக்கும்,..
என நினைத்த எனக்கு, அவர்தான் 37 வயதேயான டேபிள் டென்னிஸ் வீராங்கனை “மௌமா தாஸ்” என அவர் விருது வாங்கும் போது அறிந்தவுடன்,..
உள்ளே,..
என் தங்கையை, விருது வாங்குவோர் பகுதிக்கும், என்னை, உடன்வந்த விருந்தினர் பகுதிக்கும், வழிகாட்டி அமர வைத்தனர்.
என் பக்கத்தில், பாடகி (சின்னக்குயில்) சித்ரா அவர்களின் கணவர்!
(சித்ரா அவர்களை ஓட்டலில் அவர் அறையில் சந்தித்தது, அடுத்த பதிவில்!)
எனக்கு 2 வரிசைகள் முன்னே, 5 விருந்தினர்-நாற்காலிகள் காலியாக இருந்தது.
போய் அமரலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த போது,..
கருஞ்சாம்பல் உடையில் 5 பாதுகாப்பு அதிகாரிகள் (என பின்னரே தெரிந்தது), குறிப்பாக தங்கள் நாற்காலிகளை தேடி அமர்ந்தனர்!
ஒரு முழு சுற்று விருது வழங்கும் ஒத்திகை முடிந்தபின்,..
முதலில், உள்துறை மந்திரி திரு அமீத் ஷா அவர்கள் வந்தமர்ந்தார்.
பின், நிதி மந்திரி திருமதி. நிர்மலா சீதாராமன்.
அதன் பின் பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், உப-ஜனாதிபதி திரு வெங்கையா நாயுடு அவர்களும் வந்தமர்ந்தனர்!
(இவர்களுக்கு பின்னால் வரிசையாக அந்த பாதுகாப்பு அதிகாரிகள்!)
அதன் பின்,
ஜனாதிபதி திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் வந்து தன் இருக்கையில் அமரும் முன், தேசிய கீதம் – அனைவரும் எழுந்து மரியாதை செய்தனர்.
பின், நேரடியாக நிகழ்ச்சி துவங்கியது.
அப்பாவின் பெயர் 55வதாக இருந்தது அன்றைய மாலை நிகழ்ச்சியில்.
“Congrats ராதா ஜி ..” என்றபடி ஜனாதிபதி என் தங்கையிடம் விருதை வழங்கினார்!
விருது வாங்க வந்தவர்களில், 90%க்கும் மேல் வெறும் சாமானியர்கள்.
எந்தவித பந்தாவோ, தான் “உயர்ந்த சாதனையாளன்” என்கிற நடத்தையோ இல்லாத, சாமானியர்கள்!
பலர், … வெறும் காலில்!
கையளவு பேர் தவிர, பெரும்பாலானோர், வீட்டில் துவைத்து, இஸ்திரி செய்து மடித்து வைத்த அடுத்த வேளை உடை – அல்லது, விசேஷத்துக்கென ஒதுக்கிய உடையையே அணிந்து வந்தனர்!
அவ்வளவு சாமானியர்!
அதிகார மையம், ஜனாதிபதி, அவர் மாளிகை, பார்வையாளராக பிரதமர்,..போன்ற எந்த விசேஷ உணர்வும் தடுக்காமல் (அல்லது தெரியாமல் / பாதிக்காமல்), வயதில் பெரியவர் என்றால், நம் சனாதன வாழ்வியல் படி, ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் செய்தல் உள்ளிட்ட நெகிழ்ச்சியான இயற்கையுணர்வு வெளிப்பட்ட, தங்கத் தருணங்கள் அவை!
அனைவருக்கும் விருது தந்து முடிந்தபின்,
இன்னுமொரு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி சட்டென முடிந்து, ஜனாதிபதி, உப-ஜனாதிபதி, உள்துறை மந்திரி, நிதி மந்திரி, மற்றும் பிரதமர், அனைவரும் வெளியே சென்று விட்டனர்.
எனக்கு… பெருத்த ஏமாற்றமாக இருந்தது!
அவர்களை அருகிருந்து பேசவெல்லாம் வேண்டாம்,.. பார்க்கக் கூட முடியவில்லையே!
ம்ம்ம்,.. கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
என்று மனதுக்குள் புலம்பியபடி,..
