
மதுரை அருகே செல்லூரைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது பாட்டி வீடு சேடப்பட்டி காவல்துறை சரகத்துக்குட்பட்ட ஓனாம்பட்டியில் இருக்கிறது .
அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மந்தையம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை காண மாணவி பாட்டி வீட்டுக்கு சென்றார்.
அந்தவேளையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து மாணவி கோவிலுக்கு சென்று வருவதாக வெளியே சென்றார். அதற்கு பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் கோவிலுக்கு சென்று தேடினார்கள் .
அங்கு மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தது காணாமல் போன மாணவி என தெரியவந்தது.
அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவியை வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவி கோவிலுக்கு சென்றது முதல் அவர் காணாமல் சென்றது வரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து கொண்டு வருகிறார்கள்