
சமீப காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்த்தல் போன்றவை பற்றி விழிப்பு உணர்வு அதிகம் வளர்ந்துள்ளதைப் பார்க்கிறோம்.
திருமலை வேங்கடேஸ்வர சுவாமியின் அருளால் ‘வ்ருக்ஷப் பிரசாதம்’ என்ற திட்டத்தை தேவஸ்தானத்தில் நடத்தி வருகிறார்கள். அதேபோல் பல தெய்வீக விருட்சங்களுக்கும் ஔஷதிகளுக்கும் நிலையமாகத் திகழ்கிறது வேங்கடகிரி. மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி கொடிகளும் மரங்களும் இன்றளவும் வேங்கடமலையில் வளர்ந்து வருகின்றன.
புராணங்களில் வேங்கட பர்வதத்தைப் பற்றி விவரிக்கையில் இங்குள்ள விருட்சங்கள் இறைவனின் வடிவங்களாகவும், முனிவர்களின் தவசசக்தி சொரூபங்ககாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒவ்வொரு மரமும் பவித்திரமானது. எனவே அம்மரங்களை கிள்ளுவதோ, முறிப்பதோ, வெட்டுவதோ கூடாது என்று புராணங்கள் எச்சரிக்கின்றன. இதன் மூலம் தாவரச் செல்வத்தை பாதுகாக்க வேண்டும் என்பதும் ஆலயங்கள் தபோவனங்கள் போன்றவற்றின் அருகில் வளரும் விருட்சங்களில் தேவதைகள் வசிப்பார்கள் என்பதும் சிறப்பாகத் தெரியவருகிறது.
காளிதாச மகாகவி அபிக்ஞான சாகுந்தலம் என்ற நாடக மகா காவியத்தில் இது குறித்து மிக அற்புதமாக வருணித்துள்ளார். கண்வ மகரிஷி தன் ஆசிரமத்தில் உள்ள மரங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூறுகிறார்.
“அஹோ சன்னிஹித தேவதா தபோவன தரவ:”
-“இவை தேவதைகளின் சன்னிதிகளான விருட்சங்கள்” என்கிறார். அதாவது தேவதைள் மரங்களில் குடிகொண்டிருப்பார்கள். அம்மரங்களின் அருகிலும் சுற்றிலும் சன்னிதி கொண்டு மகிழ்ந்திருப்பார்கள்.
எங்காவது மரங்கள் அழகாக தோட்டமாக கூட்டமாக இருக்கும் போது பார்க்க நேர்ந்தால் நம்மை அறியாமலே நமக்கு ஆனந்தம் ஏற்படுகிறது. ஏனென்றால் தெய்வீக சக்தி அவற்றில் குடிகொண்டிருப்பதால்.
“கண்வ மகரிஷி சகுந்தலையை கணவன் வீட்டுக்கு அனுப்பும் போது அந்த மரங்கள் ஜடப் பொருளாக அன்றி உயிருள்ள தாய் போல, தேவதையைப் போல், தோழியைப் போல உறவு போல நடந்து கொண்டன” என்ற செய்தியை ஒரு ஸ்லோகத்தில் காளிதாசர் சிறப்பாக வர்ணிக்கிறார். இதில் கவித்துவ சிறப்பு மட்டுமின்றி ருஷியின் தரிசனமாகவும் நமக்குக் காணக் கிடைக்கிறது.
கண்வ மகரிஷி மரங்களிடம் கூறுகிறார், “சகுந்தலை இப்போது உங்களைப் பிரிந்து கணவன் வீட்டுக்குச் செல்கிறாள். நீங்கள் அனுமதி கொடுத்து அவளை ஆசீர்வதித்து அனுப்புங்கள்! உங்களுக்கு நீர் ஊற்றாமல் அவள் ஒரு நாளும் தண்ணீர் அருந்தியதில்லை. அவளுக்கு பூச்சூடி கொள்ளும் விருப்பம் இருந்தாலும் உங்களிடம் இருந்து பூவையோ தளிரையோ அவள் பறிப்பதற்கு முன்வந்ததில்லை. அத்தனை ஆதரவாக உங்களை வளர்த்தாள். அதோடு ஒரு மரத்திலோ ஒரு கொடியிலோ செடியிலோ ஒரு சிறிய பூ பூத்தால் உடனே அந்த சந்தர்ப்பத்தை ஒரு உற்சவம் போல் கொண்டாடுவாள் சகுந்தலை. புதிதாக குழந்தை பிறந்த தாய் போல் ஆனந்தம் அடைவாள். அவ்வளவு உற்சாகம் அவளுக்கு உங்களிடம். உங்கள் அனைவரின் அன்பான தோழி அவள். அவளுக்கு உங்கள் ஆசிகளை அளியுங்கள்!” என்கிறார் கண்வ மகரிஷி.
இதில் கவித்துவ அழகை மட்டுமே பலரும் ரசித்து கடந்து செல்வர். ஏனென்றால் செடியோடுக் காற்றோடும் மேகத்தோடும் உரையாடுவது கவித்துவத்தின் ஒரு பாகமாக பார்ப்பார்கள் சிலர். ஆனால் இது கற்பனையான கவிதை அல்ல. மரங்களைக் கூட ஒரு தேவதையாக பாவனை செய்து அவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட சிறப்பை இதிலிருந்து நாம் அறியலாம்.