என் தங்கையிடம் அளித்த விருதை கவனமாக பெற்றுக் கொண்டு,
அவளை, பிரத்யேக மீட்டிங்குக்கு (பிரதமருடன் என சொன்னார்கள்)
அனுப்பி வைத்தேன்.
அப்போது, பவன் உதவியாளர்கள், என்னுடனிருந்த அனைத்து விருந்தினர்களையும், வேறு ஒரு ஹாலுக்கு அனுப்பி வைக்கத் துவங்கினர்!
என்னையும்.!
அங்கு,..
எங்களை, ஒரு Buffet முறை சிற்றுண்டி பரத்தியிருந்த நீள் மேஜையை சுற்றி, வரிசையாக நிற்க வைத்தனர்! மொத்தம் 100க்கும் மேல் நாங்கள்!
சரி,..
மொத்தமாக விழுந்தடித்து தின்ன அனுப்பக் கூடாது என்று, வரிசையாக அனுப்புகின்றனர் போலிருக்கு, என்று நினைத்துக் கொண்டிருந்த பொழுது,..
உள்துறை அமைச்சர் திரு. அமீத் ஷா அவர்கள், உள்ளே நுழைந்து, வரிசையாக ஒவ்வொருவரின் அருகிலும் லேசாக நின்று அவர்கள் பற்றிய விவரங்கள் கேட்டு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கீழே இறக்காத கைகளால் வணக்கம் சொல்லியபடி, மிக மெதுவாக அனைவரையும் கண்ணுக்கு கண் பார்த்து சிரித்து, மரியாதை செய்து சென்றார்!
அப்போதுதான் எனக்கு பல்ப் எரியத் துவங்கி, சட்டென புரிந்தது! சுதாரித்துக் கொண்டு, என்னை தயார் செய்து கொண்டேன்.
அடுத்தது, திரு வெங்கையா நாயுடு அவர்கள் அதே போல் சுற்றிவந்து விவரங்கள் கேட்டு, பலரிடம் அளவளாவி,.. என்னருகே வந்தார். ஒருவழியாக என்னை தயார் செய்து கொண்டு,..
“சந்தமாமா ஓவியர் சங்கர் அவர்களின் மகன் நான்,..!” என்றேன்!
“ஓ,.. சந்தமாமா?” என்று கண் விரிந்து, ஒரு பழைய சந்தோஷ நினைவு புதுப்பித்த உணர்வை கண்ணில் காட்டி, என் தோளில் கைபோட்டு தட்டிக் கொடுத்தார்!
பின்னர், ஜனாதிபதி திரு கோவிந்த் அவர்கள் … என் அருகில் வந்த போதும் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். புரிந்துகொண்ட கண்ணசைவுடன், தலையை அசைத்து ஆமோதித்தார்.
அடுத்து இன்னுமொரு விசேஷமும் நிகழ்ந்தது!
சற்றே சிரிக்காத முகத்துடனே காணப்படும் ஜனாதிபதி, அவ்வளவாக சகஜ-உரையாடல் செய்யமாட்டாரோ என ஒரு எண்ணம் எனக்கிருந்தது, நிஜம். ஆனால், எனக்கு அடுத்திருந்த ஒருவர் காசியிலிருந்து வருவதாகவும், அவ்வூர் பற்றிய சில விவரங்களையும் சொன்னார்! pleasant ஆக சிரித்தபடியே நம் ஜனாதிபதி, “பின்னால், உங்கள் ஊர் MP வருகிறார்! அவர் இன்னமும் உங்கள் விவரங்களை என்னை விட அதிகமாக புரிந்து கொள்வார்!” என ஜோக் அடித்தவுடன்,.. என் கண்ணையே / காதையே என்னால் நம்ப முடியவில்லை!
There’s always another side to every human being! என்பது நிரூபணமான இன்னொரு தருணம்!
பின், அவர் சொன்னபடியே, பின்னாலேயே வந்தார் நம் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள்!
பலரிடமும், எதோ பல வருடங்கள் பழகிய உணர்வுடன், விவரங்களை கேட்டு, விவாதித்து – ஒவ்வொன்றுமே 30 – 60 வினாடிகள் தான் என்றாலும் – சுற்றி வந்தார்.
என்னருகே வந்தவுடன்:
“என் அப்பாவை கௌரவித்ததற்கு, நன்றி பிரதமர் அவர்களே! நான், சந்தமாமா ஓவியர் சங்கர் அவர்களின் மகன்,..!”
