
அண்ணன் இறந்தது தெரியாமல் தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு இழுத்து சென்ற தங்கை.!
ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தவரை 4 கி.மீ., தள்ளுவண்டியில் கொண்டு சென்றும், பாதி வழியில் அவர் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இதற்கு எல்லைப் பிரச்னை காரணம் என்று கூறப் படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. இவர் தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கணவருடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் மல்லிகாவின் தங்கை பவுனு (60), கணவர் சுப்ரமணியத்துடன்(65) மல்லிகாவை சந்திக்க 3 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது சுப்பிரமணியத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சுப்ரமணியன் மயக்க நிலைக்கு சென்றதால், புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது.
இதனால், செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் மருத்துவ மனைக்கு அவரது தங்கை மூலம் அழைத்து செல்லப்பட்டார்.
சுத்துகேணியிலிருந்து சுமார் 4 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டேக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தள்ளுவண்டியிலேயே மல்லிகா இழுத்து சென்றுள்ளார். வழியில் அவர்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தோர் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது..



