நீலப்புரவி வீரன் – 5 டாக்டர் எல். கைலாசம் ஹல்டிகாடி யுத்தம் மீனாள் சத்திரிய வம்சத்தில் பிறந்தவள். அவளிடம் மன உறுதி இருந்தது. யுத்தத்துக்குச் செல்லும் முன்பு விக்கிரமன் நெற்றியில் குங்குமிட்டு அனுப்பினாள். ஹல்டிகாடி யுத்தம் இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நானுற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற அந்த யுத்தத்துக்குச் சென்றவர்களும் உணர்ந்திருந்தார்கள். அதில் தாங்கள் ஆற்றப்போகும் பங்கைப் பற்றி பெருமையும் கொண்டிருந்தார்கள். இன்றைய ராஜஸ்தானில் உள்ள ஹால்டிகாடி நோக்கி படை சென்றது. மகாராணா பிரதாப்சிங்கின் வீரர்கள் யுத்தத்தில் பல சாகசங்களைச் செய்தார்கள். எதிர் அணியில் தனது சகோதரர் சக்திசிங் இருப்பதைப் பார்த்து மனம் வெறுத்துப் போனார் ராணா. அதுமட்டுமல்ல மொகலாயப்படைத் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. டோமர்களும் பர்குர்ஜர்களும், பில் வீரர்களும் இறந்துபோனதை பார்த்த மகாராணா பிரதாப்சிங் மனமுடைந்து போனார். அதுமட்டுமல்ல மொகலாயப்படையை தலைமை தாங்கி வந்தது ராஜபுத்திர ரத்தமான மான்சிங் என்று அறிந்ததும் அவரின் உள்ளம் துடித்துப் போனது. ராஜபுத்திர வழக்கப்படி மகாராணா பிரதாப்சிங், மான்சிங்கை தனியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது. தனது சேடக் புரவியில் மகாராணா பிரதாப்சிங், மான்சிங் இருந்த யானையின் அருகே வந்தார். சேடக் தனது காலை யானையின் மீது வைத்தது. மகாராணா பிரதாப்சிங் தனது ஈட்டியை மான்சிங் மீது குறிபார்த்து எறிந்தார். மான்சிங் தனது தலையைக் குனிந்து கொண்டார். கூர்மையான ஈட்டி பட்டு பாகன் இறந்தார். இந்தச் சமயத்தில் பீரங்கி வெடிக்கும் சப்தம் கேட்க, சேடக் தடுமாறி ஓடியது. பீரங்கி சப்தம் மீண்டும் கேட்க மகாராணா பிரதாப்சிங் தயங்கிய சமயத்தில் புரவி சற்றுத் தடுமாறி ஓடியது. மொகலாயாரை எதிர்க்க மகாராணா பிரதாப்சிங் கட்டாயம் வேண்டும் என்று சேடக் நினைத்தது போலும். அந்த சமயம் மகாராணா பிரதாப்சிங் போன்று உடை அணிந்து சர்தார்சிங், சேடக் போன்று இருந்த வேறு வெள்ளை புரவியில் தோண்றினார். மான்சிங்கின் ஈட்டி சர்தார்சிங்கின் நெஞ்சைத் தாக்க அவர் அங்கேயே இறந்து போனார். மகாராணா பிரதாப்சிங் சேடக்கின் மீது விரைந்து சென்றார். அப்பொழுது தனது காலில் ஈரம் படுவதை உணர்ந்தார். மகாராணா பிரதாப்சிங் குனிந்து பார்க்க, ஆகா! சேடக் கால்களில் இருந்தல்லவா இரத்தம் வருகிறது என்று எண்ணியவர். உடனே புரவியை நிறுத்தி கீழே இறங்கினார். சிற்றோடை ஒன்று அருகில் இருந்தது. அதன் அருகே சென்று தனது துணியை நனைத்து சேடக் அருகே வந்தார். அதற்குள் காரியம் முடிந்து போயிருந்தது. சேடக் தனது உயிரைக் கொடுத்து மகாராணா பிரதாப்சிங்கைக் காப்பாறியிருந்தது. அவருக்குப் புரிய அவரது கண்களில் இருந்து நீர் வடிந்தது. மகாராணா பிரதாப்சிங் மனம் சோர்ந்து சேடக் அருகிலேயே அமர்ந்தார். எங்கிருந்தோ பீம்சிங்கின் பிரார்த்தனைக் குரல் கேட்டது. அதுமட்டுமல்ல. இரண்டு புரவிகள் வரும் ஒலியும் கேட்டது. அநேகமாக மொகலாயப்படை வீரர்களாகத்தான் இருக்கும். மகாராணா பிரதாப்சிங், சேடக் இறந்த கவலையில் ஆழ்ந்து சேடக் அருகிலேயே இருக்க, வந்த துருக்கிய வீரர்கள் மிகவும் ஆக்ரோசமாக இருந்தார்கள். மகாராணா பிரதாப்சிங்கை அழித்துவிடுவது என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தனர். சேடக் இறந்த