என்றதற்கு,..
“இதற்க்கெல்லாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டுமா?” எனும் அர்த்தம் வரும்படி, என் வலது தோளில், ஒரு ஆத்மார்த்த நட்புடன், அவரது இடது கையால் அழுந்த தட்டிக் கொடுத்து, மிகுந்த வாஞ்சையுடன் சிரித்து, “சந்தமாமா,..” என்று சொல்லியபடி தலையசைத்து,..
நகர்ந்தார்! (ஏற்கெனவே என் தங்கையிடம் தான் சந்தமாமா பத்திரிக்கை பல படித்துள்ளதாக அவர் சொல்லியிருந்தார்! அதனால், அவருடைய தலையசைப்பின் அர்த்தம் புரிந்தது!)
அந்த நால்வர் எங்களருகே வந்தபோது ஒவ்வொருவரையும் கவர் செய்தபடி, தொடர்ந்து புகைப்படங்கள் /வீடியோ எடுத்தபடியே அவர்களுக்கு சற்று முன்னே சுற்றி வந்த ராஷ்ட்ரபதி பவன் பிரத்யேக புகைப்படக்காரர்கள்.!
என்னையும் (அதுபோல ஒவ்வொருவரையும்) படமெடுத்திருப்பார்கள்.
நிதானமாக கேட்க வேண்டும் – ஒரு டிஜிட்டல் பிரதிக்கு!
என் 40 வருட (மத்திய அரசியல் நடப்பு பற்றிய) புரிதல், முழுவதுமாக மாற்றி, திருத்தி எழுதப்பட்ட தருணங்கள்!
வாழ்வில் வேறென்ன வேண்டும்!
பின்குறிப்புகள்:
1) சாமானியர்களை முன்னிறுத்தி நடக்கும் நிகழ்ச்சி என்பதை மனதில் இருத்தி, “துல்லியமாக திட்டமிடல்” என்பதன் நிஜப் பொருள் விளங்கிய நாட்கள் அவை!
2) உதாரணமாக: ஒவ்வொருவரின் டாக்சி/ஆட்டோ பயணச் செலவு தொகைகளை கணக்கிட்டு அவர்களின் மொத்த செலவுகளை கடைசி ரூபாய் வரை,. ரொக்கமாகவே திருப்பி அளித்தனர்!
3) எனக்கு: “நான் தில்லி விமான நிலையத்திலிருந்து 350 ரூபாய் செலுத்தி இந்த ஹோட்டலுக்கு வந்தேன் .. அதனால், இன்னொரு 350 ரூபாய் சேர்த்து 700/-” என்றேன்! உடனே அந்த பெண் அதிகாரி, உங்களால் அதே 350க்கு திரும்ப செல்ல முடியாது. அதிகம் கேட்பார்கள்! அதனால் 500 ரூபாய் தருகிறேன்!”
4) இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் செய்து தரப்பட்ட வசதிகளில் பலவற்றை மிகச் சுலபமாக துஷ்-பிரயோகம் செய்ய இயலும்!
5) அதனால், முன்னே காங்கிரசார் காலத்தில் திரு சோ அவர்கள் “பத்ம விருதுகள் விற்பனை” என சாடியதன் சாராம்சமும், VIP க்கள் மட்டுமே
அப்போது விருது வாங்கியதன் மர்மம் பற்றிய எண்ணங்களும் அவ்வப்போது உங்கள் நினைவுக்கு வந்தால், நான் பொறுப்பல்ல!
6) எந்த விதத்திலும் துளியும் அரசியல் கலப்பில்லாமல், நடந்தது நடந்தபடி மட்டுமே, இப்பதிவு!
7) என் அப்பாவுக்கோ, எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ, எவ்வித அரசியல் தொடர்புகளும், செல்வாக்கும், “இணைப்புகளும்” மருந்துக்கும் கிடையாது! ஒரு அற்புதமான அமைப்பு என் அப்பா போன்ற சாமானிய சாதனையாளர்களை தேடித்தேடி, அலசி, ஆராய்ந்து, விருது வழங்கி கௌரவிக்கும் காலம் இது.
இதை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உறுதியாக சொல்ல முடியும்!
இறைவனுக்கும்,
திரு மோதி அரசுக்கும்,
என் இதயபூர்வ நன்றிகள்,
என்றென்றும்… ஜய் ஹிந்த்