
‘மண்டி’ ஆன்லைன் விளம்பரத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் ‘மண்டி’ என்ற மொபைல் ஆப் ஒன்றினை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது.
விவசாயம், வியாபாரம் என்றெல்லாம் பேசும் விஜய் சேதுபதி, உள்ளூர் வியாபாரிகளின் நலனைக் கெடுக்கும் இது போன்ற விளம்பரங்களில் நடித்து இரட்டை வேடம் போடுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய வணிகர் சங்கங்கள், விஜய் சேதுபதியின் இது போன்ற செயல்களால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
விஜய் சேதுபதியைக் கண்டித்து வணிக அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி இன்று வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் திரண்ட வியாபாரிகள் விஜய் சேதுபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்று முழக்கமிட்டனர்.

அப்போது, அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து கூறிய வணிகர்கள், ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பரத்தில் நடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விஜய் சேதுபதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த விளம்பரத்தில் இருந்து விலகும்வரை தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடை பெறும். மத்திய-மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 21 லட்சம் வணிக குடும்பங்கள், தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிப்படையும்…. என்றனர்.