வருத்தத்தில் இருந்த மகாராணா பிரதாப்சிங்கின் மனம் வேறு எதிலும் பதியவில்லை. ஓடையின் அருகே இருந்த அவரைக் கொடுமையான வாட்களைக் கொண்டு தாக்க ஓடிவந்தனர். அந்த ஒரு விநாடி நேரத்தில் ராணாவின் உயிரும் போயிருக்கும். மேவாரின் சரித்திரம் மாறியிருக்கும். ஆனால் லிங்கேசுவரன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான். அவன் விடுவானா என்ன? மீண்டும் வேகமாக வரும் புரவியின் சப்தம் கேட்டது. வந்தவன் சக்திசிங். போர்க்களத்தில் மகாராணா பிரதாப்சிங்கிக்கு தனது உயிரைக் கொடுத்த வீரரின் செயல் ராணாவின் சகோதரர் சக்திசிங் மனதை மாற்றியிருந்தது. மகாராணா பிரதாப்சிங்கை அவர்கள் அழிக்கப் போகிறார்கள் என்று புரிந்து அவர்களைத் தொடர்ந்து வந்தார். மகாராணா பிரதாப்சிங்கின் சகோதரரான சக்திசிங் மொகலாயர் பக்கம் சேர்ந்து இருந்தாலும் சகோதரபாசம், மகாராணா பிரதாப்சிங்கைப் பார்த்ததும் அவருக்கு பீரிட்டது. மகாராணா பிரதாப்சிங்கை நோக்கி துருக்கிய வீரர்கள் வாட்களை தூக்கிய நேரத்தில் சக்திசிங் அங்கு வந்தார். அவர்களை நோக்கி “முதலில் என்வாளுக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். தனது வாளினால் அந்த துருக்கிய வீரர்களை எதிர்கொண்ட சக்திசிங், சற்று நேரத்தில் அவர்கள் இருவரையும் லிங்கேசுவரனிடம் அனுப்பினார். மனமுடைந்து இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாராணா பிரதாப்சிங், தனது தம்பியை கட்டித்தழுவினார். சக்திசிங் கதறி அழுதார். தான் எதிரிபக்கம் சேர்ந்ததற்கு மன்னிப்பு கோரினார். யார் கேட்டாலும் அதை கொடுக்கும் மகாராணா பிரதாப்சிங், அவன் கேட்டதையும் கொடுத்தார். சக்திசிங் தனது புரவியைக் கொடுத்தார். ராணா ஆரவல்லி மலைத் தொடருக்கு பின்னால் அவன் கொடுத்த புரவியில் விரைந்து சென்றார். நாம், மகாராஜா ராணாவை சற்று நேரம் தனிமையில் விட்டுவிட்டு, நமது கதாநாயகன் விக்கிரமனைத் தொடர்வோம். ஹல்டிகாடி யுத்தத்தில் அவன் ஆற்றிய பங்கைப் பார்த்தோம். தான் பிறந்த மேவாருக்கும், மகாராஜாவுக்கும் பெருமை தேடித்தரும் விதமாக அவன் செய்கைகள் அமைந்ததையும் பார்த்தோம். ராஜபுத்திரர்களின் யுத்தம் நேருக்கு நேராக இருக்கும் அது தவிர யுத்தநியாயாங்களை அவர்கள் என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. ஆனால் விக்கிரமனை எதிர்த்த துருக்கியவீரன் ஒருவன் அவனைப் பின்புறமாக வாளால் தாக்கினான். இதைச் சற்றும் எதிர் பார்க்காத விக்கிரமன் அப்படியே விழுந்தான். அவன்மேல் மற்ற ஒரு ராஜபுத்திரவீரனும் விழ, யுத்தத்தின் வேகத்தில் யாருக்கும் எதையும் கவனிக்க நேரமில்லை. மகாராணா பிரதாப்சிங் புரவியில் மறைந்ததும், யுத்தவேகம் குறைந்தது. மொகாலாயப்படையை தலைமை ஏற்று வந்த மான்சிங், மகாராணா பிரதாப்சிங் இறந்ததாக நினைத்து, தான் வெற்றி பெற்றதாக அறிவித்தான். பிறகுதான் மகாராணா பிரதாப்சிங்கின் வேடத்தில் இருந்தது சர்தார்சிங் என்றும் புரிந்தது. மகாராணா பிரதாப்சிங் தப்பியதையும் ஆரவல்லி குன்றுகளுக்குள் அவர் மறைந்து கொண்டதையும் அறிந்து கொண்டான். மகாராணா பிரதாப்சிங்கை கண்டுபிடிப்பது கடினம் என்றும் புரிந்து கொண்டான். மொகாலயா வீரர்கள் அதிகளவில் மடிந்தது அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. அவன் மகிழ்வுவெல்லாம் வடிந்தது. வேறு வழியில்லாமல் தில்லி திரும்ப உத்தரவிட்டான். எஞ்சிய மொகலாயப் படை திரும்பியது.
Popular Categories