இது போன்ற அனுபவத்தை தாவரங்களோடு ஏற்படுத்திக் கொண்டால் மன அமைதி கிட்டும். மனதில் ஏற்படும் பல்வேறு நோய்களும் விலகும். தற்காலத்தில் பலப்பல பெயர்களில் மனோ வியாதிகளைப் பற்றி கேள்விப்படுகிறோம். அப்படிப்பட்ட மன நோய் கொண்டவர்கள் இதுபோன்ற மரம் செடி கொடி வளர்க்கும் நல்ல பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். அவற்றுக்கு பாத்தி கட்டி நீர் பாய்ச்சி களையெடுத்து அவற்றை அன்பும் ஆதரவு அளித்து வளர்த்து வருவதை பொழுதுபோக்காகவோ வேலையாகவோ ஏற்படுத்திக் கொண்டால் அது கூட ஒரு உபாசனையாக மாறி நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
குமார சம்பவத்தில் காளிதாச மகாகவி பார்வதிதேவி வனத்தில் தவம் செய்து வந்தபோது அங்கிருந்த செடி கொடி மரங்களுக்கு அவளே நீரூற்றி ஆதரித்து வந்தாள் என்று விவரிக்கிறார். ஜெயா, விஜயா இருவரும் சேவை செய்ய அருகில் இருந்த போதும் பார்வதிதேவி தன் கைகளாலேயே தாவரங்களுக்கு சேவை செய்தாள் என்ரு எழுதுகிறார்.
தோட்டவேலை என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. பவித்திரமானது. இத்தகைய பணிகள் வேலை செய்யும் வேலையாளின் கீழ் வராது. எஜமானனை போல் பாதுகாக்கும் நிலையைச் சேர்ந்தது. எனவே இதில் ஒன்றும் தாழ்வு இல்லை. அன்போடு சேவை செய்வதால் இயற்கையோடு அவர்களுக்கு அனுபந்தம் ஏற்படுகிறது. அந்த உறவும் தொடர்பும் அவர்களுக்கு எந்நேரமும் ரட்சனையை அளிக்கிறது.
அதோடு எந்த வேலைகளைச் செய்யும் போது மனதிற்கு திருப்தி, சந்தோஷம், அமைதி கிடைக்கின்றது. இது போன்ற நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுபவர்களால் அவர்களுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளையும்.
காளிதாச மகாகவி ஓரிடத்தில் அற்புதமாக வர்ணிகிறார். கௌரி தேவி குடத்தால் செடிகளுக்கு நீர் ஊற்றுவது எவ்வாறிருந்தது என்றால் ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் இருந்ததாம். குழந்தையிடம் காட்டும் அன்பான வாத்சல்ய பாவனையை அந்த செடி கொடிகளிடம் பொழிந்தாள் ஜகன்மாதாவான கௌரி தேவி.
அதேபோல் சகுந்தலை கணவன் வீடு செல்லும்போது மரங்களிடமிருந்து சிறிது பூக்களை அவற்றின் அன்பளிப்பாக எடுத்துச் செல்ல விரும்புகிறாள். தோழிகள் சென்று மரங்களிடம் அந்த செய்தியை தெரிவித்தனர். அப்போது ஒரு மரம் கைநீட்டி அழகாக நெய்த புடவையை அளித்தது. அதுபோல் ஒவ்வொரு செடியும் ஒரு பொருளை சகுந்தலைக்கு காணிக்கையாக அளித்தன. அதுபோல் பலவிதமான மங்கலப் பொருட்களை புகுந்தவீடு செல்லும் சகுந்தலைக்கு சீர்வரிசையாக அளித்தன. இது தவச்சக்தியின் ப்ரபாவம்.
தவசிகளின் தபோவனங்களில் மரங்கள் வெறும் மரங்களல்ல. அவற்றுள் தேவதைகள் குடிகொண்டிருக்கும்.”சன்னிஹித தேவதா தபோவன தரவ:” என்ற வாக்கியத்தில் அத்தனை உயர்ந்த கருத்து உள்ளது. தரு என்றால் விருட்சம். அந்த மரங்களில் தேவதைகள் குடியிருப்பதால் நாம் செய்யும் பிரார்த்தனைகளை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
நம் கலாச்சாரத்தில் மகா விருட்சங்களை தெய்வத் தன்மை கொண்டவையாக வழிபடும் சம்பிரதாயம் உள்ளது. இந்த மரங்களை வணங்கினால் தெய்வங்களை வணங்கியதற்குச் சமம். எங்கோ உள்ள கற்பக மரம் நம் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று ஏங்கத் தேவையில்லை. நாம் வசிக்கும் பூமியில் வளரும் மரங்கள் கூட நாம் பக்தியோடு பராமரித்தால் நம் ஆசைகளை நிறைவேற்றி நம் வாழ்வை உய்விக்கும் சாமர்த்தியம் மிக்கவை.
அதனால் சிறு வயதிலிருந்தே தாவரங்களை பராமரிப்பதை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் போட்டியில் தற்காலத்தில் மாணவர்கள் அதிவேக ஓட்டத்தில் இருக்கிறார்கள். இது போன்று தோட்டங்கள் மரம் செடி கொடிகளின் மதிப்போ அவற்றைப் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வோ அதில் கிடைக்கும் ஆனந்தமோ தெரிய விடாமல் அவர்களை வளர்த்து வருகிறோம். பெற்றோர் முதலில் அது போன்ற தோட்டம் வளர்க்கும் பொழுதுபோக்கினை ஏற்படுத்திக் கொண்டால் குழந்தைகளுக்கும் அதே பழக்கம் ஏற்படும். அவர்களிடம் நல்ல பண்பாடு வெளிப்படும். கோரிக்கைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்திலும் சுத்தம் ஏற்படும்.
இதுபோன்ற சிறந்த மானசீகமான பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கு தோட்டக்கலை உதவியாக இருக்கும் என்று நம் புராணங்களும் நாடகங்களும் கவிதைகளும் காவியங்களும் ஒருசேர ஓங்கி ஒலிக்கின்றன.
அந்த பாவனையிலுள்ள சத்தியத்திற்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



