வர வர.. தங்கக் கடத்தல் அதிகமாகுதா? இல்லே… நெறய்ய பிடிபடுதா!?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல் வணிகம்
Trichy airport Gold smuggling police inquiry - 2026

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 30 ஆயிரத்தில் அங்கும் இங்குமாக இருக்கும் நிலையில், வர வர கடத்தல் தங்கம் விமான நிலையங்களில் அதிகம் பிடிபடுவதாகக் கூறப் படுகிறது.

கடத்தல் அதிகமாகவே இருக்கிறதா அல்லது பிடிபடுகிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் செய்திகளைப் பார்க்கும் சாமானிய மக்கள். நேற்று ஒரே நாளில் ஷார்ஜா மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்!

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரம் சுந்தரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த அன்வர் கான் (29), திருச்சியை சேர்ந்த 35 வயதான செய்யது அபுதாகிர் ஆகியோர் தங்கள் ஆசனவாய் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது!

அவர்களிடம் தங்க கட்டிகள் ஆகவும் செயின் வடிவிலும் 45.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1.18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அன்வர் கானிடம் மட்டும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இந்நிலையில் அவரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்!

இது போல நேற்று காலை துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது! இதையடுத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் முகமது ஆரிப், நாகூர் மீரான், முகமது உசேன், சர்புதீன் ஆகிய பயணிகளிடம் இருந்து 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்தனர். கடந்த 2ஆம் தேதி ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணிகள் இருவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த 23 வயதான ஜியா உல் ஹக் மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் சேர்ந்த 23 வயதான அமீர் சோகை என்பது தெரியவந்தது!

இருவரும் பற் பசை பேஸ்ட், ஜீன்ஸ் பேண்ட், ஆசனவாய் உள்ளிட்ட பகுதிகளில் 1.81 கிலோ எடைகொண்ட தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அண்மைக்காலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரம் தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகள், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.