
பழநி அருகே டூவீலர் மீது பஸ் மோதி தம்பதி உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சுக்கு தீ வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பழநி அருகே சிந்தலவாடம்பட்டியை சேர்ந்த விவசாயி துக்கையப்பன். 42 வயதான . இவர் தனது மனைவி விஜயலட்சுமி (35), மாமியார் அங்காத்தாள் (70) ஆகியோருடன் நேற்று ஒரு துக்க வீட்டிற்கு சென்றார். மூவரும் ஒரே டூவீலரில் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுப்பாதை பிரிவு அருகே வரும் போது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் மீது மோதியது.இதில் துக்கையப்பன், விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த அங்காத்தாள் ஆபத்தான நிலையில் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். போக்குவரத்து அடியோடு முடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.