குழந்தைகள் குறும்பு – இந்தத் தலைப்பில் மஞ்சரி முதல் இதழ் தொடங்கி சில காலத்துக்கு, குழந்தைகள் செய்த குறும்புத்தனங்களை வாசகர்கள் எழுதியனுப்ப, அதைப் பிரசுரம் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே வாசகர்கள் பங்கேற்ற நல்ல பகுதி இது.
மஞ்சரி (1947-48) முதல் வருடத் தொகுதியில் இடம்பெற்ற அந்தப் பகுதியிலிருந்து…
***
தாய்: கண்ணு, எந்த மாம்பழம் உனக்கு? எது அப்பாவுக்கு?
கண்ணன்: பெரிய பழம் எனக்கு. சின்னது அப்பாவுக்கு.
தாய்: பெரியவர்களுக்கு மரியாதை காட்ட வேண்டாமா? நீ ஏன் சின்னதை எடுத்துக் கொள்ளக் கூடாது?
கண்ணன்: பெரியவர்களுக்கு மரியாதை காட்டுவதற்காக, நான் பொய் சொல்லலாமா அம்மா!
***
இந்த வீட்டிலே ஒரு நிமிஷமாவது நிம்மதி கிடையாது என்று அலுத்துக் கொண்டே கூடத்துக்கு ஓடினாள் தாய். கூடத்திலே தொட்டில் குழந்தையை ஆட்டிக் கொண்டிருந்த சிறுவனின் கூச்சலைக் கேட்டே அவள் இப்படி ஓடினாள்.
அம்மா! தம்பி என் மயிரைப் பிடிச்சு இழுக்கிறான் என்று புகார் சொன்னான் சிறுவன்.
ஏண்டா, அது சின்னக் குழந்தைதானே! மயிரைப் பிடிச்சு இழுத்தால் வலிக்கும்னு தம்பிக்குத் தெரியாது என்று சமாதானம் சொல்லிவிட்டுத் தாய் உள்ளே போனாள்.
அடுத்த நிமிஷமே மறுபடியும் கூடத்திலேயிருந்து கூச்சல் வந்தது. தாய் மீண்டும் ஓடினாள்.
பேசத் தெரியாத தொட்டில் குழந்தை இந்தத் தடவை கத்திக் கொண்டிருந்தது. ஏண்டா தம்பி கத்தறது? என்று தாய் சிறுவனைக் கேட்டாள்.
ஒண்ணுமில்லே, அம்மா. தம்பிக்கு வலி தெரிஞ்சு போச்சு. நான் தெரியப் பண்ணிவிட்டேன் என்றான் சிறுவன்.
***
நான் உன் வயசில்பொய்யே சொன்னதில்லையடா! என்று தன் ஆறு வயது மகன் மணியைப் பார்த்துக் கோபித்துக் கொண்டார் தந்தை சந்திரசேகர்.
பையன் வெகு ஆவலோடு, அப்ப நீங்க எத்தனை வயசிலே அதைச் சொல்ல ஆரம்பிச்சகள், அப்பா? என்று கேட்டான்.




