
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, போலீஸாரால் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி, சிபிசிஐடி போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர் தனது மனைவி உள்ளிட்ட நான்கு உறவினர்கள் குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து, சித்தாண்டி மீது, கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடினர். போலீசார் தேடுவதை அறிந்து, சித்தாண்டி குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதை அடுத்து தலைமறைவாக இருந்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்து, இன்று நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், அவரை சிவகங்கையில் வைத்து கைது செய்துள்ளதாக போலீசார் கூறினர்.