சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கீழ்த்தரமான வகையில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
சவப்பெட்டியில் ஜெ. உருவ பொம்மை வைத்து ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வரும் பிரசாரத்தைக் கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் என்பது பல வகைகளிலும் கீழ் மட்டத்திற்கு இறங்கிவிட்டது. டிடிவி தினகரன் தரப்பு பணத்தை அள்ளி வீசுவதாக புகார்கள் வரும் நிலையில், ஓ.பி.எஸ் தரப்போ இன்னொரு வகையில் கீழே போய்விட்டது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தையே அடிப்படையாக கொண்டு பிரசாரம் செய்து வருகிறது ஓ.பி.எஸ் அணி. அதன் ஒரு கட்டமாக, ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப் பட்டிருந்ததோ அதேபோல சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின் முன்னால் வைத்துக்கொண்டு தெரு, தெருவாக போய் வாக்கு கேட்கிறது ஓ.பி.எஸ் அணி.
அந்தத் தொகுதியில் உள்ள பாரதி நகரில் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தலைமையில் அழகு தமிழ்செல்வி, அந்தத் தொகுதியில் ஓ.பி.எஸ். அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தைத் துவங்கினார். அப்போது, நின்று கொண்டிருந்த ஜீப்பின் முன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சடலம் போன்ற ஒரு பொம்மை வைக்கப்பட்டது.
சென்டிமென்டாக ஆர்.கே.நகர் மக்கள் மனதை வெல்ல வேண்டும் என்பதற்காக இவ்வளவு கீழ் மட்டத்திற்கு அரசியல் நாகரீகத்தை ஓ.பி.எஸ் அணி கொண்டு சென்றுள்ளது நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் சவப்பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த நூதன பிரசாரத்திற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சவப்பெட்டி பிரசாரத்தை ஓபிஎஸ் அணியினர் நிறுத்தியுள்ளனர். தற்போது ஜெயலலிதா உருவபொம்மை உள்ள சவப்பெட்டி ஆர்.கே.நகரில் உள்ள ஓபிஎஸ் அணியினரின் தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் அணியினர் மீதும், பணத்தை வைத்து அரசியல் செய்வதாக சசிகலா அணியினர் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டிவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



