
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி இரவு பகலாக 4-வது நாளாக நீடித்து வந்தது.
இந்நிலையில் சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை வீட்டில் டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரின் 2 வயது மகள், தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் அடுத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். மீன்பிடித் தொழில் செய்துவரும் இவரின் மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து தன் சிறுமியை இருவரும் தேடியுள்ளனர். அக்கம் பக்கத்து உறவினர் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், லிங்கேஸ்வரன், தனது வீட்டின் குளியலறையை திறந்து பார்த்துள்ளார். அங்கிருந்த தண்ணீர் டிரம்மிற்குள், தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் முச்சுப் பேச்சின்றி சிறுமி கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த லிங்கேஸ்வரனும் அவரின் மனைவி நிஷாவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கிச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை சஞ்சனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
குளியலறையில் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற சிறுமி, தண்ணீர் ஊற்றுவதற்காக தொட்டிக்குள் தண்ணீர் எடுக்க முயன்றபோது கால் தவறி தலைகுப்புற உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக, தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.