
சென்னை: ‘மகளிருக்கான இருசக்கர வாகன மானிய திட்டத்தில், அம்மா ஸ்கூட்டர் பெற, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில், 18 முதல், 40 வயது வரை உள்ள, இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள, தனி நபர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மகளிருக்கான, ‘அம்மா’ இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள், புதிதாக வாங்கும் மகளிருக்கான இருசக்கர வாகனத்தின் விலையில், 50 சதவீதம் அல்லது ரூ.25,000, இதில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு, 50 சதவீதம் அல்லது ரூ.31,250, இதில், எது குறைவோ, அந்த தொகை வழங்கப்படும்.வாகனம், வங்கிக் கடன் வாயிலாக வாங்கப்பட்டால் மானியத் தொகை பயனாளிகளின் வாகனக் கடன் கணக்கிற்கு வங்கி வாயிலாக விடுவிக்கப்படும்.
வாங்கப்படும் வாகனம், புதிய மாசு கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டதாகவும், மோட்டார் வாகன சட்டம், 1988ன்படி, போக்குவரத்து அலுவலரால் பதிவு செய்யப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.

மேலும், ‘கியர்லெஸ், ஆட்டோ கியர்’ வகையாகவும், ‘125 சிசி’ குதிரைத்திறன் சக்தி கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது, வயது, ஓட்டுனர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு, வாகனம் வாங்கிய ஆரம்ப நிலையிலேயே, மானியத் தொகை விடுவிக்கப்படும்.
பயன் பெற விரும்பும் பயனாளிகள், இன்று முதல், அந்தந்த மண்டல அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, விண்ணப்ப படிவங்களை பெற்று, உரிய சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் – என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் போது இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- ஒட்டுநர் உரிமம்/எல்.எல்.ஆர்,
- இனச் சான்றிதழ்
- கல்வி தகுதி சான்று
- பணிபுரிவதற்கான சான்று
- பணி புரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட ஊதியச் சான்று/ சுய தொழில் மூலம் பெறும் வருவாய்க்கான சுய அறிவிப்பு சான்று
- வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்
- பணிபுரியும் நிறுவனத்தி அடையாள அட்டை
- வாகனம் வாங்குவதற்கான விலை பட்டியல்
- வரிசை எண் 23இல் குறிப்பிட்ட முன்னுரிமை வகையினருக்கான சான்று