திருவள்ளுவர் திருநாட் கழகம்:
தமிழ் மொழியின் முதல் கவிஞரான திருவள்ளுருவருக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் 03-03-2018 அன்று குருபூஜை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாசி மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பரிபூரணமடைந்த நாளில் நடைபெறும் இந்த குருபூஜையில், ஏராளமான தமிழ் அன்பர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், “அகில இந்திய வானொலியில் தமிழ்க் கவிஞர்களைப் பற்றி ஹிந்தியில் கூறும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. அதில், நான் பேசும்போது திருவள்ளுவரை விஸ்வகவி (உலகக் கவி) என்றும், பாரதியாரை ராஷ்ட்ர கவி (தேசியக் கவி) என்றும் குறிப்பிட்டேன். திருவள்ளுவரைப் பற்றி உண்மையான அக்கறையுடன் ஒரு தமிழிறிஞர்கள் குழு வரலாற்றைக் கண்டறிய வேண்டும்’’ என்றார்.
அடுத்து பேசிய மூத்த தமிழறிஞர் வைத்தியலிங்கம், “குமரியில் வாழும் குறிப்பிட்ட இனத்தினர் இன்றும் கூட திருவள்ளுவரை தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர் திருவள்ளுவர் தங்களை ஆட்சி புரிந்த குறுநில மன்னர் என்று கூறுகிறார்கள். அதுபோல, மன்னர்களுக்கு ஆலோசனை கூறும் குழுவின் தலைவரை வள்ளுவர் என்பார்களாம். மன்னர்களுக்கு ஜோதிட யோசனைகளைக் கூறுதல், மன்னர்கள் வலம் வருவதற்கு முன்னால் யானைகளில் அறிவிப்பு செய்தல் போன்ற வேலைகளை அவர்கள் செய்ததாகக் குறிப்புகள் உண்டு. இதுபோன்ற தகவல்களின் மூலம் அவரைப் பற்றிய வரலாற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்றார்.
அடுத்து பேசிய திருவள்ளுவர் திருநாட் கழகத் தலைவர் சாமி. தியாகராஜன், “திருக்குறளைப் பற்றி தெரிந்த அளவுக்கு பலருக்கு திருவள்ளுவரைப் பற்றி தெரியவில்லை. அவரைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், அவர் பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது, அவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
மேலும், ஒரு அதிகாரத்தில் தென் கேரளத்தில் நம்பூதிரிகள் பயன்படுத்திய வழக்கத்தைக் குறிப்பிடுகிறார். (அது தற்போது வழக்கத்தில் இல்லை). இதைப் பற்றி தேவநேய பாவாணர் குறிப்பிடும்போது, ‘திருவள்ளுவர் குமரியில் பிறந்து, மயிலாப்பூரில் வசித்திருக்கலாம்’ என்கிறார்.
திருவள்ளுவர் வைகாசி அனுஷத்தில் பிறந்து, மாசி உத்திரத்தில் பரிபூரணத்துவம் அடைந்ததாக பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இதை திரு வி.க., உ.வே.சா. போன்ற தமிழறிஞர்களும் வழிமொழிகின்றனர்.
தென்காசி திருக்குறள் கழகம் கடந்த 95 ஆண்டுகளாக வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் பிறந்த தினமாக அனுசரித்து வருகிறது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் மனம் போன வழியில் திருவள்ளுவர் தினத்தை மாற்றினார்கள்.
இந்த இடத்தில் சிலையைத் தோண்டியெடுத்தபோது, நானூறு ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டது. அதற்கு முன்னதாகவே, இங்கு கோயில் இருந்திருக்க வேண்டும்” என்றார்.
சிவாலயா பதிப்பகத்தின் மோகன் பேசுகையில், “இந்த ஆண்டு இந்த அளவுக்கு அன்பர்கள் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த ஆண்டு ஒவ்வொருவரும் பத்து நபர்களை அழைத்து வந்து இந்த இடம் நிரம்பி வழிய வேண்டும். அதற்கடுத்த ஆண்டு திருவள்ளுவர் சிலையை உற்சவமாகக் கொண்டு வருமளவுக்கு பெருக வேண்டும்’’ என்றார்.
வாசுகி கண்ணப்பன் பேசுகையில், “திருவள்ளுவர் வரலாற்றை ஏற்கெனவே பலர் குழப்பத்துடன் அணுகுகின்றனர். அப்படியில்லாமல், சரியான ஆராய்ச்சியாளர்களின் துணையுடன் ஆதாரத்துடன் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்’’ என்றார்.
இறுதியாக மீண்டும் பேசிய சாமி தியாகராஜன், “வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் பிறந்ததினம் என்றும் அறிவிக்கும் உத்தரவை (ஜி.ஓ) கொண்டு வர வேண்டும் என்ற முந்தைய ஆட்சி காலத்திலிருந்தே அமைச்சர்களை அணுகி வருகிறோம். இது சம்மந்தமாக தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் ஆலோசித்து வருகிறோம்’’ என்றார்.
முன்னதாக, திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தகவல் : அனந்த பாலகிருஷ்ண ஷர்மா