
திருப்புகழ்க் கதைகள் 194
குழல்கள் சரிய – பழநி
அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு – 2
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இத்தகைய வார்த்தை விளையாட்டு வரும் பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக கண்காட்சி திரைப்படத்தில் வருகின்ற
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா – மண்ணுயிர்க்கின்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா.
என்ற பாடலையும், நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெறும்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே
என்ற பாடலையும் சொல்லலாம்.
காளமேகப் புலவர் இத்தகைய பல பாடல்கள் எழுதியிருக்கிறார். அவை வித்தாரக் கவி வகையில் சேர்ந்தவை. எடுத்துக்காட்டாக,
காக்கைக்கா காகூகை,
கூகைக்காகா காக்கை,
கோக்குக்கூக் காக்கைக்குக்
கொக்கொக்க, கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா!
காக்கைக்கு ஆகா கூகை (ஆந்தை), கூகைக்கு ஆகா காக்கை, கோ(அரசன்)க்குக் கூ (உலகம்) காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு), கொக்கு ஒக்க (கொக்கைப் போல), கைக்கைக்கு (பகைவர்களை எதிர்ப்பதற்கு), காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு), கைக்கு ஐக்கு ஆகா (சரியான நேரம் அமையாமல்போனால்) முடியாது. மேலே சொன்னதைப் போல அருணகிரியார் இத்திருப்புகழில் சில வரிகளை இடம் பெறச் செய்திருக்கிறார்.
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி …… யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ …… முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு …… பெருமாளே.
என்ற வரிகள்தான் அவை. விமலி என்றால் குற்றம் இல்லாதவர்; அமலி என்றால் குற்றங்களை அகற்றுபவர்; நிமலி என்றால் பரிசுத்தமானவர்; குமரி என்றால் இளமையானவ்ர்; கவுரி என்றால் பொன்னிறம் படைத்தர்; தருணி என்றால் நல்ல பருவமுடையவர்; விபின கெமினி என்றால் மயானத்தில் ஆடுபவர்; இந்தச் சொற்களின் மூலம் அருணகிரியார் உமாதேவியாரைக் குறிப்பிடுகிறார்.
அடுத்த வரியில் பழைமையான வேதமுடிவில், அகர மகர உகர படிவ வடிவம் உடையோனே என்று முருகனைப் புகழ்கிறார். அதாவது அகர உகர மகரங்களைக் கொண்ட பிரணவத்தை உருவத் திருமேனியாகக் கொண்டவரே எங்கிறார். பின்னர் பழனியைச் சிறப்பிக்க, நன்செய் புன்செய்களும், பாக்கு மரங்களும், வாழைகளும், பலா மரங்களும் அசைந்து விளங்கும் பழனி எனக் குறிப்பிடுகிறார்.