
பாரதியாரின் கண்ணன் பாட்டு – பகுதி – 46
கண்ணன் – எனது குலதெய்வம்
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்
இந்தப் பாடலை பாரதியார் புன்னாகவராளி இராகத்தில் இயற்றியுள்ளார். குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள். ஒருவருக்கு இஷ்ட தெய்வம் என்று எந்த தெய்வத்தையும் வணங்கலாம். பரிகார தெய்வம் என்று எந்த தெய்வங்களையும் வழிபடலாம். அதேசமயம் ஒருபோதும் நம் குலதெய்வத்தை மட்டும் வணங்காமல் விட்டுவிடக் கூடாது. எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டுக்கு இணையானது ஏதுமில்லை. இந்த வழிபாட்டால் கிடைக்கும் வலிமைக்கு நிகரானது எதுவுமில்லை என்கிறார்கள்.
வீட்டில், எந்தவொரு சிறிய நிகழ்வு என்றாலும் குலதெய்வத்தை உடனே வணங்கவேண்டும். கல்யாணமோ காதுகுத்தோ எதுவாக இருந்தாலும் குலதெய்வத்தை வணங்கிவிட்டுத்தான் வீட்டில் மங்கல காரியங்களை நடத்துவார்கள். பொதுவாக, குலதெய்வம் என்பது நம் பூர்வீகக் கிராமங்களில் இருக்கலாம். குலதெய்வத்தை ஆண்டிற்கு ஒரு முறையேனும் ஊருக்குச் சென்று, கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். பிற நாட்களில் வீட்டில் இருந்தபடியே வழிபடலாம். இந்தநாள் அந்தநாள் என்றில்லாமல், எல்லாநாளும் வழிபடலாம்.
குலதெய்வம் பெரும்பாலும் பெண்தெய்வங்களாகவே இருக்கும். இந்தப் பாடலில் பாரதியார் கண்ணபிரானை ‘கண்ணம்மா’ என்ற குலதெய்வமாகக் கொண்டு பாடுகிறார். இனி பாடலைக் காணலாம்
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன்! – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
சரணங்கள்
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று … (நின்னை)
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . … (நின்னை)
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் … (நின்னை)
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட … .(நின்னை)
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! … (நின்னை)
இந்தப் பாடலின் இடம்பெறும் பல்லவியின் வரிகள் சரணாகதித் தத்துவத்தை எடுத்து இயம்புகின்றன. இறைவனிடம் பக்தி செலுத்துவதில் ஒன்பது வகைகள் உள்ளன என்பார்கள். அதாவது,
- ஸ்ரவணம் – இறைவன் நாமத்தை, பாடலை, புகழை, கேட்டுக்கொண்டே இருப்பது
- கீர்த்தனம் – இறை பாடல்களை, ஸ்லோகங்களை லயித்துப் பாடுவது
- ஸ்மரணம் – எப்போதும் இறைவன் நினைவாகவே இருப்பது,
- பாதசேவனம் – இறைவனின் பாதங்களை நம் இதயத்தில் இருத்தி வணங்குவது,
- அர்ச்சனம் – பாமாலைகளாலும் பூக்களாலும் அர்ச்சித்து வழிபடுவது,
- வந்தனம் – நிவேதனம், காணிக்கை பரிகாரங்கள் செய்து இறைவனுக்கு நம் நன்றியைத் தெரிவிப்பது,
- தாஸ்யம் – எல்லா வகைகளிலும் இறைவனே மேலானவர், நாம் அவரது அடிமை என்ற எளிமை உணர்வு கொள்வது
- சக்யம் – ஆபத்து காலத்திலும் பிற எந்த உற்ற தருணத்திலும் உதவும் உண்மையான நண்பனாக இறைவனைக் கருதுவது
- ஆத்ம நிவேதனம் – ஒவ்வொரு ஜன்மத்திலும் ஒவ்வொரு உடலுக்குள்ளும் புகுந்துகொள்ளும் ஆத்மாவையே, அவ்வாறு பல ஜன்மங்கள் கொடுக்கக்கூடிய இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுவது.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோஹோ
ஸ்மரணம் பாதசேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
சக்யம் ஆத்ம நிவேதனம்
என்ற பக்தி ஸ்லோகத்தின் சுருக்கமான விளக்கம்தான் மேலே படித்தது. இவற்றில் பாத சேவனம் என்ற பக்தி வகை சரணாகதி தத்துவத்தை உணர்த்துகிறது.
பாரதியாரின் இப்பாடலின் விளக்கத்தை நாளை காணலாம்.