பத்திரிகையாளர்கள் – செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மீது அநாகரீக வார்த்தைகளில் அவதூறு செய்த திமுக அமைப்புச் செயலாளர் #ஆர்எஸ்பாரதி யின் வரம்புமீறிய பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம். #திமுக #DMK #RSBharathi தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையில்…
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது அமிலம் கக்கும் வார்த்தைகளை வீசுவதும் அவதூறு பேசுவதுமான அவலநிலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய , திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, வாய்க்கு வந்தபடி மிகக் கேவலமாக பத்திரிகையாளர்களையும் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களையும் தரக் குறைவாக பேசும் காணொலி சமுக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
திமுகவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ் பாரதி நிதானம் தவறி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
வார்த்தைகளில் வரம்பு மீறிய ஆர்.எஸ் பாரதி அவர்கள் தனது தரக்குறைவான பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் , இது போன்ற செயல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலிறுத்துகிறது.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதை எப்போதும் ஏற்கிறோம். விமர்சனங்களையும் ஏற்கிறோம். அதே நேரத்தில் தனிப்பட்ட தாக்குதல்களை, தரக்குறைவான அவதூறுகள் அநாகரீக பேச்சுக்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
இது போன்ற தரக்குறைவான பேச்சுக்களை பொதுவாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.