அடைச்சாணி கிராமத்தினர் தென்காசியுடன் இணைய மறுத்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் புதிதாக தொடங்கியபோது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்த ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்தை தென்காசி மாவட்டத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்திற்குள்பட்ட இடைகால், பள்ளகால், பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம், அடைச்சாணி உள்ளிட்ட கிராமத்தினர் தென்காசி மாவட்டத்தில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அடைச்சாணி கிராமம் தவிர பிற கிராமங்களை அம்பாசமுத்திரம் வட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் சேர்த்து அரசு அறிவித்தது.
அடைச்சாணி கிராமம் மீண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பெண்கள், ஆண்கள் பணிக்குச் செல்லவில்லை, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மீண்டும் அம்பாசமுத்திரம் வட்டத்தில் சேர்க்கப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.