திரும்பிப் பார்க்காதே
துளைத்து நோக்காதே
கரிசனம் காட்டி என்னை
சங்கடப்படுத்தாதே
நினைத்ததை பேசவிடு
நிம்மதியாய் வாழவிடு
பெண்ணாய் மனைவியாய்
தாயாய் மட்டுமன்றி பொறுப்புள்ள பணியும் செய்யும் எனக்கு
காதல் தவிர்த்து
வேறு இரசனை, வேலை உண்டு
உடலெனும் கூட்டிற்குள்
அடைத்தே காணாதே
பதின் பருவத்தில் பயந்தது போதாதென
பிறந்த சிசு முதல் முதுமை எய்திய பின்னும் துரத்திக் கொல்லாதே
இலக்கணம் வகுக்காதே
இலக்கியம் சொல்லி
எல்லை ரேகைகள் வரையாதே
அழகைப் புகழாதே
ஆடை தளர்ந்திருந்தால்
இருந்துவிட்டுப் போகட்டும்
உற்றுப்பார்க்காதே
உணர்த்திப்போகாதே
பெண் எந்தன் பாதி என
வசனம் பேசாதே- உதவி ஏதும்
செய்தே ஆகவேண்டும் என்றால்
என்னை நானாய் வாழவிடு
இரு கைகூப்பி தொழுதிடுவேன்.
இயல்பாய் இருக்கவிடு..
அகிலா ஜ்வாலா



