
அவினாசிஅருகே நடந்த கார் விபத்தில் தாயாருடன், செய்தியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் செய்தியாளராகப் பணிபுரிந்த ராஜசேகரன்(32) இன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திருப்பூரை சேர்ந்த ராஜசேகரனுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். முதல் பிரசவம் என்பதால் மனைவிக்கு வளைகாப்பு நடத்துவதில் ஆர்வத்துடன் இருந்தார். இதற்காக பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு கொடுத்து அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இன்று காலை அவர், தனது தாயார் ஜமுனாராணி(53) மற்றும் சகோதரி, அவரது குழந்தை ஆகியோருடன் காரில் மேட்டுப் பாளையத்துக்குச் சென்று உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்தார். பிறகு மதியம் இரண்டு மணி அளவில் அனைவரும் காரில் திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவினாசி போலீஸ் சரகம் அன்னூர் அருகே உள்ள நரியம்பள்ளி புதூர் என்ற இடத்தில் ஒரு வளைவில் கார் திரும்பியபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தாயார் ஜமுனாராணி பரிதாபமாக உயிரிழந்தார். செய்தியாளர் ராஜசேகரன், அவரது சகோதரி மற்றும் குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த மூவரும் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்தியாளர் ராஜசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். சகோதரி, மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட செய்தியாளர் ராஜசேகரன் விபத்தில் பலியான சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



